மூன்றாவது உலகளாவிய செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு நாளை செப்டம்பர் 10 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் ஆரம்பமாகிறது. மன்னர் அப்துல் அஸீஸ் சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும். இம்மாநாடு சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும் பிரதமரும் சவுதியின் தரவுகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு அதிகார சபையின் (SDAIA) பணிப்பாளர்கள் குழுத் தலைவருமான முஹம்மத் பின் சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் சஊத்தின் ஆதரவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence) தொடர்பான நிபுணர்கள் இம்மாநாட்டில் பங்குபற்றுகின்றனர். அவர்களில் Accenture, Oracle, Dell Technologies, Simens, Boston Dynamics, மற்றும் Google Cloud போன்ற நிறுவனங்களின் நிபுணர்கள் குறிப்பிடத்தக்கவர்களாவர். அத்தோடு இம்மாநாட்டில் 300 க்கும் மேற்பட்ட பேச்சாளர்களும் கலந்து கொண்டுள்ளனர். மாநாட்டின் நிமித்தம் வெளிநாடுகளது பிரதிநிதிகளும் பேச்சாளர்களும் ரியாத் நகரில் கூடியுள்ளனர். விசாலமான ஏற்பாடுகளுடன் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இம்மாநாட்டினையொட்டி ரியாத் நகரமும் மாநாட்டு மண்டபமும் விழாக்கோலம் பூண்டுள்ளது.
சவுதி அரேபியா பெற்றோலிய வள நாடுகளில் ஒன்றுதான். என்றாலும் பெற்றோலிய வளம் சாராத உற்பத்தி மற்றும் சேவைகள் துறைகளின் ஊடாகப் பொருளாதாரத்தைத் தன்னிறைவடையச் செய்வதில் சவுதி கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது. இவ்விடயத்தில் முன்னொரு போதும் இல்லாத அளவுக்கு அக்கறை காட்டப்படுகிறது.
இரு புனித பள்ளிவாசல்களின் காவலரும், மன்னருமான சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் சஊத், பட்டத்து இளவரசரும் பிரதமருமான முஹம்மத் பின் சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் சஊத் ஆகியோர் தலைமையில் இவ்விடத்தில் அதிகூடிய அக்கறை எடுக்கப்பட்டுள்ளது. இதன் நிமித்தம் பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவர்கள் பதவிக்கு வந்த பின்னர் சவுதியின் பொருளாதார அபிவிருத்தி துரிதப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் உட்கட்டமைப்பு அபிவிருத்தி முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. இதன் விளைவாக உலகமே சவுதி அரேபியாவை திரும்பிப் பார்க்கும் அளவுக்கு நிலைமை வளர்ச்சி அடைந்துள்ளது.
இவ்வாறான சூழலில் நவீன அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிகளை நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு பயன்படுத்திக் கொள்வதற்கு சவுதி அரேபியா முக்கிய இடமளித்துள்ளது. அதற்குத் தேவையான வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் உலகளாவிய ரீதியில் தற்போது பாரிய வளர்ச்சி கண்டுவரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப துறையின் மூன்றாவது உலகளாவிய உச்சி மாநாட்டை ரியாத்தில் நடாத்தவும் ஏற்பாடு செய்திருக்கிறது சவுதி.
பரந்து விரிந்த பார்வையோடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த உச்சி மாநாடு ‘மனிதகுலத்தின் மேம்பாட்டிற்காக செயற்கை நுண்ணறிவை அபிவிருத்தி செய்தல்’ என்ற தொனிப்பொருளின் கீழ் நடைபெறுகிறது. இம்மாநாட்டில் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கான கட்டமைப்புகள், நெறிமுறை வழிகாட்டுதல்களை நிறுவுவதற்கு பங்களிக்கும் யோசனைகள் மற்றும் நுண்ணறிவுகளை வடிவமைப்பதில் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் கவனம் செலுத்தும் என்று மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதேநேரம், புத்தாக்க செயற்கை நுண்ணறிவு, நகர்ப்புற வாழ்க்கையில் செயற்கை நுண்ணறிவு, செயற்கை நுண்ணறிவின் நெறிமுறை ஆளுமை போன்ற முக்கிய தலைப்புகளின் கீழ் இங்கு ஆய்வுகள் இடம்பெறவுள்ளன. இவற்றின் மூலம் சமூகம், வணிகம், ஆளுமை ஆகியவற்றில் ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்படும்.
குறிப்பாக செயற்கை நுண்ணறிவு சார் கலந்துரையாடல்கள், விவாதங்கள் இம்மாநாட்டின் போது இடம்பெறவிருக்கின்றன. உலகளாவிய செயற்கை நுண்ணறிவு சார் முயற்சிகளை இயக்கும் வகையிலான சர்வதேச ஒத்துழைப்புகளுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ள இம்மாநாட்டின் ஊடாக எல்லைகளைக் கடந்த நெறிமுறை புத்தாக்கங்களும் ஊக்குவிக்கப்பட வுள்ளது.
