பாரிஸில் நேற்று (08) நிறைவடைந்த பாராலிம்பிக் போட்டியில் இலங்கை சார்பில் பங்கேற்ற கடைசி வீரரான பாலித்த பண்டார ஆண்களுக்கான D63 குண்டெறிதல் போட்டியில் தனது சிறந்த தூரத்தை பதிவு செய்தபோதும் போட்டியில் ஐந்தாவது இடத்தையே பெற்றார்.
இலங்கை நேரப்படி நேற்று (08) அதிகாலை நடைபெற்ற இந்தப் போட்டியில் அவர் தனது முதல் முயற்சியில் 14.45 மீற்றர் தூரம் எறிந்து தனது சிறந்த தூரத்தை பதிவு செய்தார்.
தொடர்ந்து இரண்டாவது முயற்சியில் 14.51 மீற்றர் தூரம் வீசி மீண்டும் சாதனை படைத்தார்.
இதன்போது வெண்கலப் பதக்கம் வெல்லும் வாய்ப்பு அவருக்கு இருந்தபோதும் கடைசி முயற்சிகளில் அவரால் சோபிக்க முடியாமல்போனது.
இதனால் அவர் ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டதோடு குவைட்டின் பைசால் சரூர் 15.31 மீற்றர் தூரம் எறிந்து தக்கப்பதக்கத்தை வென்றார்.
இம்முறை பாராலிம்பிக்கில் இலங்கை சார்பில் ஈட்டி எறிதலில் சமித்த துலான் வெள்ளிப் பதக்கம் ஒன்றை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.