Thursday, October 10, 2024
Home » மஹாபொல மற்றும் மாணவர் உதவித்தொகைகளை அதிகரிக்க தீர்மானம்

மஹாபொல மற்றும் மாணவர் உதவித்தொகைகளை அதிகரிக்க தீர்மானம்

- அக்ரஹார மருத்துவக் காப்புறுதி பயன்களை அதிகரித்தல்

by Prashahini
September 10, 2024 2:59 pm 0 comment

– இறக்குமதி பொருட்களுக்கான வரியைத் திருத்தம் செய்தல்
– இவ்வார அமைச்சரவை கூட்டத்தில் 17 முடிவுகள்

பல்கலைக்கழக மாணவர்களின் மஹாபொல மற்றும் மாணவர் உதவித்தொகைகளை அதிகரிப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நேற்று (09) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் 17 தீர்மானங்களுக்கு இவ்வாறு அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது

பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் மஹாபொல மற்றும் மாணவர் உதவித்தொகை தவணைக் கட்டணங்கள் 2015 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை அதிகரிக்கப்படவில்லை. குறித்த தவணைக்கட்டணத்தை திருத்தம் செய்வதற்கான தேவையை கல்வி அமைச்சர் மற்றும் வணிக, வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் இணைந்து சமர்ப்பித்த யோசனையை அமைச்சரவை கவனத்தில் எடுத்திருந்தது. குறித்த யோசனையைக் கருத்தில் கொண்டு, மஹாபொல புலமைப்பரிசில் தவணைக்கட்டணத்தை 7,500/= ரூபா வரைக்கும், மாணவர் உதவித்தொகை தவணைக்கட்டணத்தை 6,500/= ரூபா வரைக்கும் 2025 ஏப்ரல் மாதத்திலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2. மகாவலி நீர்ப் பாதுகாப்பு முதலீட்டு வேலைத்திட்டத்திற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிலிருந்து நிதியைப் பெற்றுக்கொள்ளல்
2015ஆம் ஆண்டு தொடக்கம் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பல படிமுறை நிதியிடல் வசதியின் கீழ் மகாவலி நீர்ப் பாதுகாப்பு முதலீட்டு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதுடன், குறித்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் முக்கிய 03 கருத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இவ்வேலைத்திட்டத்தின் ஆரம்ப மதிப்பீட்டுச் செலவு 675 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆவதுடன் அவற்றில் 453 மில்லியன் டொலர்களை வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி உடன்பாடு தெரிவித்துள்ளது. அதன் முதலாவது தவணைக்கட்டணம் 2015 ஆம் ஆண்டிலும், இரண்டாவது தவணைக்கட்டணம் 2017 ஆம் ஆண்டிலும் வழங்கப்பட்டுள்ளது.

எஞ்சிய கடன்தொகையில் 93 மில்லியன் டொலர்களை பெற்றுக்கொள்வதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ளதுடன், குறித்த கடன் ஒப்பந்தத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளது. அதற்கமைய, ஆசிய அபிவிருத்தி வங்கியின் பொது மூலதன வளங்களிலிருந்து 93 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொள்வதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் கடன் ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காகநிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

3. நீர்வழங்கல் மற்றும் சுகாதாரநல மீள்கட்டமைப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடன் தொகையை பெற்றுக்கொள்ளல்
இலங்கை அரசு நீர்வழங்கல் மற்றும் சுகாதாரநல மீள்கட்டமைப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் வசதிகள் 02 இனை ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்வேலைத்திட்டத்தின் கீழ் 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வீதம் 02 உபவேலைத்திட்டங்களை அமுல்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அதன் முதலாவது வேலைத்திட்டமான“நீர்வழங்கல் நடவடிக்கைகளில் காலநிலை தாங்குதிறன், அனைத்து தரப்பினர்களையும் உள்வாங்கல், சுற்றாடல் பேண்தகு நிலைமையை வலுப்படுத்தல்” அதற்காக 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன்தொகையைப் பெற்றுக்கொள்வதற்காக பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ளது. அதற்கமையநிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

