இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 263 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 62 ஓட்டங்களால் பின்தங்கியது.
லண்டன், கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் மூன்றாம் நாளான நேற்று (08) இலங்கை அணி 211 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து ஸ்திரமான நிலையிலேயெ தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்து.
குறிப்பாக அணித்தலைவர் தனஞ்சய டி சில்வா 64 ஓட்டங்களுடனும் கமிந்து மெண்டிஸ் 54 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். இருவரும் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவின்போது 5ஆவது விக்கெட்டுக்கு 118 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றிருந்தனர்.
எனினும் மூன்றாம் நாள் ஆட்டத்தில் மூன்றாவது ஓவரிலேயே தனஞ்சய டி சில்வா 69 ஓட்டங்களுடன் ஒல்லி ஸ்டோனின் பந்துக்கு ஆட்டமிழந்ததோடு 64 ஓட்டங்களை பெற்ற கமிந்து மெண்டிஸ் அடுத்து இரண்டாவது ஓவரிலேயே வெளியேறினார். இலங்கை கடைசி வரிசை விக்கெட்டுகளும் அடுத்தடுத்து பறிபோயின.
இதனால் இலங்கை அணி 61.2 ஓவர்களில் 263 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. குறிப்பாக நேற்று மூன்றாவது நாளில் இலங்கை அணி 52 ஓட்டங்களுக்கு கடைசி ஐந்து விக்கெட்டுகளையும் பறியொடுத்தமை குறிப்பிடத்தக்கது.
முன்னதான ஆரம்ப வீரர் பத்தும் நிசங்க வேகமாக துடுப்பெடுத்தாடி 51 பந்துகளில் 9 பௌண்டரிகளுடன் 64 ஓட்டங்களை பெற்றார். இவர்கள் தவிர வேறு எந்த வீரரும் 14 ஓட்டங்களைக் கூட தாண்டவில்லை. இங்கிலாந்து சார்பில் பந்து வீச்சில் ஒல்லி ஸ்டோனுடன் ஷோஷ் ஹுல் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு கிறிஸ் வோக்ஸ் 2 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.
மூன்று போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரை இலங்கை அணி ஏற்கனவே 0–2 என இழந்த நிலையிலேயே இந்த டெஸ்ட் போட்டியில் ஆடி வருகிறது. இதில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 325 ஓட்டங்களை பெற்றது. அணித் தலைவர் ஒல்லி பொப் 154 ஓட்டங்களை பெற்றதோடு அவர் ஆரம்ப வீரர் பென் டக்கட்டுடன் (86) இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 95 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டார். இந்த இருவரும் தவிர இங்கிலாந்து அணி சார்பில் வேறு எந்த வீரரும் 20 ஓட்டங்களைக் கூட எட்டவில்லை.
இலங்கை சார்பில் மிலான் ரத்னாயக்க 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு விஷ்வ பெர்னாண்டோ, லஹிரு குமார மற்றும் தனஞ்சய டி சில்வா தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.