– 1/4 பகுதியினர் அயலவர்களின் உணவின் மூலம் வாழ்கின்றனர்
– பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட விசேட குழுவின் அறிக்கை
உயரம் குறைதல், பலவீனமாதல், நிறை குறைவாக இருத்தல், நுண் போசணைக் குறைபாடுகள் (விற்றமின்கள் கனியுப்புக்கள் போதியளவு இல்லாமை) போன்ற நான்கு விடயங்களின் ஊடாக சிறுவர் போசாக்குக் குறைபாட்டு நிலைமைகள் ஏற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையில் சிறுவர்களின் போசாக்கின்மை அதிகரித்து வருகின்றதா என்பது தொடர்பில் ஆராய்வதற்கும், அவ்வாறாயின் அது சம்பந்தமாக மேற்கொள்ள வேண்டிய குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்கும், அடையாளங் காணப்பட்ட நடவடிக்கைகளை துரிதமாக செயற்படுத்துவது தொடர்பில் மேற்பார்வை செய்வதற்குமான பாராளுமன்ற விசேட குழுவின் அறிக்கை செப்டெம்பர் 04ஆம் திகதி அக்குழுவின் தலைவர் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜயரத்னவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
குறித்த அறிக்கையிலேயே மேற்படி விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
2500 கிராம் அல்லது அதற்குக் குறைவான பிறப்பு நிறையுடன் பிறக்கும் பிள்ளைகள் குறைந்த பிறப்பு நிறையைக் கொண்டிருப்பவர்களாகக் கருதப்படுவதுடன், 2022 இல் நடத்தப்பட்ட தேசிய போசாக்கு மற்றும் நுண்போசணை கருத்தாய்வின் பிரகாரம் குறைந்த பிறப்பு நிறை 15.9% ஆகக் காணப்படுவதாக இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதுடன், 2023 ஜூன் போசாக்கு மதிப்பீட்டின் பிரகாரம் 2022ஆம் ஆண்டு தரவுகளோடு ஒப்பிடுகையில் கைக்குழந்தைகள் மற்றும் இரண்டு வயதுக்குக் குறைவான பிள்ளைகள் மத்தியில் நிறைக்குறைவு அதிகம் காணப்படுவுதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உயர்ந்த நிறை குறைவு, நுவரெலியாவில் 24.6% ஆக பதிவாகியுள்ளதுடன், இதற்கமைய ஒவ்வொரு நான்காவது பிள்ளையும் ஓரளவு அல்லது கடுமையான நிறை குறைவுடன் இருப்பது கண்டறியப்பட்டிருப்பதாகவும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Select-Committee-Rport-on-Child-Malnutrition-Tamil2023 ஜூன் மாதத்தில் இலங்கையில் ஏழ்மையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் விகிதாசாரம் 10% ஆக இருந்ததாக இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன், ஐந்து வயதிற்குக் குறைவான குழந்தைகளில் ஏறத்தாழ 16,000 குழந்தைகள் அல்லது 1.2% கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டால் (குறையூட்டம்) பாதிக்கப்பட்டிருப்பதாகவும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023 ஊட்டச்சத்து மாத அறிக்கைக்கு அமைய முந்தைய ஆண்டைவிட ஐந்து வயதுக்குக் குறைந்த குழந்தைகள் மத்தியில் குள்ளமாதல் 10.3% ஆகக் குறிப்பிடுவதுடன், இது 9.2% அதிகரிப்பாகும். நாள்பட்ட ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாக அதே வயதுடைய குழந்தைகளுடன் ஒப்பிடும்போது குள்ளமாதல் அல்லது உயரம் குறைதல் நீண்டகாலமாக ஏற்படுகின்றது என்றும் இந்த அறிக்கை கண்டறிந்துள்ளது.
வீடுகளில் உணவுப் பாதுகாப்பு உரிய முறையில் பேணப்படாமை இதற்குப் பிரதான காரணம் என்றும் சுட்டிக்காட்டப்படுகின்றது. 2022ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக ஒட்டுமொத்த சனத்தொகையில் 98% மக்கள் உணவு விலை உயர்வால் பாதிக்கப்பட்டதுடன், ஆண்டின் கடைசி ஆறு மாதங்களில் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட 74% குடும்பங்களால் உணவு அல்லது அன்றாட அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்ய முடியாதிருந்தது.
2023 மார்ச் மாதத்தில், 17% ஆக இருந்த உணவுப் பாதுகாப்பற்ற குடியிருப்புகளின் நிலை, மூன்றாவது காலாண்டில் 24% ஆக அதிகரித்துள்ளது. மொத்த குடும்பங்களில் 1/3 பகுதியினர் உணவு உட்கொள்ளும் வேளைகளைக் குறைத்துள்ளனர் அல்லது அவர்களது உணவு உட்கொள்ளலை மட்டுப்படுத்தியுள்ளனர். 1/4 பகுதியினர் அயலவர்களிடமிருந்து கிடைக்கும் உணவின் மூலம் வாழ்வதாக இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பிள்ளைகளின் போசாக்கை மேம்படுத்துவதற்கான முடிவுகள் மற்றும் பரிந்துரைகளையும் இந்த அறிக்கை உள்ளடக்கியுள்ளது. சிறுவர்கள் நாள்பட்ட போசாக்குக் குறைபாடுடையவர்களாக ஆவதற்கு முன்னர் அவர்களுக்கான உடனடிக் கவனம் தேவைப்படுகின்றது. மேலும், மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலம், (MCH), தரமான தாய் மற்றும் சேய் ஊட்டச்சத்து (MCN) சேவைகளை வழங்குவதற்குப் போதியளவு செயற்திறன் கொண்ட அதிக வெளிக்கள சுகாதாரப் பணியாட்தொகுதியினரின் தேவையையும் இந்த அறிக்கை வலியுறுத்தியுள்ளது. பாடசாலை சிறுவர்களுக்கா விட்டமின் ஏ இன் மேலதிக போசாக்கு முடிவடைந்திருப்பதன் காரணமாக இது நிறுத்தப்பட்டிருப்பதாகவும், இதனை மீண்டும் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் இதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களின் உணவுப் பாதுகாப்பு நிலையை மேம்படுத்துவதற்கான அவசர நடவடிக்கையின் தேவையும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
குழந்தைகளில் ஊட்டச்சத்து குறைபாட்டின் மையப் பகுதிகளை அடையாளம் காணவும், மிகவும் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்கள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டை நிவர்த்தி செய்ய காரணமான காரணிகளை நிவர்த்தி செய்வதற்கான அபாயத்தை வரைபடமாக்குவதற்கும் தற்போதுள்ள சுகாதார முகாமைத்துவத் தகவல் அமைப்புகளைப் பயன்படுத்தவும் அறிக்கை பரிந்துரைக்கிறது.
கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு தடையின்றி ஊட்டச்சத்து வழங்குதல், ஆரோக்கியமான மற்றும் குறைந்த விலை உணவுக்கான பொருட்கள் மலிவு விலையில் கிடைப்பதை உறுதி செய்வதற்கான பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்துதல், முன்பள்ளி உணவு மற்றும் பாடசாலை உணவு நிகழ்ச்சித்திட்டம் மற்றும் தரமான உணவு வழிங்கலிற்கான பாடசாலைச் சிற்றுண்டிச்சாலை வழிகாட்டல்கள் ஆகியவற்றின் அமுல்படுத்தலைக் கண்காணித்தல் உள்ளிட்ட குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால பரிந்துரைகள் இந்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளன.