நுவரெலியா ஸ்ரீ மதுர கணபதி கோவிலில் விநாயகர் சதுர்த்தி பெருவிழா கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தி ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாளன்று கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் (07) சகல தடைகளையும் நீக்கும் கடவுளான விநாயகரை வழிபடுவதுடன் அவரது பிறந்த நாளாகவும் கொண்டாடப்படுகிறது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நுவரெலியா பதுளை பிரதான வீதி இலக்கம் 60 இல் அமைந்துள்ள ஸ்ரீ மதுர கணபதி கோவிலில் (07) சனிக்கிழமை அதிகாலை 108 வலம்புரி சங்காபிஷேகம் நடைபெற்றது. பின்னர் வசந்த மண்டப பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து வருடாந்த சந்தன பிள்ளையார் ஊர்வலம் ஆரம்பமானது.
சந்தனத்தால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஆலய நிர்வாகத்தினர் ஊடாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டு சிறப்புப் பூஜை வழிபாடுகள் செய்யப்பட்டன.
நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ மதுர கணபதி ஆலயத்தில் இருந்து நடை பவனியாக ஊர்வலம் சென்று வரலாற்றுச் சிறப்புமிக்க நுவரெலியா சீதாஎலிய சீதை அம்மன் ஆயத்தில் பூஜை வழிபாடுகள் செய்து கங்கையில் கரைத்து விடப்பட்டன.
குறித்த விநாயகர் சதுர்த்தி விழாவிலும் சந்தன பிள்ளையார் ஊர்வலத்திலும் பெருந்திரளான பக்தர்களும் கலந்து கொண்டனர்.
அனைவருக்கும் இறுதியில் அன்னதானமும் வழங்கப்பட்டது.
(செ.திவாகரன் நானுஓயா நிருபர்)