இம்மாநாடு குறித்து சவுதியின் தரவுகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு அதிகார சபையின் தலைவர் கலாநிதி அப்துல்லாஹ் பின் ஷரப் அல் காமிதி குறிப்பிடுகையில், ‘மூன்றாவது உலகளாவிய செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டிற்கு நாங்கள் தயாராவதன் ஊடாக ஒரு புதிய சகாப்தத்தில் பிரவேசிக்கிறோம். செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தில் எத்திசை நோக்கிச் செல்லும், மேலும் நேர்மறையான எதிர்காலத்தை வடிவமைக்க நாம் தீர்க்க வேண்டிய நெறிமுறை சிக்கல்கள் யாவை? என்பவற்றை ஆராய்ந்து அனுகவிருக்கிறோம். செயற்கை நுண்ணறிவின் திறனை முழுமையாக உணர்ந்து அதன் விளைவுகளை பொறுப்புடன் கையாள்வது முன்னெப்போதையும் விட முக்கியமானது’ என்றுள்ளார்.
மேலும் ‘மூன்றாவது உலகளாவிய செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடானது சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான முஹம்மத் பின் சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் சஊத்தின் “சவுதி விஷன் 2030ஐ விரைவான வேகத்தில் அடைவதற்கான முன் முயற்சியுமாகும்.
இளவரசர் முஹம்மத் பின் சல்மானின் தலைமையின் கீழ், அனைவருக்கும் பயனளிக்கும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பங்களை உருவாக்க சவுதி அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது.
அதனால் சிறந்த எதிர்காலத்தை உருவாக்க இத்தொழில் நுட்பம் எவ்வாறு உதவும் என்பதை ஆராய்வதற்காக, உலகளாவிய தலைவர்களையும் கண்டுபிடிப்பாளர்களையும் ரியாத்திற்கு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செயற்கை நுண்ணறிவு தீர்வுகளின் பலன்களை விரிவுபடுத்துவதன் மூலம் பல்வேறு துறைகளில் முன்னேற்றத்தை ஊக்குவிக்க முடியும். அதன் ஊடாக, எதிர்காலத் தலைமுறையினருக்கு பிரகாசமான நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் உறுதி செய்ய எதிர்பார்க்கப்படுகிறது.
எட்டு தலைப்புகளை அடித்தளமாகக் கொண்டுள்ள இம்மாநாடு கைத்தொழில்துறையில் செயற்கை நுண்ணறிவு ஊடாக விரைவான முன்னேற்றங்களை ஏற்படுத்துவதற்காக அதன் பொது செயற்கை நுண்ணறிவு முன்னோக்கி பயணிப்பதற்கு சாதகமான பாதைகள் குறித்தும் ஆராயும். பொருளாதார வளர்ச்சி, தேசிய நோக்கங்களை அடைதல், சமூக முன்னேற்றத்தை வளர்ப்பதற்கு செயற்கை நுண்ணறிவு திறன்களை மேம்படுத்துவதில் அரசாங்கங்களின் பங்களிப்புககள் என்பவற்றையும் இம்மாநாடு வெளிச்சம் போட்டுக் காட்டக்கூடியதாக இருக்கும்.
மேலும் செயற்கை நுண்ணறிவு ஊடான திறன் மேம்பாடு, சம பிரவேசத்திற்கான டிஜிட்டல் ஏற்றத்தாழ்வுகளைக் குறைத்தல், கல்வி, கலாசார, விஞ்ஞான நெறிமுறைகள், ஆளுமை மற்றும் செய்கை நுண்ணறிவு ஆகியவற்றின் குறுக்குவெட்டு முகங்களை ஆராய்தல் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இம்மாநாட்டின் கலந்துரையாடல்கள் இருக்கும்.
அத்தோடு சமூகத்தின் நலன்களுக்காக பொறுப்பான கண்டுபிடிப்புகளுக்கும் இம்மாநாடு பரிந்துரை செய்யும்.
இவை இவ்வாறிருக்க, மனிதர்களுக்கும் செயற்கை நுண்ணறிவுக்கும் இடையிலான இயக்கவியலை ஆராயும் வகையில் இத்தலைப்புக்கள் அமைந்துள்ளன. அது மாத்திரமல்லாமல், கலை வெளிப்பாட்டை மேம்படுத்துவதற்கும் மனிதன் செயற்கை நுண்ணறிவு தொடர்புகளின் உளவியல் அம்சங்களை ஆராய்வதற்கும் செயற்கை நுண்ணறிவின் திறன்கள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்படும். மேலும் இந்த செயற்கை நுண்ணறிவானது பொருள் கூறுகளை மதிப்பீடும் செய்யும். அத்தோடு கணினி வன்பொருள், விநியோக சங்கிலி ஒத்துழைப்பு, நிலைபேறான கணினி ஆகியவற்றில் உள்ள புதுமைத் திறன்களை மையமாகக் கொண்டு பொருளாதார வளர்ச்சியை இயக்கவும் செயற்கை நுண்ணறிவு முன்னோக்கி செல்லவும் இது வழிவகை செய்யும்.
