Monday, October 7, 2024
Home » இலங்கை சுங்கத்தின் வரலாற்று சாதனை

இலங்கை சுங்கத்தின் வரலாற்று சாதனை

by damith
September 9, 2024 6:00 am 0 comment

இலங்கை சுங்கத் திணைக்களம் வரலாற்றில் முதல் தடவையாக ஆயிரம் பில்லியன் ரூபாவை வருமானமாக ஈட்டியுள்ளது. இதனை சுங்கத் திணைக்களம் கடந்த வௌ்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவித்தது.

சர்வதேச நாணய நிதியம், 2024 ஆண்டுக்கென 1,534 பில்லியன் ரூபா வருமான இலக்கை சுங்க திணைக்களத்திற்கு வழங்கியுள்ளது. இவ்வாறான சூழலில் இவ்வருடத்தின் முதல் எட்டு மாதங்களில் 1,000 பில்லியன் ரூபாவை இலங்கை சுங்கம் ஈட்டி இருக்கிறது.

அதேநேரம், கடந்த 2023 இல் இலங்கை சுங்கம் 975 பில்லியன் ரூபாவை வருமானமாக ஈட்டி இருந்தமையும் தெரிந்ததே.

அந்த வகையில் கடந்த வருடத்தை விடவும் இவ்வருடத்தின் முதல் 08 மாதங்களில் இத்தகைய அதிகூடிய வருமானத்தை இலங்கை சுங்கம் ஈட்டியிருப்பது வரலாற்று சாதனையாகும் என்று இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சரத் நோனிஸ் தெரிவித்துள்ளார்.

ஒரு நாட்டின் பொருளாதாரத்திற்கு அதிக வருமானத்தை ஈட்டிக் கொடுக்கும் முக்கிய துறைகளில் சுங்கமும் ஒன்றாகும். அந்த அடிப்படையில் உலகிலுள்ள மிகவும் பழமையான சுங்கங்களில் ஒன்றாக விளங்கும் இலங்கை சுங்கம் இந்நாட்டின் பொருளாதாரத்திற்கு அதிக பங்களிப்பை நல்கி வருகின்றது.

நாலா புறமும் கடலால் சூழப்பட்டுள்ள இலங்கையில் இந்நாட்டு பிரித்தானிய ஆட்சிக்கு உட்பட்டிருந்த காலத்திலேயே சுங்கத் திணைக்களம் அமைக்கப்பட்டிருக்கிறது. 1806 இல் ஸ்தாபிக்கப்பட்டுள்ள இலங்கை சுங்கத் திணைக்களம் அதன் 200 வது ஆண்டு நிறைவை 2009 இல் கொண்டாடியது. இலங்கையிலுள்ள மிகவும் பழமையான திணைக்களங்களில் சுங்கத் திணைக்களமும ஒன்றாகும்.

இவ்வாறு நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ள இலங்கை சுங்கம், வருமானம் சேகரிப்பு, வருமானத்தில் ஏற்படும் கசிவுகள் மற்றும் பிற மோசடிகளைத் தடுத்தல், முறையான வர்த்தகத்தை எளிதாக்குதல், புள்ளிவிபரங்களை வழங்குவதற்காக இறக்குமதி, ஏற்றுமதி தரவுகளை சேகரித்தல், இறக்குமதி, ஏற்றுமதி தொடர்பில் ஏனைய அரச திணைக்களங்களுடனும் மற்றும் பங்குதாரர்களுடனும் ஒத்துழைப்பையும் ஒருங்கிணைப்பையும் மேற்கொள்ளல் போன்றவாறான பணிகளைப் பிரதானமாக மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இலங்கை பொருளாதாரத்திற்கு இலங்கை சுங்கம் முக்கிய பங்களிப்பை நல்கி வருகிறது. குறிப்பாக இற்றைக்கு சில வருடங்களுககு முன்பு இலங்கை சுங்கத்தின் வருமானத்தில் 25 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை வாகன இறக்குமதி மூலமே கிடைக்கப்பெற்றது. ஆனால் நாடு பொருளாதார நெருக்கடிக்கு உள்ளானதைத் தொடர்ந்து வாகன இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதன் விளைவாக வாகன இறக்குமதி மூலமான வருமானம் 6 சதவீதத்திற்கும் குறைவாக வீழ்ச்சியடைந்துள்ளது.

இவ்வாறான சூழலில் தான் இலங்கை சுங்கம் ஆயிரம் பில்லியன் ரூபாவை வருமானமாக ஈட்டி இருக்கிறது. வாகன இறக்குமதி மூலமான வருமானம் பெரிதும் வீழச்சியடைந்துள்ள சூழலில் இவ்வாறு அதிகூடிய வருமானத்தை முதல் 08 மாதங்களில் எட்டி இருப்பது வரலாற்று சாதனை என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. அதனால் சர்வதேச நாணய நிதியம் அளித்துள்ள வருமான இலக்கை அடுத்துவரும் 4 மாதங்களில் இலங்கை சுங்கம் நிச்சயம் அடையும் எனலாம்.

இலங்கைச் சுங்கம் முன்னொரு போதுமில்லாத வகையில் இவ்வருடம் வருமானத்தில் சாதனை படைப்பதற்கு கடந்த இரண்டு வருடங்களாக நாடும் பொருளாதாரமும் பெற்றுக்கொண்டுள்ள சரியான தலைமைத்துவமும் வழிகாட்டலுமே காரணமாகும்.

2022 ஆம் ஆண்டின் ஆரம்பப்பகுதியில் நாடு கடும் பொருளாதார வீழ்ச்சிக்கு உள்ளானது. அந்த வீழ்ச்சியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க எவரும் முன்வராத நிலையில் நாட்டின் தலைமையை ஏற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டில் நிலைபேறான பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கு தேவையான பொருளாதார திட்டங்களை முன்னெடுத்து வருகிறார். குறிப்பாக நாட்டுக்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் அவசியமான தலைமைத்துவத்தையும் வழிகாட்டல்களையும் அவர் வழங்குகிறார். அதாவது நாட்டில் மீண்டுமொரு தடவை பொருளாதார நெருக்கடி ஏற்படுவதைத் தவிர்ப்பதை அனைத்து வேலைத்திட்டங்களும் இலக்காகக் கொண்டுள்ளன.

இவ்வேலைத்திட்டங்களின் பிரதிபலன்களில் ஒன்றாகவே இலங்கை சுங்கத்தின் இந்த அடைவு அமைந்திருக்கிறது எனலாம்.

ஆகவே பொருளாதார வீழ்ச்சியில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட இப்பொருளாதார திட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டும். அத்திட்டங்கள் நாட்டில் நிலைபேறான பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தக்கூடியவை. அதனால் இவ்வேலைத்திட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவது காலத்தின் அவசியத் தேவை என்றால் மிகையாகாது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x