‘விசேட தேவையுடையோர் பயன்படுத்தும் உபகரணங்களுக்கு அறவிடப்படும் வரிகளை நீக்குவோம். காப்புறுதி வசதியை வழங்குவோம். இவர்கள் வங்கிக் கடன்களை பெற்றுக்கொள்வதற்கு தடைகள் காணப்படுகின்றன. அவற்றை இலகுபடுத்துவோம். இந்த சமூகத்தில் காணப்படுகின்ற திறமையானவர்களுக்கென தனியான விசேட வேலை திட்டங்களையும் முன்னெடுப்போம்’
2012ஆம் ஆண்டு சனத்தொகை கணிப்பீட்டின் பிரகாரம் மொத்த மக்கள் தொகையில் 8.7 சதவீதமான விசேட தேவையுடையோர் இருக்கின்றார்கள். அது எண்ணிக்கையில் 16 இலட்சம் ஆகும். இவர்களுக்காக பல சந்தர்ப்பங்களில் பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் குரலெழுப்பியுள்ளேன். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போதும் இதற்காக சமூக ஒப்பந்தம் ஒன்றுக்கும் வந்தோம். ஆனால் துரதிஷ்டவசமாக ஆட்சி அதிகாரம் கிடைக்கவில்லை. என்றாலும் எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு அதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
மாற்றுத்திறனாளிகளை வலுப்படுத்தும் நோக்கிலான ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனத்தை வெளியிடும் மாற்றுத்திறனாளுக்கான தேசிய மாநாடு கடந்த சனியன்று (07) கொழும்பில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இம்மாநாட்டில் தொடர்ந்தும் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, விஷேட தேவையுடையோருக்காக பாராளுமன்றத்தில் பிரேரணைகளை முன்மொழிந்த போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களும் இருந்தார்கள். இந்த சகோதரர்களுக்காக குரலெழுப்பியவர்களுக்கு தமது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இச்சமூகத்தினருக்காக பல்வேறு ஒப்பந்தங்களும், சாசனங்களும் கைச்சாத்திடப்பட்டாலும் அவை இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக அவற்றை செயற்படுத்துவோம். இதற்கான தெளிவான வேலைத்திட்டங்கள் எதுவும் இல்லை. 2004 முதல் இதற்கான சட்டங்கள் முன்மொழியப்பட்டாலும், அவை இதுவரையும் நடைமுறைப்படுத்தப்படாததல் இவர்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். மாற்றங்கள் இடம்பெறுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்ற சக்திகள் அல்லது அதிகாரிகளின் அழுத்தங்கள் காரணமாகவே இந்த மாற்றங்கள் எதுவும் இடம்பெறவில்லை. எனவே ஐக்கிய மக்கள் சக்தி இவற்றில் மாற்றங்களை கொண்டு வரும்.
விசேட தேவையுடையவர்களின் பிரச்சினைகளை தனி அமைச்சின் ஊடாக தீர்க்க முடியாது. இதற்காக பலவிதமான திட்டங்கள் அவசியமாகும். விஷேட தேவையுடைய சமூகத்திற்காக புதிய தேசியக் கொள்கையொன்று அவசியம். எனவே விசேட தேவையுடையோரின் நலன்புரி விடயங்களுக்காக தனியான ஜனாதிபதி செயலணியொன்றை அமைக்க உள்ளேன். சட்ட ரீதியான இணைப்புகளை ஏற்படுத்துவதற்கு தனியான வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அவர்களுக்கு கல்விக்கும் தொழிலுக்குமான உரிமை இருக்கின்றது. இவற்றைப் பெற்றுக்கொடுப்பதற்கு தனியான மூன்று வீத கோட்டா உண்டு. அந்த தொழில் கொள்கையை ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கம் நடைமுறைப்படுத்தும். விசேட தேவையுடையவர்களுக்காக வழங்கப்படுகின்ற கொடுப்பனவும் அதிகரிக்கப்படும்.
இதேவேளை விசேட தேவையுடையோர்கள் பயன்படுத்துகின்ற உபகரணங்களுக்கும் வரி அறவிடப்பட்டிருக்கிறது. நாம் அந்த வரிகளை நீக்குவோம். காப்புறுதி வசதியை வழங்குவோம். இவர்கள் வங்கிக் கடன்களை பெற்றுக் கொள்வதற்கு தடைகள் காணப்படுகின்றன. அவற்றை இலகுபடுத்துவோம். இந்த சமூகத்தில் காணப்படுகின்ற திறமையானவர்களுக்கென தனியான விசேட வேலை திட்டங்களையும் முன்னெடுப்போம் எனவும் மேலும் தெரிவித்தார்.
இவை வெறும் வார்த்தைகளாக மாத்திரமன்றி செயற்பாட்டில் கொண்டு வருவோம். விசேட தேவையுடையவர்களும் எமது நாட்டின் பிரஜைகளே. எனவே இந்த சமூகத்துக்காக சகல வசதிகளையும் கொண்ட கல்விமுறை ஆரம்பிக்கப்பட்டு பயிற்சிகளையும் வழங்குவோம் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் சுட்டிக்காட்டினார்.