அம்மதுரவாசகத்தைக் கேட்ட குலச்சிறைநாயனார் வணங்கி நின்று, “அடியேங்கள் செய்த தவப்பயனே! அருட்குன்றே! சிவஞான தீபமே! அடியேங்களுக்குச் சென்றகாலத்திலே பழுதடையாத்திறமும் எதிர்காலத்திலே வருஞ்சிறப்பும் இந்நிகழ்காலத்திலே தேவரீர் இந்நாட்டில் எழுந்தருளியதாலினாலே பெற்ற பெரும்பேறாகும். இதனால் அடியேங்கள் எக்காலத்துந் திருவருளுடையேம். அஃதன்றியும், பொய்ச் சமயமாகிய சமணசமயத்தில் அமிழ்ந்திய இந்நாடும் அரசனும் வெற்றி பொருந்திய விபூதிப்பிரகாசத்தினாலே விளங்கும் மேன்மையையும் பெற்றோம். பாண்டிமாதேவியார் தேவரீர் இங்கெழுந்தருளுதலைக் கேட்டுப் பெருமகிழ்ச்சி கொண்டு, நமது பெருவாழ்வு எழுந்தருளியது; நீர் போய் எதிர்கொண்டு திருவடிபணிவீர்” என்று அடியேனை ஏவினார் என்று விண்ணப்பஞ் செய்து, மிக்க களிப்பினாலே மீளவும் பணிந்து, தோத்திரம் பண்ணினார்.
பிள்ளையார் அங்ஙனம் பணிந்து துதித்த குலச்சிறைநாயனாருக்கு அருண்மொழி கூறியருளும் பொழுது மதுராபுரி தோன்றுதலும், அடியாரை நோக்கி, “நமது சிவபெருமானுடைய திருவாலவாய் எம்மருங்கினது” என்று வினாவியருள, அவ்வடியவர் பிள்ளையாருடைய திருவடிகளை வணங்கித் திருமுன்னே நின்று, கையினாலே காட்டி, “இங்கே கோபுரம் தோன்றுகின்றது. திருவாலவாய் இது” என்றார். அது கண்டு பிள்ளையார் கைகுவித்து மிகுந்த அன்போடு பூமியின்மேலே விழுந்து நமஸ்கரித்து, “மங்கையர்க்கரசி” என்று எடுத்து, மங்கையர்க்கரசியாரும் குலச்சிறைநாயனாருமாகிய இவருடைய திருத்தொண்டுகளைக் கொண்டமையைச் சிறப்பித்து திருப்பாட்டிறுதிதோறும் “ஆலவாயாவது மிதுவே” என்பதை அமைத்துத் திருப்பதிகம் பாடிக்கொண்டு, அடியார்களோடுந் திருவாலவாயை அணைந்து, கோபுரத்தை வணங்கி, உள்ளே புகுந்து வலஞ்செய்து, மந்திரியாரோடு சந்நிதானத்தை அடைந்தார். சொக்கநாத சுவாமியைத் தரிசித்து, அட்டாங்கபஞ்சாங்கமாகப் பலமுறை நமஸ்கரித்து, உரோமப்புளகங்கொள்ள ஆனந்தவருவி சொரிய நின்று, திருப்பதிகம்பாடி, திருமுன்றிலை அடைந்தார்.
(தொடரும்)
கலாநிதி சிவ கு.வை.க. வைத்தீஸ்வர குருக்கள் தலைவர், இந்துக் குருமார் அமைப்பு.