4. இலங்கையிலிருந்து சீனாவுக்கு கோதுமைத் தவிடுத் துகள்கள் (Wheat Bran Pellets) ஏற்றுமதி செய்தல் தொடர்பான நடவடிக்கைமுறைக் குறிப்புக்கான (Protocol) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுதல்
கோதுமைத் தயாரிப்பின் போது எமது நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் கோதுமை விதைகளில் 20% வீதமானவை தவிடாக அகற்றப்படுகின்றது. இவ்வாறு நீக்கப்படும் தவிடு, தவிட்டுத் துகள்களாக சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் அதிகளவான வெளிநாட்டு செலாவணியை ஈட்டிக் கொள்வதற்கு இயலுமை கிடைக்கின்றது. அதற்காக, திட்டவட்டமான நடவடிக்கை முறையைக் கடைப்பிடிப்பதற்கு இருதரப்பினருக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை மேற்கொள்ள வேண்டிய தேவை அடையாளங் காணப்பட்டுள்ளது. வரைவாக்கம் செய்யப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு வெளிவிவகார அமைச்சு உடன்பாடு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை விவசாயம் மற்றும் பெருந்தோட்டத்துறை அமைச்சு மற்றும் சீனாவின் சுங்கப் பொது நிர்வாகத்திற்கும் இடையில் கையொப்பமிடுவதற்காக விவசாயம் மற்றும் பெருந்தோட்டத்துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

5. கலாசார வெளியீடுகளின் பன்மைத்துவத்தைப் பாதுகாப்பதற்கும் ஊக்குவிப்பதற்குமான யுனெஸ்கோ (2005) சமவாயத்தை இலங்கை ஏற்று அங்கீகரித்தல்
யுனெஸ்கோ நிறுவனம் அதன் உறுப்பு நாடுகளால் தயாரிக்கப்படுகின்ற கலாச்சார வெளியீடுகளின் பன்மைத்துவத்தைப் பாதுகாப்பதற்கும் ஊக்குவிப்பதற்குமான யுனெஸ்கோ சமவாயம் 2005 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுவரைக்கும் 156 நாடுகள் இச்சமவாயத்தை ஏற்றுக் கொண்டுள்ளதுடன், இலங்கை இதுவரைக்கும் குறித்த சமவாயத்தை ஏற்று அங்கீகரிக்கவில்லை. யுனெஸ்கோ சமவாயத்தை ஏற்று அங்கீகரிப்பதைக் கருத்தில் கொள்வதற்காக நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த குழுவின் விதந்துரைகளுக்கு வெளிவிவகார அமைச்சின் உடன்பாடும், சட்டமா அதிபரின் ஒப்புதலும் கிடைக்கப் பெற்றுள்ளது. அதற்கமைய, கலாச்சார வெளியீடுகளின் பன்மைத்துவத்தைப் பாதுகாப்பதற்கும் ஊக்குவிப்பதற்குமான யுனெஸ்கோ (2005) சமவாயத்தை ஏற்று அங்கீகரிப்பதற்காக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

6. வலுசக்தி துறைக்குப் புதிய ஒழுங்குபடுத்தல் நிறுவனமொன்றை அறிமுகப்படுத்தல்
இலங்கையில் பெற்றோலியம், திரவப் பெற்றோலிய வாயு (LPG), திரவ இயற்கை வாயு (LNG) மற்றும் உராய்வு எண்ணெய் போன்ற துறைகளை ஒழுங்குபடுத்துசதற்கான பொறிமுறையொன்றை நிறுவுதல் தொடர்பான விடயங்களை ஆராய்ந்து விதந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக குழுவொன்றை நியமிப்பதற்காக 2024.04.25 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, நியமிக்கப்பட்டுள்ள குழுவானது, வலுசக்தி துறையில் புதிய ஒழுங்குபடுத்தல் நிறுவனமொன்றை அறிமுகப்படுத்துவதற்காக விதந்துரைகளை முன்வைத்துள்ளது. குறித்த குழுவின் விதந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கும், பெற்றோலியத் தொழிற்றுறை ஒழுங்குபடுத்தலுக்கான சட்டமூலமொன்றைத் தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காகவும் வலுசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

