அமெரிக்காவின் ஜோர்ஜிய மாநிலத்தில் தனது உயர் கல்லூரியில் நால்வரை சுட்டுக்கொன்றதாக குற்றம்சாட்டப்பட்ட 14 வயது மாணவனின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
54 வயதான கொலின் கிரே என்ற அந்த ஆடவர் மீது கொலை தொடர்பில் நான்கு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவரது மகன் மீதும் வயது வந்தவராகக் கருதி நிர்வாகம் நான்கு குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளது.
தனது மகன் துப்பாக்கி வைத்திருப்பதை தந்தை தெரிந்துகொண்டே அனுமதித்திருப்பதாக ஜோர்ஜியாவின் புலன்விசாரணை பணியகத்தின் பணிப்பாளர் கிறிஸ் ஹோசி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். இதேநேரம் அந்த சிறுவன் துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தி ஏ.ஆர்.15 ரக துப்பாக்கியை மகனின் விடுமுறை பரிசாக தந்தையே வாங்கி இருப்பதாக நம்பகமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி சி.என்.என். செய்தி வெளியிட்டுள்ளது.
அல்பச்சி உயர் பாடசாலையில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டில் இரு மாணவர்கள் மற்றும் இரு ஆசிரியர்கள் கொல்லப்பட்டதோடு மேலும் ஒன்பது பேர் காயமடைந்தனர்.