ஸ்பெயினில் இடம்பெற்ற 20 வயதிற்கு கீழ்ப்பட்ட மல்யுத்த உலக கிண்ண போட்டிகளில் இலங்கை சார்பில் வெண்கலப் பதக்கம் வென்ற நெத்மி அஹின்சா இன்று (09) தாயகம் திரும்பினார்.
பேர்மிங்ஹாம் 2022 பொதுநலவாய விளையாட்டு விழாவில் பெண்களுக்கான 57 கிலோ கிராம் எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற நெத்மி, 2024 உலக மல்யுத்த சம்பியன்ஷிப்பில் 53 கிலோ கிராம் எடைப் பிரிவில் நடுநிலையாளர் மிக்கிட்சிச் என்பவரை 6 – 2 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றிகொண்டு வெண்கலப் பதக்கத்தை தனதாக்கி வரலாறு படைத்தார்.
உலக மல்யுத்த சம்பியன்ஷிப் வரலாற்றில் இலங்கைக்கு கிடைத்த முதலாவது பதக்கம் இதுவாகும்.
‘என்னை விட பலசாலியான சீன வீராங்கனை ஜின் ஸங் என்பவருக்கு எதிரான அரை இறுதிப் போட்டியில் சரிசமமாக நான் போட்டியிட்டேன். ஒரு கட்டத்தில் புள்ளிகள் நிலை 2 – 2 என சமநிலையில் இருந்தது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவரிடம் தோல்வி அடைந்தேன்.
‘மூன்றாம் இடத்தைத் தீர்மானிக்கும் போட்டியில் நடுநிலையாளர் வெலேரியா மிக்கிட்சிச்சை 6 – 2 என்ற புள்ளிகள் அடிப்படையில் வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தேன்’ என நாடு திரும்பிய நெத்மி குறிப்பிட்டார்.
தகுதிகாண் சுற்றில் கஸக்ஸ்தான் வீராங்கனை யெங்லிக் கபில்பெக்கை 10 – 0 என்ற புள்ளிகள் அடிப்படையிலும், கால் இறுதிச் சுற்றில் பல்கேரிய வீராங்கனை நிக்கல் க்ராசிமிரோவா க்ருமோவாவை 10 – 0 என்ற புள்ளிகள் அடிப்படையிலும் நெத்மி இலகுவாக வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தார்.
தொடர்ந்து நடைபெற்ற ஹங்கேரி வீராங்கனை லிலியானா கப்புவாரிக்கு எதிரான கால் இறுதிச் சுற்றில் ஆதிக்கம் செலுத்திய நெத்மி 14 – 3 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியிருந்தார்.
அரை இறுதியில் தோல்வி அடைந்ததை அடுத்து மூன்றாம் இடத்தைத் தீர்மானிக்கும் போட்டியில் பங்குபற்றிய நெத்மி, வெண்கலப் பதக்கத்தை வென்று இரண்டு வருட இடைவெளியில் தனது இரண்டாவது சர்வதேச பதக்கத்தை வென்றெடுத்தார்.