7. இலங்கையின் மீன்பிடித் துறைமுகங்கள் கூட்டுத்தாபனத்தின் மூலம் முகாமை செய்யப்படும் மீன்பிடித் துறைமுகங்களின் படுகைகளில் (Basin) காணப்படும் மணலை அகற்றுவதற்காக கருத்திட்ட முன்மொழிவு
இலங்கையின் மீன்பிடித் துறைமுகங்கள் கூட்டுத்தாபனத்தால் நிர்வகிக்கப்பட்டு வரும் 22 மீன்பிடித் துறைமுகங்களில் மணலை அகற்றுவதற்கான விருப்பு மனுக்கோரல்களைப் பெற்றுக்கொள்வதற்காக 2024.02.05 அன்று இடம்பெற்ற அமை;சசரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தால் முகாமை செய்யப்படும் மீன்பிடித் துறைமுகங்களின் படுகைகளில் அகழ்வுச் சேவைகளை கட்டண அறவீடுகளின்றி மேற்கொள்வதற்கும், கிரிந்த, சிலாபம் மற்றும் வாழைச்சேனை போன்ற மீன்பிடித் துறைமுகங்களில் அகழ்வு செய்யப்பட்ட மூலப்பொருட்கள் வணிக ரீதியாகப் பயன்படுத்துவதற்கான கருத்திட்ட முன்;மொழிவுக்கான விருப்பு மனுக்கள் கோரப்பட்டுள்ளன.

அதற்கு 03 கம்பனிகள் முன்மொழிவுகளைச் சமர்ப்பித்துள்ளதுடன், தொழிநுட்ப மதிப்பீட்டுக் குழு மற்றும் பெறுகைக் குழுவின் விதந்துரைகளுக்கமைய கிரிந்த, சிலாபம் மற்றும் வாழைச்சேனை போன்ற மீன்பிடித் துறைமுகங்களில் கட்டண அறவீடுகளின்றி அகழ்வுகளை மேற்கொள்கின்ற ஒப்பந்தத்தை வரையறுக்கப்பட்ட சுப்ரீம் குளோபல் ஹோல்டிங்ஸ் (தனியார்) கம்பனிக்கு வழங்குவதற்காக கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

8. நடமாடும் இயந்திரோபகரணங்கள் தொடர்பிலான சர்வதேச நலன்கள் பற்றிய கேப்டவுண் சமவாயத்தின் (Convention on International interest in Mobile Equipment) சட்டமூலம்
நடமாடும் இயந்திரோபகரணங்கள் தொடர்பிலான சர்வதேச நலன்கள் பற்றிய கேப்டவுண் சமவாயம் மற்றும் விமான உபகரணங்களுக்கான விசேட விடயங்களுடன் தொடர்புடைய நடமாடும் இயந்திரோபகரணங்களுக்கான சர்வதேச நலன்கள் பற்றிய கேப்டவுண் சமவாயத்தின் நெறிமுறையை அணுகுவதற்குத் தேவையான சட்டபூர்வமான ஏற்பாடுகளை அறிமுகப்படுத்துவதற்காக 2023.01.02 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப் பெற்றுள்ளது. குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

9. நிதிசார் உறுதிப்பாட்டு நிதியத்தை (financial Stability Fund) தாபித்தல்
இலங்கை மத்திய வங்கியால் ஒழுங்குமுறைப்படுத்தப்படும் நிதி நிறுவனங்களின் இடர் முகாமைத்துவ வேலைச் சட்டகத்தின் கீழ் வங்கியின் தீர்மானிப்பு வழிமுறைச் சட்டகத்தைப் பலப்படுத்தல், அவசர முன்னுரிமைகளாக மேற்கொள்ள வேண்டிய பணியாக இலங்கை மத்திய வங்கியால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க வங்கித்தொழில் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 15 ஆம் பிரிவின் கீழ், தீர்மானிப்பு வழிமுறையின் நோக்கத்தை அடைவதற்காகவும், சட்டத்தின் ஏற்பாடுகளில் குறிப்பிடப்பட்டுள்ள தீர்மானிப்பு வழிமுறைகளை வினைத்திறனாக அமுல்படுத்தப்படுவதை உறுதிப்படுத்துவதற்காக நிதிசார் உறுதிப்பாட்டு நிதியம் தாபிக்கப்படல் வேண்டும்.

