மத்திய கென்யாவில் விடுதிப் பாடசாலை ஒன்றின் தங்குமிடத்தில் ஏற்பட்ட தீயில் குறைந்தது 17 மாணவர்கள் கொல்லப்பட்டதோடு மேலும் 13 பேர் கடும் தீக்காயத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
கியேரி பகுதியின் ஆரம்பப் பாடசாலையில் நேற்று முன்தினம் இரவு (05) இடம்பெற்ற இந்த விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அச்சம் வெளியிடப்பட்டிருப்பதோடு காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பாதிக்கப்பட்டவர்களின் வயது மற்றும் அடையாளம் தொடர்பான விபரம் உடன் வெளியாகவில்லை. எனினும் அவர்கள் சிறுவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆரம்பப் பாடசாலை 5 மற்றும் 12 வயதுக்கு இடைப்பட்ட வயதுடைய சுமார் 800 மாணவர்களை பராமரிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தீ ஏற்பட்டதற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருவதோடு, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பொலிஸ் பேச்சாளர் ரெசிலா ஒனியங்கோ குறிப்பிட்டுள்ளார். ‘சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்ட உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு தீயில் கருகியுள்ளது’ என்று ஒனியங்கோ ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.