இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது.
லண்டன், கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நேற்று ஆரம்பமான இந்தப் போட்டியின் 15 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் மழை குறுக்கிட்டது. இதனால் போட்டியின் பகல்போசன இடைவேளைக்குப் பின்னரும் ஆட்டம் ஆரம்பிக்கப்படவில்லை.
இதில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி இங்கிலாந்தை முதலில் துப்பெடுத்தாட பணித்தது. இதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி 15 ஓவர்களுக்கு 1 விக்கெட்டை இழந்து 76 ஓட்டங்களை பெற்றிருந்தது. ஆரம்ப வீரர் டான் லோரன்ஸ் 5 ஓட்டங்களுக்கு லஹிரு குமாரவின் பந்துக்கு ஆட்டமிழந்தார். பென் டக்கட் ஆட்டமிழக்காது 51 ஓட்டங்களைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டியில் இலங்கை அணி இரண்டு மாற்றங்களுடன் களமிறங்கியுள்ளது. ஆரம்ப வீரர் நிஷான் மதுஷங்கவுக்கு பதில் குசல் மெண்டிஸ் அழைக்கப்பட்டிருப்பதோடு சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜயசூரியவுக்கு பதில் வேகப்பந்து வீச்சாளர் விஷ்வ பெர்னாண்டோ இடம்பெற்றுள்ளார்.
இலங்கை அணி ஏற்கனவே டெஸ்ட் தொடரை 0–2 என இழந்திருக்கும் நிலையிலேயே இந்த டெஸ்ட் போட்டியில் களமிறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.