சர்வதேச ஊடகவியலாளர் சம்மேளனத்தின் (IFJ)வழிகாட்டலின் கீழ், ஊடகத்துறை ஊழியர் தொழிற்சங்கங்களின் சம்மேளனம் (FMETU) நாடளாவிய ரீதியில் முன்னெடுத்த ஆய்வு அறிக்கையானது, லேக் ஹவுஸ் நிறுவனத்தின் தலைவர் கலாநிதி ஹரேந்திர காரியவசத்திடம் கையளிக்கப்பட்டது.
இந்த அறிக்கையை இன்றையதினம் (10) FMETU பொதுச் செயலாளர் தர்மசிறி லங்காபேலி கையளித்திருந்தார். இந்நிகழ்வில் தினகரன் இணையத்தள ஆசிரியரும் FMETU அமைப்பின் பொருளாளருமான றிஸ்வான் சேகு முஹைதீனும் கலந்து கொண்டிருந்தார்.
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆய்வில், ஊடகவியலாளர்கள், ஊடக நிறுவனங்களின் தலைவர்கள், ஊடகத்துறையில் ஆர்வமுள்ள புத்திஜீவிகள் ஆகியோர் பங்களித்திருந்தமை விசேட அம்சமாகும்.
தேசிய ஊடக மேம்பாட்டுக் கொள்கை மற்றும் ஊடகவியலாளர்களின் தொழில்சார் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை நிறுவும் நோக்கத்துடன், ஊடகவியலாளர்களும், ஊடக நிறுவனங்களும் அதன் தலைவர்களும், சிவில் சமூகமும் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் இந்த ஆய்வு அறிக்கை இடம்பெற்றுள்ளது.
அத்துடன் ஊடகத்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்களுக்கான முன்மொழிவுகள் போன்றவை உள்ளடக்கப்பட்ட இந்த அறிக்கை தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையை ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடமும் கையளிப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, லங்காபேலி இதன்போது தெரிவித்திருந்தார்.