15 இலட்சத்திற்கும் அதிகமான பெறுமதியுடைய மரங்கள் இன்று (10) கைப்பற்றப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா, மகாறம்பைக்குளம், 2ஆம் ஒழுங்கை பகுதியில் சட்டவிரோதமாக வெட்டப்பட்டிருந்த ஒரு தொகை மரங்கள் இருப்பதாக வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், வவுனியா பிரதிபொலிஸ் மா அதிபர் சாமந்த விஜயசேகர ஆலோசனையில் வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மாலின் அஜந்த பெரேராவின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் அழகியவண்ண தலைமையில் பொலிஸார் துரித நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது, மகாறம்பைக்குளம் பகுதியில் உள்ள மரக்காலை ஒன்றை சோதனை செய்த போது அங்கு சட்டவிரோதமாக வெட்டப்பட்டு கொண்டுவரப்பட்ட 15 இலட்சத்திற்கும் மேற்பட்ட பெறுமதியுடைய மரங்கள் மீட்கப்பட்டன.
அத்துடன், மரக்காலை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
வவுனியா விசேட நிருபர்