காசாவில் 11 மாதங்களாக நீடிக்கும் போரில் அனைத்துப் பாடசாலைகளும் மூடப்பட்டு, போர் நிறுத்தம் ஒன்றுக்கான வாய்ப்புகள் குறுகி வரும் நிலையில் நேற்று (09) பாடசாலை ஆண்டு உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலை நோக்கி பலஸ்தீன போராளிகள் புதிய ரொக்கெட் தாக்குதல்களை நடத்திய நிலையில் வடக்கு காசாவில் இஸ்ரேலியப் படை புதிய வெளியேற்ற உத்தரவை பிறப்பித்துள்ளது. காசாவில் தாக்குதல்கள் தொடரும் நிலையில் அங்கு கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 41 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
இந்நிலையில் காசாவில் பாடசாலைகள் மூடப்பட்டிருப்பதோடு அவற்றில் 90 வீதமானவை இஸ்ரேலிய தாக்குதல்களால் அழிக்கப்பட்டு அல்லது சேதமாக்கப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலானவை இடம்பெயர்ந்த பலஸ்தீனர்களின் அடைக்கலமாக மாறியுள்ளன.
‘குழந்தைகள் எவ்வளவு காலம் பாடசாலையை விட்டு வெளியேறுகிறார்களோ, அந்த அளவுக்கு அவர்கள் இழந்த கற்றலைப் பிடிப்பது மிகவும் கடினம். மேலும், அவர்கள் இழந்த தலைமுறையாக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். குழந்தைத் திருமணம், குழந்தைத் தொழிலாளர் மற்றும் ஆயுதக் குழுக்களில் ஆட்சேர்ப்பு உள்ளிட்ட சுரண்டலுக்கு இரையாகின்றனர்’ என்று பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிறுவனத்தின் தொடர்பாடல் பணிப்பாளர் ஜூலிட் டூபா ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே பாடசாலை கல்வியை பெற்று வரும் 625,000 காசா மாணவர்கள் புதிய பாடசாலை ஆண்டை இழந்திருப்பதோடு மேலும் ஆறு வயது நிரம்பிய சுமார் 58,000 சிறுவர்கள் முதலாம் தரத்துக்காக பாடசாலையில் இணைவதும் தடுக்கப்பட்டிருப்பதாக பலஸ்தீன கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.