2023 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க வங்கித்தொழில் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 15(2) ஆம் பிரிவுக்கமைய, நிதிசார் உறுதிப்பாட்டு நிதியமாக மத்திய வங்கியின் வேறு சொத்துக்களிலிருந்தும், மற்றும் மத்திய வங்கியால் முகாமை செய்யப்படும் சொத்துக்களிலிருந்தும் தனிவேறாக முகாமை செய்யப்படல் வேண்டும். 2024.07.31 ஆகும் போது நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சால் வழங்கப்பட்டுள்ள ஆரம்ப நிதியொதுக்கீட்டைப் பயன்படுத்தி இலங்கை மத்திய வங்கி நிதிசார் உறுதிப்பாட்டு நிதியத்தைத் தாபித்தல் மற்றும் வினைத்திறனான தீர்மானிப்பு வழிமுறைச் சட்டகத்தை உறுதிப்படுத்துவதற்கான விரிவான வழிகாட்டல்களுடன் நிதிசார் உறுதிப்பாட்டு நிதியத்தை நடைமுறைப்படுத்தல், நிதித்துறையின் உறுதிப்பாடு மற்றும் மீள்கட்டமைப்பு வேலைத்திட்டத்தின் 2ஆவது உப வேலைத்திட்டத்தின் அளவுகோல் கொள்கை நடவடிக்கைகளாக உட்சேர்க்கப்பட்டுள்ளன. அதற்காக, ஆசிய அபிவிருத்தி வங்கியால் நிதியளிக்கப்படும் நிதித்துறையின் உறுதிப்பாடு மற்றும் மீள்கட்டமைப்பு வேலைத்திட்டத்தின் கிழ் 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை இவ்வாண்டில் பெற்றுக் கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

அதற்கமைய, நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சால் 1,000 மில்லியன் ரூபாய்கள் பெயர் குறித்துரைத்து வழங்கப்பட்டுள்ள நிதியில் நிதிசார் உறுதிப்பாட்டு நிதியத்தை தாபிப்பதற்கும், தற்போது நிலவுகின்ற நிதிசார் மட்டுப்பாடுகளுக்கமைய வருடாந்த வரவு செலவுத்திட்டத்தின் மூலம் நிதியொதுக்கீடு வழங்கப்பட்டு படிப்படியாக நிதியத்தைக் கட்டியெழுப்புவதற்கும் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10. பண்டங்கள் இறக்குமதியின் போது அறவிடப்படும் இறக்குமதி வரியைத் திருத்தம் செய்தல்
எமது நாட்டுக்கு பண்டங்கள் இறக்குமதி செய்யும் போது அறவிடப்படும் வரி வகைகளாவன, சுங்க இறக்குமதி வரி, செஸ் வரி, விசேட பண்டங்களுக்கான வரி மற்றும் துறைமுகங்கள் விமான நிலையங்கள் அபிவிருத்தி வரி தொடர்பிலான கொள்கை ரீதியாக அமுல்படுத்த வேண்டியதும், மற்றும் சமகாலத்தில் முன்வைக்கப்பட்டுள்ள உள்நாட்டு கைத்தொழில் மற்றும் வணிகத் துறையிலுள்ள தரப்பினர்களின் வேண்டுகோளுக்கிணங்க, கீழ்வரும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது :

