Tuesday, October 8, 2024
Home » லயங்களை கிராமமாக்கும் திட்டம் குறித்து எதிர்க்கட்சிகளுக்கு புரிதல் இல்லை

லயங்களை கிராமமாக்கும் திட்டம் குறித்து எதிர்க்கட்சிகளுக்கு புரிதல் இல்லை

- 10ஏக்கர் காணியை பெற்று கிராமங்களாக மாற்றுவதே சிறந்த தீர்வு

by Prashahini
September 9, 2024 1:05 pm 0 comment

லயங்களை சுற்றியுள்ள 10ஏக்கர் காணியை பெற்று கிராமங்களாக மாற்றுவதே நாம் காணி உரிமையாளர்களாக மாற சிறந்த தீர்மானமாக இருக்க முடியும். இதனையே செய்ய இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கூறியுள்ளதாக இ.தொ.காவின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

ஹப்புத்தலையில் நேற்று (08) இடம்பெற்ற ஜனாதிபதியை ஆதரிக்கும் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றும் போதே செந்தில் தொண்டமான் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

உங்கள் அனைவருக்கும் தெரியும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றி என்பது உறுதியான விடயம். அவரின் வெற்றி உறுதியாகியுள்ள நிலையில் எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற போகிறார் என்பதற்காகவே நாம் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளோம்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மலையக மக்களுக்கு புதிய நபர் அல்ல. கடந்த காலத்தில் மலையக மக்களுக்கு பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்விற்கு அளிக்கின்ற ஆதரவில் மாற்றம் வருமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. எமது முடிவில் எந்த மாற்றங்களும் இல்லை. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஒரு முறை முடிவு செய்துவிட்டால், அந்த முடிவில் மீண்டும் மாற்றம் இருக்காது. அதுதான் இ.தொ.கா.

ஜனாதிபதிக்கு எப்போது ஆதரவு என இ.தொ.கா அறிவித்தது அன்று முதல் ஜனாதிபதியின் வெற்றிக்காக பாடுபட்டு வருகிறது. ஜனாதிபதியிடம் பல கோரிக்கைகளை முன்வந்துள்ளோம்.

அதில் முக்கிய கோரிக்கையாக லயன் அறைகளை அரசாங்கம் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் முன்வைத்திருக்கிறோம். 1980களின் மறைந்த தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான் நாடாளுமன்றத்துக்கு முதல் முறையாக சென்றபோது மலையகத்தில் ஒரு தனி வீடு கிடையாது.

ஒவ்வொரு வருடமும் 10000 வீடுகள் மலையகத்தில் கட்டப்படும் என அமைச்சரவை பத்திரமொன்றை மறைந்த தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான் நிறைவேற்றி, 2015ஆண்டு ஆறுமுகன் தொண்டமான் ஐயா மறையும் வரை 36,000 தனிவீடுகள் மலையகத்தில் கட்டப்பட்டுள்ளன.

2015ஆம் ஆண்டின் பின் ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்தில் 4,000 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. 44 வருடங்களில் மொத்தம் 40,000 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. மொத்தம் 2 இலட்சம் வீடுகள் மலையகத்தில் தேவையாக உள்ளன.

இதொகா பொய் வாக்குறுதிகளை அளிக்காது. இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள 10ஆயிரம் வீடுகள் மற்றும் அடுத்த 5 வருடத்தில் 5ஐயாயிரம் வீடுகள் கட்டப்படுமானால் மொத்தம் 15,000 வீடுகள்தான் இருக்கும்.

15,000 வீடுகள் கட்டப்பட்டால் இன்னும் ஒரு இலட்சத்து 85,000 வீடுகள் கட்டப்பட வேண்டும். ஐந்து தலைமுறைகளாக 200 வருடங்களாக வாழும் வாழும் வீட்டில் ஒரு ஆணி அடிக்க வேண்டும் என்றாலும் தோட்ட நிர்வாகத்திடம் செல்ல வேண்டியுள்ளது. அதனால், நாம் வாழும் வீட்டை உடைத்து கட்ட எவரிடமும் சென்று அனுமதி கோர தேவையில்லை.

வாக்காளர் அட்டையுள்ள அனைவருக்கும் வீட்டு உரிமையை வழங்குமாறு ஜனாதிபதியிடம் கூறியுள்ளோம். இது எமது உரிமை. இனி எவரிடமும் அனுமதி கோர தேவையில்லை. வீட்டு திட்டங்கள் வரும் பொது எங்காவது ஒரு மலையில் கொடுத்துவிடுகின்றனர். அதற்கு உட்கட்டுமானங்களை செய்ய பாரிய நிதி தேவைப்படுகிறது.

அதன் காரணமாகவே லயத்தை சுற்றியுள்ள 10 ஏக்கர் காணியை எமது மக்களுக்கு வழங்குங்கள் 25 வீடுகள் கட்ட வேண்டிய இடத்தில 50 வீடுகளை கட்ட முடியும் என ஜனாதிபதியிடம் கூறியுள்ளோம். அதனை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார்.

இதனை ஜனாதிபதிக்கு புரிய வைக்கிறதா? அல்லது எதிர்க்கட்சியினருக்கு விளக்கப்படுத்துவதா? லயங்களை சுற்றி 10ஏக்கர் காணியை பெற்று கிராமங்களாக்கி வீடுகளை உருவாக்குவது சாதகமான விடயமாகும்.

மேலும், நாட்டில் பொருளாதார நெருக்கடியும் வரிசை யுகமும் வந்தால் எந்த ஜனாதிபதியும் வரிசைகளில் நிற்கப்போதில்லை. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் காலத்தில் எந்த வரிசைகளும் உருவாக அவர் இடமளிக்கவில்லை. அதனை நடைமுறையிலும் அவர் காட்டியிருக்கிறார்.

எனவே, போலி வாக்குறுதி வழங்குவோரை நம்புவதில் அர்த்தமில்லை.” என்றார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x