விரைவாக வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு துறையை வர்த்தகத் தலைவர்கள் புரிந்துகொள்வதற்கு இம்மாநாடு நிச்சயம் உதவும் என்பது தான் துறைசார் நிபுணர்களின் கருத்தாகும்.
குறிப்பாக மூலோபாய ரீதியில் முடிவெடுத்தல், பொறுப்பான தலைமைத்துவம் மற்றும் உற்பத்தித்திறன் மீதான தாக்கங்கள் ஆகியவற்றில் இது கவனம் செலுத்தக்கூடியதாக உள்ளது.
மூன்று நாட்கள் நடைபெறும் இந்த உச்சிமாநாட்டின் அமர்வுகளும் செயலமர்வுகளும் பல்வேறு கைத்தொழில்களில் செயற்கை நுண்ணறிவின் நடைமுறை பயன்பாடுகள் ஒளிர்வதையும் செயற்கை நுண்ணறிவு எவ்வாறு வாழ்வை மாற்றியமைக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளவும் வழிவகை செய்யும்.
போக்குவரத்து, நகர்ப்புற வடிவமைப்பு, மனநலம் மற்றும் வள முகாமைத்துவம் ஆகியவற்றில் செயற்கை நுண்ணறிவின் செல்வாக்கு குறித்து கவனம் செலுத்துவதன் மூலம் நகர்ப்புற அமைப்புகளில் செயற்கை நுண்ணறிவின் உண்மையான பங்களிப்பைப் புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும்.
கைத்தொழில்துறை முன்னோடிகளுடன் உறவுகளை உருவாக்கிக் கொள்ளவும், உச்சி மாநாட்டின் போது அறிவிக்கப்படும் புரட்சிகரமான செயற்கை நுண்ணறிவு கூட்டு முயற்சிகளுக்கு பங்களிக்கவும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் இம்மாநாட்டில் சவுதியின் தரவுகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு அதிகார சபை (SDAIA) க்கும் உலகளாவிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் இடையில் பல ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படவும்
அறிவிப்புகள் வெளியிடப்படவும் உள்ளன.
இவ்வாறு பரந்த நோக்கங்களையும் எதிர்பார்ப்புக்களையும் கொண்டதாக சவுதி ஏற்பாடு செய்துள்ள இம்மாநாட்டினைத் தொடர்ந்து சவுதியில் மாத்திரமல்லாமல் உலகெங்கிலும் செயற்கை நுண்ணறிவு குறித்து புதிய விழிப்புணர்வு ஏற்படும்.
இதில் மாற்றுக்கருத்துக்கு இடமிருக்க முடியாது.
இவ்வாறு சிறப்பு மிக்க இம்மாநாட்டை ரியாத்தில் ஏற்பாடு செய்துள்ள மன்னரதும் பட்டத்து இளவரசரதும் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளதும் பணிகள் வரலாற்றில் அழியாத்தடம் பதிக்கும்.
சைபர் அச்சுறுத்தல், தொழில்நுட்பக் கோளாறுகளால் உலகம் ஸ்தம்பிதம் அடையும் சந்தர்ப்பங்களிலும் கூட சில வினாடிகளுக்குள் சவுதி அரேபியாவை இயல்பு நிலைக்கு கொண்டு வரக்கூடிய நவீன தொழில்நுட்ப வளர்ச்சிகளைப் பயன்படுத்தும் நாடாக விளங்குகிறது சவுதி.
அந்த வகையில் செயற்கை நுண்ணறிவில் சவுதி அரேபியா பாரிய வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் கண்டிருப்பதும் அதற்கான மூன்று நாட்கள் சர்வதேச மாநாட்டை இளவரசரின் தலைமையில் தலைநகர் ரியாதில் நடாத்துவது பெரிதும் பாராட்டத்தக்க விடயமாகும்.
அதனால் சவுதி சகல துறைகளிலும் முன்னேற்றமடைந்த நாடாகத் திகழவும் அதன் முயற்சிகள் வெற்றிபெற்றிடவும் உலக மக்களுக்கு பலனளித்திடவும் எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்புரியட்டும்.
அஷ்ஷேய்க் எம்.எச். ஷேஹுத்தீன் மதனி (பி.ஏ) பணிப்பாளர் அல் ஹிக்மா நலன்புரி நிறுவனம், கொழும்பு