• விசேட பண்டங்கள் வரிக்கிணங்க ஒருசில இறக்குமதிப் பண்டங்களைக் குறித்த வரியிலிருந்து விடுவித்து சுங்க இறக்குமதி வரி உள்ளிட்ட பொதுவான இறக்குமதி வரிக் கட்டமைப்பை உட்சேர்த்தல்
• கபிலச் சீனி இறக்குமதிக்கான வரியைத் திருத்தம் செய்தல்
• உள்நாட்டுக் கைத்தொழில்களை வலுப்படுத்தும் வகையில் கைத்தொழில் அமைச்சின் விதந்துரைகளுக்கமைய சுங்க இயைபுமுறைக் குறியீடு 225 இன் கீழுள்ள, பாதணிகள், பொதிகள், மின் உபகரணங்கள், ப்ளாஸ்ரிக் மற்றும் இறப்பர் கைத்தொழில்களுக்குத் தேவையான மூலப்பொருட்கள் மற்றும் நடுநிலைப் பொருட்கள் தொடர்பிலான இறக்குமதி வரியைத் திருத்தம் செய்தல்
• சிறுவர் மற்றும் வளர்ந்தோருக்கான சுகாதார உறிஞ்சுதுணிகள் (Diapers) மற்றும் அவற்றுக்கான மூலப்பொருட்கள் மீதான வரியைக் குறைத்தல்.
• இலங்கையில் ப்ளாஸ்ரிக் பாவனையைக் குறைப்பதற்காகவும், மீள்சுழற்சிக்கு ஏற்புடைய வகையிலான வரித் திருத்தங்களை அறிமுகப்படுத்தல்
• உள்நாட்டு துவிச்சக்கர வண்டிகள் மற்றும் உதிரிப்பாகங்கள் உற்பத்திக் தொழிற்றுறை, அச்சிடல் மற்றும் அச்சு நிறப்பூச்சுக்கள் தொழிற்றுறை, உள்நாட்டு சலவை இயந்திரம், லயிட்டர் உற்பத்தி தொழிற்றுறை மற்றும் சிறுவர்களுக்கான தைத்த ஆடைகள் இறக்குமதி தொடர்பிலான வரி ஏற்றத்தாழ்வுகளை நீக்குதல்.
• பனை மற்றும் பனம் பொருட்கள் உற்பத்திகளின் ஏற்றுமதியை ஊக்குவித்தல், மின்சாரத்தால் இயங்குகின்ற விளையாட்டுப் பொருட்கள் மற்றும் உள்நாட்டு மருந்து உற்பத்திகளுக்குப் பயன்படுத்தப்படும் திப்பிலியை தனிவேறாக அறிந்து கொள்வதற்காக புதிய தேசிய உபபிரிப்பு சுங்க குறியீட்டை அறிமுகப்படுத்துவதற்கும், உள்நாட்டு மருந்து உற்பத்திகளுக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களை இறக்குமதி செய்யும் போதான செஸ் வரி விடுவிப்புக்களில் காணப்படும் பொறிமுறைகளைத் தளர்த்துதல்.
மேற்குறிப்பிட்டவாறான வரித் திருத்தங்களை அமுல்படுத்துவதற்காக கீழ்வரும் படிமுறைகளை மேற்கொள்வதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
• 1962 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க உண்ணாட்டரசிறைப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கட்டளையொன்றை வெளியிட்டு, அதன்மூலம் சுங்க இறக்குமதி வரியை திருத்தம் செய்தல்
• 1970 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் செஸ் வரியைத் திருத்தம் செய்தல்
• 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட பண்டங்கள் வரிச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகளை வெளியிடல்.
• ஏற்புடைய வரித் திருத்தங்களுக்கு இணையாக 2011 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் அபிவிருத்தி வரிச் சட்டம் மற்றும் 1969 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.

