பாகிஸ்தான், கைபர் பக்துன்க்வா மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு நிதி கோரி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
டெஹ்சில், விலாகி உள்ளிட்ட சுமார் 500 உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் பெஷாவரிலுள்ள ஜின்னா பூங்காவில் கூடினர். அங்கிருந்து ஆர்ப்பாட்ட ஊர்வலமாகச் சென்று மாகாண ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடாத்த இவர்கள் திட்டமிட்டிருந்ததாக அறிய முடிந்தது. உள்ளூராட்சி மன்றங்கள் அமைக்கப்பட்டு பல வருடங்களாகியும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு இம்மாகாண நிர்வாகம் நிதி வழங்காதுள்ளது. அதற்கான நிதியைக் கோரியே இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தோம் என்று பெஷாவர் மேயர் சுபைர் அலி கூறியுள்ளார்.