உலகின் ஆரம்ப காலத்தில் உருவான குடியிருப்புக்கள் நதிக் கரைகளில்தான் தோற்றுவிக்கப்பட்டன. அங்கேதான் உலக நாகரிகங்களும் தோற்றுவிக்கப்பட்டன என்று வரலாறு கூறுகின்றது. குடியிருப்பானது மனித வாழ்க்கைக்கு மிகவும் அத்தியாவசியமானது. குடியிருப்பு என்பது வீடு, சுகாதார வசதி, குடிநீர் வசதி, நல்ல சுற்றாடல், வீதிப் போக்குவரத்து, தொலைத்தொடர்பு, சமூக கட்டமைப்பு ஆகிய அனைத்தையும் கொண்டதே ஆகும். இதற்கு அமைவாகவே குடியிருப்புக்களும் நகரங்களும் அமைய வேண்டுமென்பது ஐக்கிய நாடுகள் சபையின் இலட்சியமாகும்.
இந்த இலட்சியத்தைக் கொண்டு மனித குடியிருப்பு குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் முதல் மாநாடு கனடாவின் வான்கூவரில் 1976 இல் நடைபெற்றது. ஐ.நா பொதுச்சபையின் சிபாரிசின் பெயரில் 1985 இல் ஒவ்வொரு வருடமும் உலக குடியிருப்பு தினம் அனுஷ்டிக்கப்பட வேண்டுமென்று முடிவுசெய்யப்பட்டது. அதற்கமைய முதலாவது உலக குடியிருப்பு தினம் 1986 தொடக்கம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
சர்வதேச குடியிருப்பு தினம் இந்த வருடம் செப்டெம்பர் மாதம் 07 ஆம் திகதி “சிறந்த நகர்ப்புற எதிர்காலத்தை உருவாக்க இளைஞர்களை ஈடுபடுத்துதல்” எனும் தொனிப்பொருளுக்கமைய அனுஷ்டிக்கப்படவிருக்கிறது.
உலகில் வாழும் அனைவரும் குடியிருப்பு வசதிகளை கொண்டிருக்க வேண்டும் என்பதே ஐக்கிய நாடுகள் சபையின் இலட்சியம். ஆனால் இன்று உலகில் வாழும் மக்களின் தொகை 817 கோடியையும் தாண்டி விட்டது. 200 கோடி மக்கள் வீடற்றோர்களாக இருக்கின்றனர். இவர்கள் சுத்தமான குடிநீர் வசதி, மின்சார வசதி, சுகாதார வசதி ஆகியன இன்றி வாழ்கின்றனர். நகரங்களிலும் 40 சதவீதத்தினர் சுத்தமான நீர், பொதுவசதிகள் என்பன கிடைப்பதில்லை. இன்று உலக சனத்தொகையில் 55 சதவீதத்தினர் நகரங்களிலேயே வாழ்கின்றனர். 2025 இல் 2/3 பங்கினர் நகரங்களில் தான் வாழ்வார்கள் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
தற்போது உலகில் நகர்ப்புறங்களில் சனத்தொகையில் அரைவாசிப் பேர் திட்டமிடப்படாத ஆக்கிரமிக்கப்பட்ட குடியேற்றங்களில் தங்கி வாழ்கின்றனர். எனவே தொற்று நோய்களை கொண்ட சுற்றாடலில் அமைந்த தரக்குறைவான வீடமைப்பு திட்டங்களிலேயே வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உலக சனத்தொகையானது கி.பி. 01 இல் 2 கோடியாக காணப்பட்டது. இன்று 817 கோடி ஆகும். சனத்தொகை அதிகரிக்க அதிகரிக்க குடியிருப்பு வசதிகளில் தரக்குறைவு ஏற்படும். இதனால் தொற்று நோய்கள், புதிய நோய்கள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. சனத்தொகையானது அதிகரிக்கும் போது குடியிருப்பு தரக்குறைவாக இருக்கும் நிலையில் பெண்களின் சீரழிவு, சிறுவர் துஷ்பிரயோகம், வறுமை, வேலையின்மை காணப்படும். இவற்றை தவிர்க்கும் முகமாக உலகில் வாழும் அனைவருக்கும் தரமான குடியிருப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் ஐக்கிய நாடுகள் சபையின் இலட்சியமாகும்.
மூன்றாம் உலக நாடுகளின் சனத்தொகையானது விரைவாக அதிகரித்துச் செல்லும் அளவுக்கு குடியிருப்பு வசதிகள் பெருகவில்லை. சுகாதார வசதிகளும் குடிநீர் வசதிகளும் போதியதாக இல்லை. உலகெங்கும் நகரமயமாக்கல் மிகவும் வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எனவே இந்த விடயத்தில் மிகவும் அவதானமாக நன்கு திட்டமிட்டு செயலாற்ற வேண்டும் என்பதிலும் ஐக்கிய நாடுகள் சபையினர் அக்கறை கொண்டுள்ளனர்.
நகரங்களை மக்கள் அதிகளவில் நாடுவதனால், நகரங்களில் மக்கள் வாழ்வதற்கு பற்றாக்குறை ஏற்படும் போது புதிய நகரங்களை உருவாக்குகிறார்கள். இதனால் சுற்றாடல் பாதிக்கப்படுகின்றது.
திட்டமிடப்படாத குடியிருப்புக்கள் காரணமாக உலகின் வனம் முற்றாக அழிந்துவிடும் ஆபத்துள்ளது. உலகின் வெப்பவலயக் காடுகள் ஒரு மணித்தியாலத்திற்கு சராசரியாக 60,000 ஏக்கர் என்ற வீதத்தில் அழிந்த வண்ணம் இருக்கின்றன. இலங்கைக் காடுகளில் இன்று எஞ்சியுள்ளது 25 சதவீதம் மட்டுமே. மனித அபிவிருத்திக்காகவும் அடுத்த சந்ததிக்காகவும் இயற்கை வளங்களை திட்டமிட்டு பேண வேண்டிய அவசியத்தை ஒவ்வொரு மனிதனும் உணர்ந்து செயற்பட வேண்டும்.
கலாபூஷணம்
பரீட் இக்பால்