11. 1969 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள 2024 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க கொடுப்பனவு முறைகளுக்கான இறக்குமதிக் கட்டுப்பாட்டு ஒழுங்குவிதிகளை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பித்தல் (கொழும்புத் துறைமுக நகரத்திற்கான திறந்த கணக்குக் கொடுப்பனவு முறையைப் பயன்படுத்தல்)
1969 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள 2024 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க கொடுப்பனவு முறைகளுக்கான இறக்குமதிக் கட்டுப்பாட்டு ஒழுங்குவிதிகள் 2024.08.21 ஆம் திகதிய 2398/18 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த ஒழுங்குவிதிகளை பாராளுமன்ற அங்கீகாரத்திற்கு சமர்ப்பிப்பதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

12. இலங்கையின் நிதித்துறை உறுதிப்பாடு மற்றும் மீள்கட்டமைப்பு வேலைத்திட்டத்திற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியில் கடன் வசதியைப் பெற்றுக்கொள்ளல்
இலங்கையின் நிதித்துறை உறுதிப்பாடு மற்றும் மீள்கட்டமைப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 02 உபவேலைத்திட்டங்களின் கீழ் 400 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட கடன் தொகையை ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து பெற்றுக்கொள்வதற்காக 2023.09.25 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய 2023 டிசம்பர் ஆகும்போது முதலாம் உபவேலைத்திட்டத்திற்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டுள்ளது. அதன் இரண்டாம்உபவேலைத்திட்டத்தின் கீழ் 200 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெற்றுக்கொள்வதற்காக முற்கூட்டிய 12 கொள்கைச் செயற்பாடுகளை பூர்த்திசெய்யப்பட வேண்டியுள்ளதுடன், தற்போது அச்செயற்பாடுகளில் அதிகமானவை பூர்த்திசெய்யப்பட்டோ அல்லது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.

அதற்கமைய ஆசிய அபிவிருத்தி வங்கியிடம்இலங்கையின் நிதிதுறையின் உறுதிப்பாடு மற்றும் மீள்கட்டமைப்பு வேலைத்திட்டத்தின் இரண்டாம்உபவேலைத்திட்டத்தின் கீழ் 200 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெற்றுக்கொள்வதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

13. உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கான தகவல் தொழிநுட்ப மூலோபாயத் திட்டம்
சர்வதேச நாணய நிதியத்தின் நீடித்த கடன் வசதிகள் வேலைத்திட்டத்தின் கீழ் கட்டமைப்பு ரீதியான அளவுகோலாக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தை டிஜிட்டல்மயப்படுத்துவதற்கு ஏதுவாக அமையும் தகவல் தொழிநுட்ப மூலோபாயத் திட்டமொன்று, உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தால் தயாரிக்கப்பட்டு 2024 ஆகஸ்ட் மாதம் இறுதிக்குள் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருப்பது அவசியமாகவுள்ளது. அதற்கிணங்க, 2025-2027 காலப்பகுதிக்கு தயாரிக்கப்பட்டுள்ள மூலோபாயத் திட்டத்தை அமுல்படுத்துவதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

14. புகையிரத நிலையங்களை அண்டியதாக அமைந்துள்ள கட்டடங்களை வணிக நிலையங்களாக அபிவிருத்தி செய்தல்
அரச – தனியார் பங்குடமை முறையின் கீழ் கொழும்புத் துறைமுகத்தை அண்டியதாக அமைந்துள்ள கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, வெள்ளவத்த, கொம்பனித்தெரு, தெஹிவல, மற்றும் கல்கிஸ்ஸ ஆகிய புகையிரத நிலையங்களை அபிவிருத்தி செய்வதற்க விருப்பம் தெரிவிக்கின்ற முதலீட்டாளர்களை அடையாளங் காண்பதற்காக விருப்புமனுக் கோரப்பட்டுள்ளது.

அதில், இலங்கையில் பல்வேறு இடங்களில் அமைந்துள்ள புகையிரத நிலையங்களை அபிவிருத்தி செய்வதற்கான விருப்புமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமையால், அரச-தனியார் பங்குடமை முறையின் கீழ் நாடளாவிய ரீதியில் ஏனைய புகையிரத நிலையங்களையும் அபிவிருத்தி செய்வதற்கான போட்டி அடிப்படையிலான முன்மொழிவுகளைப் பெற்றுக் கொண்டு தகைமையுடைய முதலீட்டாளர்களைத் தெரிவு செய்வதற்காக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

