Thursday, October 10, 2024
Home » யானையின் தாக்குதலினால் யாசகர் பலி

யானையின் தாக்குதலினால் யாசகர் பலி

by Prashahini
September 8, 2024 10:49 am 0 comment

யானையின் தாக்குதலினால் யாசகர் பலியான சம்பவம் கல்முனை பகுதியில் இடம்பெற்றது.

அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதான இலங்கை போக்குவரத்து சபை பஸ் தரிப்பிடத்திற்கு பின் பக்கமாக அமைந்துள்ள குளக்கட்டில் நேற்று  (07) அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த யாசகர் பஸ் தரிப்பிடத்தில் வழமை போன்று தங்கி இருந்து யாசகம் பெறுபவர் எனவும் காலை கடனை கழிப்பதற்கு குளக்கட்டினை நோக்கி சென்றிருந்த நிலையில் இவ்வாறு யானை தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாக குறிப்பிடப்படுகிறது.

கல்முனை தலைமையக பொலிஸார் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்கள் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் யானைத்தாக்குதலுக்கு உள்ளானவர் பெரிய நீலாவணை தொடர்மாடி வீட்டுத் திட்டத்தை முகவரியாக கொண்ட செல்லையா வேலாயுதம் என்ற 68 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தர் என்பதுடன் 03 பிள்ளைகளின் தந்தையுமாவார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

அத்துடன் குறித்த நபரை தாக்கியதாக கூறப்படும் தனியன் யானை உட்பட பல யானைகள் தாக்குதல் இடம்பெற்ற பகுதியில் இருந்து சுமார் 2 கிலோ மீற்றர் தூரத்தில் நிலை கொண்டு மேய்ச்சலில் ஈடுபட்டுள்ளன.

மேலும் கல்முனை நீதிமன்ற பதில் நீதிவான் அப்துல் ரசீட் முஹம்மது கலீல் கட்டளையின் பிரகாரம் பிரதேச மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீட் அல் – ஜவாஹிர் சம்பவ இடத்திற்கு சென்று மரண விசாரணை மேற்கொண்ட பின்னர் உடற்கூற்று பரிசோதனைக்காக கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்ட பின்னர் பூரண விசாரணையின் பின் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் அம்பாறை மாவட்டத்தில் யானை தாக்குதலுக்கு இலக்காகி பலர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் தற்போது வயல் அறுவடை காலம் என்பதால் யானை நடமாட்டமும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாறுக் ஷிஹான்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x