பங்களாதேஷ் பிரதமர் ஷெய்க் ஹசீனாவை பதவி கவிழ்த்த ஆர்ப்பாட்டத்தை அடுத்து அந்நாட்டின் ஆடைத் தொழில் துறை நிச்சமற்ற நிலையை எதிர்கொண்டுள்ளது.
பங்களாதேஷுக்கு ஆண்டுக்கு 55 பில்லியன் டொலர் வருவாயை ஈட்டித்தரும் ஆடைத் தொழில்துறையில் பல தொழில்சாலைகளும் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. தேசிய அளவில் ஏற்பட்டுள்ள இணையதள முடக்கங்கள் காரணமாக குறைந்தது நான்கு தொழிற்சாலைகளை மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
இதில் பல நிறுவனங்களும் வேறு நாடுகளைத் தேடிச் செல்வதாகவும் கூறப்படுகிறது.
அரசியல் பதற்றத்திற்கு மத்தியில் இடையூறுகள் தொடரும் நிலையில் தலைநகர் டாக்காவின் புறநகர் பகுதியில் இருக்கும் சுமார் 60 தொழிற்சாலைகள் தொழிலாளர் இடையே ஏற்பட்டிருக்கும் கொந்தளிப்புகள் காரணமாக மூடப்படுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதிக சம்பளம் உட்பட பல கோரிக்கைகளையும் முன்வைத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அண்மைய சம்பவங்கள் நிறுவனங்கள் இடையே நம்பிக்கையை குறைத்து வருவதாக நாட்டின் ஆடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி சங்கத்தின் பணிப்பாளர் முஹியுத்தீன் ருபெல் பி.பி.சி. செய்தி நிறுவனத்திற்கு குறிப்பிட்டுள்ளார்.
அண்மைய அரசியல் பதற்றம் இந்த ஆண்டு ஏற்றுமதியில் 10 தொடக்கம் 20 வீத வீழ்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்பட்டுள்ளது. பங்களாதேஷ் ஏற்றுமதி வருவாயில் 80 வீதமானது ஆடைத் தொழில் துறையில் தங்கி இருக்கும் நிலையில் இந்த எண்ணிக்கை கணிசமாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஓகஸ்டில் பிரதமர் ஷெய்க் ஹசீனாவை பதவி விலகச் செய்த பல வாரங்கள் நீடித்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.