15. மோட்டார் வாகனப் போக்குவரத்துச் சட்டங்கள் மீறப்படும் சந்தர்ப்பங்களில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தாத குற்றங்களுக்கு அபராதத் தொகையை சேகரிக்கின்ற முறை மற்றும் சாரதிகளுக்கான புள்ளி வழங்கல் முறையை அமுல்படுத்துவதற்காக ஒருங்கிணைந்த இலத்திரனியல் தீர்வொன்றை அறிமுகப்படுத்தல்
மோட்டார் வாகனப் போக்குவரத்துச் சட்டங்கள் மீறப்படும் சந்தர்ப்பங்களில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தாத குற்றங்களுக்கு அபராதத் தொகையை சேரிக்கின்ற முறை மற்றும் சாரதிகளுக்கான புள்ளி வழங்கல் முறையை அமுல்படுத்துவதற்காக ஒருங்கிணைந்த இலத்திரனியல் தீர்வை அறிமுகப்படுத்துவதற்காக தகைமையுடைய விநியோகத்தரைத் தெரிவு செய்வதற்காக இரட்டைக் கடிதஉறை முறையின் கீழ் முன்மொழிவுகள் கோரப்பட்டுள்ளன. அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள பேச்சுவார்த்தை உடன்பாட்டுக் குழுவின் விதந்துரைக்கமைய குறித்த பெறுகையை Millennium I.T.E.S.P (Pvt) Ltd மற்றும் Metropolitan Technologies (Pvt) Ltd. Joint Venture இற்கு வழங்குவதற்காக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

16. இலங்கை BRICS அமைப்புக்கு அணுகுவதற்கான இயலுமை
இலங்கை BRICSஅமைப்புக்கு அணுகுவதற்கு ஏற்புடைய விடயங்களை ஆராய்ந்து பொருத்தமான விதந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்கு, அதிகாரிகள் குழுவொன்றை நியமிப்பதற்காக 2024.01.24 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் குழுவானது, இலங்கை BRICS அமைப்புக்கும், அதன் கீழ் தாபிக்கப்படவுள்ள புதிய அபிவிருத்தி வங்கிக்கும் அணுகுவதிலுள்ள நன்மை தீமைகளை ஆராய்ந்து அறிக்கையொன்று சமர்ப்பித்துள்ளது. அதில் பங்கெடுத்த அனைத்துத் தரப்பினர்களும் BRICS அமைப்பின் உறுப்புரிமையைப் பெற்றுக் கொள்வது பற்றிய நேர்மயமான பதிலளிப்புக்களை வழங்கியுள்ளனர்.

அதற்கிணங்க, குறித்த இராஜதந்திர நடபடிமுறைகளைக் கடைப்பிடித்து, இலங்கை BRICS அமைப்பு மற்றும் அதன் கீழ் தாபிக்கப்படவுள்ள புதிய அபிவிருத்தி வங்கியின் உறுப்பாண்மைக்கு விண்ணப்பிப்பதற்காக வெளிவிவகார அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

17. அக்ரஹார மருத்துவக் காப்புறுதி பயன்களை அதிகரித்தல்
2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் மிகவும் கவர்ச்சிகரமான பயன்களுடன் கூடிய அரச ஊழியர்கள் மற்றும் அனைத்து ஓய்வூதியர்களுக்கும் மிகவும் இலகுவாக வழங்கப்படும் வகையில் மருத்துவக் காப்புறுதித் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக 2024.08.12 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கிணங்க, அனைத்து ஓய்வூதியர்கள் மற்றும் அரசதுறையிலுள்ள அனைத்து ஊழியர்களின் சம்பளத்தில் 1,000/= ரூபா பங்களிப்புத் தொகையை அறவிட்டு தேசிய காப்புறுதி நிதியத்திற்கு வைப்பிலிடுவதற்கும், அதன்மூலம் உத்தேசிக்கப்பட்டுள்ள விரிவான வசதிகளுடன் கூடிய மருத்துவப் பாதுகாப்புத் திட்டத்தை 2025 ஆம் ஆண்டு தொடக்கம் நடைமுறைப்படுத்துவதற்கும் ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x