சிங்கப்பூர் முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்வதை இலகுபடுத்தும் வகையில் ‘இந்தியாவில் முதலிடு’ (Invest India) என்ற பெயரில் சிங்கப்பூரில் அலுவலகமொன்று அமைக்கப்படுமென பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இதனை பிரதமர் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
சிங்கப்பூருக்கு விஜயம் செய்த பிரதமர் மோடி, அந்நாட்டின் பல்துறைகளையும் சேர்ந்த முன்னணி வர்த்தக நிறுவனங்களின் பிரதம நிறைவேற்று அதிகாரிகளுடன் வட்ட மேசை மாநாட்டை நடாத்தினார்.
இம்மாநாட்டில் நிதி முதலீடு, உட்கட்டமைப்பு, உற்பத்தி, எரிசக்தி உள்ளிட்ட பல் துறைகளைச் சேர்ந்த முன்னணி அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர். அவர்கள் அடுத்துவரும் சில வருடங்களுக்குள் 60 பில்லியன் அமெரிக்க டொலர்களை இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இம்மாநாட்டில் தொடர்ந்தும் உரையாற்றியுள்ள பிரதமர் மோடி, இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை விரிவான மூலோபாயக் கூட்டாண்மைக்கு மேம்படுத்த வேண்டும். அது எமக்கிடையிலான பொருளாதார ரீதியிலான உறவுக்கு பாரிய உந்துதலை அளிக்கும்.
கடந்த பத்தாண்டுகளில் இந்தியா பாரிய வளர்ச்சி கண்டுள்ளது. அதே பாதையிலேயே நாம் தொடர்ந்து பயணிப்போம். இதன் ஊடாக அடுத்துவரும் சில ஆண்டுகளில் உலகின் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதாரமாக எம்மால் மாற்றமடைய முடியும். தற்போது உலக பொருளாதார வளர்ச்சிக்கு நாம் 17 சதவீத பங்களிப்பை நல்குகின்றோம்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இச்சமயம், இந்தியாவில் காணப்படும் முதலீட்டு வாய்ப்புகளைப் பார்வையிட வருகை தருமாறு சிங்கப்பூர் வர்த்தகத் தலைவர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பும் விடுத்துள்ளார்.