இன்றைய உலகில் நவீன ஊடகத் துறை அபரிமித வளர்ச்சி பெற்றுள்ளன. அவற்றில் சமூக ஊடகங்கள் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன. அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களை விடவும் மக்கள் மத்தியில் அதிக செல்வாக்கு பெற்றவையாக சமூக ஊடகங்கள் விளங்குகின்றன. இந்த நிலைமை மக்களின் அபிப்பிராயங்களிலும் நிலைப்பாடுகளிலும் தாக்கம் செலுத்த முடியும். இது தொடர்பில் பல மட்டங்களிலும் கவனம் செலுத்தப்படுகின்றன.
இன்றைய கால கட்டத்தில் ஏனைய ஊடகங்களை விடவும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை பெரிதும் அதிகரித்து காணப்படுகிறது. அதற்கு பல காரணங்கள் துணைபுரியக் கூடியனவாக அமைந்துள்ளன. அவற்றில் ‘அன்ட்ரொய்ட்’ கையடக்கத் தொலைபேசிப் பாவனை பாரிய பங்களிப்பை நல்கி உள்ளது.
கையடக்கத் தொலைபேசி பாவனையில் ஏற்பட்டுள்ள அபரிமித வளர்ச்சி சமூக ஊடகங்கள் மக்கள் மத்தியில் செல்வாக்கு செலுத்துவதற்கு பக்க துணையாக அமைந்துள்ளன. இந்த ஊடகங்களின் பாவனையில் அதிகரிப்பு ஏற்பட இது பெரிதும் உதவியுள்ளது. இந்த நிலைமையை இலங்கையில் மாத்திரமல்லாமல் உலகின் பல நாடுகளிலும் பரவலாக அவதானிக்க முடிகிறது.
அதனால் சமூக ஊடகங்களது பயன்பாட்டில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு, அதன் விளைவாக ஏற்படுகின்ற தாக்கங்கள், பாதிப்புக்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்படுகின்றன. ஏனெனில் சமூக ஊடகங்கள் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றுள்ள அளவுக்கு அதில் பரப்பப்படுகின்ற தகவல்கள், செய்திகளின் உண்மைத்தன்மையில் பலவீனங்களும் தவறுகளும் நிறைந்து காணப்படுகின்றன. அதனால் அந்த ஊடகங்களில் வெளியாகும் தகவல்களை உத்தியோகபூர்வமானவையாக ஏற்றுக்கொள்ளப்படும் நிலை உலகில் இன்னும் ஏற்படவில்லை என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும்.
ஆனால் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் எந்தவொரு தகவலும் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டவையாகவே வெளியிடப்படும். அத்தோடு ஊடக தர்மத்தையும் நெறிமுறைகளையும் பேணியவையாகவே அந்தத் தகவல்களும் தரவுகளும் அமைந்திருக்கும். ஆனால் சமூக ஊடகங்களில் வெளியாகும் தகவல்களில் இத்தகைய உறுதிப்பாடுகளைப் பெரும்பாலும் எதிர்பார்க்க முடியாது.
ஏனெனில் ‘அன்ரொய்ட்’ கையடக்கத் தொலைபேசி கிடைத்து விட்டால் தாமொரு கையடக்க தொலைபேசி ஊடகவியலாளர் எனக்கருதும் நிலைமை பெரிதும் வளர்ச்சி பெற்றுள்ளது. அதனால் பெரும்பாலானவர்கள் சமூக ஊடகப் பாவனையாளராக விளங்குகின்றனர். ஆனால் அவர்கள் ஊடக நெறிமுறைகள், ஒழுங்குவிதிகள் குறித்து கவனம் செலுத்துவதுமில்லை. அது தொடர்பான அறிவு குறித்து அக்கறை செலுத்துபவர்களாகவும் அவர்கள் இல்லை. தங்களுக்கு கிடைக்கும் தகவல்களை பரப்புவதற்கும் தாங்களாக தகவல்களை உருவாக்கி பதிவிடுவதற்கும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இதன் போது உண்மை, பொய், திரிபு எதுவும் பகுப்பாய்வு செய்யப்படுவதில்லை. அதனால் இது தொடர்பில் அடிக்கடி குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படுகின்றன. இப்பின்புலத்தில் சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்தவென உலகின் சில நாடுகள் சட்ட ஏற்பாடுகளையும் அறிமுகப்படுத்தியுள்ளன.
இவ்வாறு சமூக ஊடகங்கள் தொடர்பில் பலவிதமான குறைபாடுகளும் பலவீனங்களும் காணப்படும் சூழலில் அவற்றில் வெளியாகும் தகவல்கள், செய்திகளை உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொள்ளக்கூடிய நிலை உலகில் எங்குமே இன்னும் ஏற்படவில்லை.
இந்நிலையில், இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவிருக்கும் சூழலில் தேர்தல் நடவடிக்கைகளுக்காக சமூக ஊடகங்களின் பயன்பாடு பெரிதும் அதிகரித்துக் காணப்படுகிறது. அதாவது தேர்தல் பிரசாரத்திற்காக மாத்திமல்லாமல் அபேட்சர்கள் பெறும் வாக்குகள் குறித்த கணிப்பீடுகளும் அவற்றில் வெளியிடப்படுகின்றன. ஆனால் சமூக ஊடகங்களில் பதிவிடப்படும் ஏனைய தகவல்கள், தரவுகளைப் போன்று தேர்தல் கணிப்பீடுகளும் புள்ளிவிபரங்களும் உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ள முடியாதவை. அது தான் துறைசார் நிபுணர்களின் கருத்தாகும். இவ்வாறான சூழலில் ஜனாதிபதித் தேர்தலில் அபேட்சகர்கள் பெறும் வாக்குகள் உள்ளிட்ட அது தொடர்பிலான கணிப்பீடுகள், தரவுகளை வெளியிட வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ள தேர்தல்கள் செயலகம், சமூக ஊடகப் பாவனையாளர்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இந்த ஊடகங்கள் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்று இருந்தாலும் அவற்றில் வெளியாகும் தகவல்கள், செய்திகளில் காணப்படும் பலவீனங்களும் உண்மைத்தன்மை இன்மையுமே இதற்கான காரணமாகும்.
ஆகவே சமூக ஊடகங்களின் தவறானதும் பலவீனமானதுமான தரவுகளும் தகவல்களும் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற இடமளிக்கலாகாது. அதன் ஊடாக குளறுபடிகளையும் முறைகேடுகளையும் தவிர்த்துக் கொள்ள முடியும்.