வடபகுதியில் அண்மையில் தேர்தல் பிரசாரம் ஒன்றில் ஈடுபட்ட தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க, வடக்கு, கிழக்கு தமிழர்களை மிரட்டும் தொனியில் உரையாற்றியிருந்தமைக்கு, வடபகுதியிலுள்ள தமிழ் தலைவர்கள் பலரும் கண்டனம் வெளியிட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் அநுரகுமார திசாநாயக்க ஆற்றிய உரை தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சி.வி. விக்னேஸ்வரன், வடக்கு, கிழக்கு தமிழ் பேசும் மக்கள் மீது மக்கள் விடுதலை முன்னணிக்கு எந்தவொரு நல்லெண்ணமும் கிடையாது. வடக்கு – கிழக்குப் பிரிவினைக்காக இணைந்து செயற்பட்ட அவர்கள், தமிழ் மக்கள் மீதும் கோபம் கொண்டுள்ளனர். வடக்கு, கிழக்கு தமிழர் பிரச்சினை குறித்து பாராளுமன்றத்தில் பல தடவைகள் கேட்டபோதும் அவர் சாதகமான பதிலை வழங்கவில்லை. இது வடமொழியில் அவர் ஆற்றிய உரையின் வெளிப்பாடு.
தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணும் சமஷ்டி முறைக்கு அவர்கள் ஒருபோதும் உடன்படப் போவதும் இல்லை. தீர்வை வழங்கப் போவதும் இல்லை. இதன் வெளிப்பாடே யாழ்ப்பாணத்தில் அநுரகுமார திஸாநாயக்க ஆற்றிய உரை என சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க வடபகுதிக்கு வந்து இனவாதத்தை தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதாகவும் சுமந்திரன் வழமைபோன்று அதுகுறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளதாகவும் ஈ.பி.டி.பி.யின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
ஈபிடிபி கட்சி கடந்த காலங்களில் இனவாதத்துக்கு பதிலாக தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்பட்ட கட்சி என்பதனால், பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க யாழ்ப்பாணத்துக்கு வந்தபோது இனவாதத்தை தூண்டும் வகையில் உரை நிகழ்த்துவதை ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே, மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க ஆற்றிய உரை ஆத்திரமூட்டும் பேச்சு என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சந்திரகுமார், தெரிவித்துள்ளார். தமிழ் மக்களை முட்டாள்களாக கருதியே அவர் அவ்வாறான உரையை நிகழ்த்தியதாகவும், தமிழ் மக்களை எந்த வகையிலும் கட்டாயப்படுத்தி வாக்களிக்க முடியாதெனவும் ஜனநாயக ரீதியில் செயற்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். அநுரகுமார திஸாநாயக்க யாழ்ப்பாணத்தில் ஆற்றிய உரை குறித்து, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் சாதகமான கருத்து தொடர்பாக வினவியபோது, அது தனது நிலைப்பாடாகும் எனவும், அதிகாரத்தை பயன்படுத்தி, அடக்குமுறைகளை பயன்படுத்தி தமிழ் மக்களிடம் வாக்குகளை பெறமுடியாது எனவும் அவர் குறிப்பிட்டார். இந்நிலையில், வடக்கு மக்களை அச்சுறுத்தும் அநுரவின் உரைக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் எனவும், மிரட்டல் மூலம் எதையும் செய்ய முடியாதெனவும் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.