ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் இரு வாரங்களே உள்ளன. தேர்தல் பிரசாரங்கள் சூடு பிடித்துள்ளன. ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களும், அவர்களது அணியின் அரசியல் முக்கியஸ்தர்களும் தீவிரமான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இலங்கையில் இம்முறை ஜனாதிபதித் தேர்தல் முன்னொருபோதும் இல்லாதவாறு மிகுந்த பரபரப்பு நிறைந்ததாகக் காணப்படுகின்றது. இத்தேர்தலில் எல்லாமாக 39 பேர் வேட்பாளர்களாக உள்ள போதிலும், முன்னிலை வேட்பாளர்களாக மூவர் மாத்திரமே உள்ளனர். அம்மூவரில் இருவர் தத்தமது கட்சியின் சார்பில் போட்டியிடுகின்றனர். ஆனால் முன்னிலை வேட்பாளர்களில் ஒருவரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுயேச்சை வேட்பாளராகவே போட்டியிடுகின்றார்.
முன்னிலை வேட்பாளர்கள் மூவருக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவுவதை தேர்தல் களம் எடுத்துக் காட்டுகின்றது. எனினும் தேர்தல் பிரசாரங்களில் ஒன்றுதிரண்டுள்ள மக்கள் கூட்டத்தினரை அடிப்படையாகக் கொண்டு ஒருபோதுமே வெற்றிவாய்ப்பை முன்கூட்டிக் கணித்துவிட முடியாது. இதற்கான உதாரணங்களாக கடந்தகால தேர்தல்கள் பலவற்றைக் குறிப்பிட முடியும்.
குறித்ததொரு வேட்பாளரின் பிரசாரக் கூட்டத்துக்கு வருகை தருகின்ற மக்கள் அனைவருமே அவ்வேட்பாளருக்கு தேர்தலில் வாக்களிப்பரென்பதை உறுதிப்படுத்திவிட முடியாது. அதேநேரம் அப்பிரசாரக் கூட்டத்துக்கு வருகை தராதவர்களும் அவ்வேட்பாளருக்கு தேர்தலில் வாக்களிப்பதற்கு வாய்ப்பு இருக்கின்றது. குறித்த வேட்பாளருக்கு வெளிப்படையாக ஆதரவு அளித்து அட்டகாசம் புரிகின்ற ஜனரஞ்சமான சுபாவத்தை விரும்பாதவர்களும் உள்ளனர்.
ஆகவே தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் மக்கள் கூட்டத்தைப் பார்த்து தேர்தல் வெற்றியைக் கணித்துவிட முடியாது.
இதுதவிர, உறங்குநிலை வாக்குகளையும் இவ்விடத்தில் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. வாக்காளர்களில் ஏராளமானோர் தங்களை எவ்வேட்பாளருக்குச் சார்பானவரென்பதை இனங்காட்டிக் கொள்வதில்லை. அவர்களது வாக்குகள் உறங்குநிலை வாக்குகளாகக் கொள்ளப்படுகின்றன.
உண்மையில் அவர்கள்தான் சிந்தித்து முடிவெடுப்பவர்கள் ஆவர். தங்களது ஆதரவை வெளிக்காட்டிக் கொள்ளாமல், அமைதியாக இருந்து சிந்தித்து வாக்களிப்பவர்கள் இவர்களாவர். நாட்டின் தலைமைத்துவத்துக்குப் பொருத்தமான அனுபவமும், ஆற்றலும், ஆளுமையும் நிறைந்த வேட்பாளர் யார்? பிரசாரக் கூட்டங்களில் உரத்துக் கோஷமெழுப்பி, தனது இயலாமையை மூடிமறைக்கின்ற பலவீனமான வேட்பாளர் யார்?
இவ்வாறான வினாக்களை அலசி ஆராய்ந்து தீர்க்கமான முடிவுடன் வாக்களிப்போர் நாட்டில் ஏராளமானோர் உள்ளனர். இவ்விதமான வாக்காளர்களில் அனைவரையுமே கற்றறிந்தவர்களென்று கூறிவிட முடியாது. சிந்தனையாற்றல் என்பது கற்றலினால் மாத்திரம் வருவதல்ல. பயனுள்ள வாசிப்பு, ஆழமான சிந்தனை, நம்பத்தகுந்த ஊடகங்களைப் பின்பற்றுதல் போன்ற பலவிதமான செயற்பாடுகளால் அறிவு பெற்றோர் ஏராளமானோர் உள்ளனர்.
இவ்வாறான அமைதியான வாக்காளர்களின் தீர்மானத்திலேயே தேர்தலின் வெற்றி தீர்மானிக்கப்பட முடியும். பிரசாரக் கூட்டங்களுக்குத் திரளுகின்ற மக்கள் கூட்டத்தினரை வைத்து தேர்தலின் வெற்றியைக் கணிக்க முடியாது என்பதை எமது நாட்டின் கடந்தகால தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டியுள்ளன என்பது உண்மை.
இலங்கையின் அரசியல் எப்போதுமே விசித்திரமானது. கடந்த காலங்களில் இனவாதத்தைத் தூண்டுகின்ற அரசியல் கலாசாரம் பின்பற்றப்பட்டது. அரசியல் முக்கியஸ்தர்கள் பலர் மற்றைய இனங்கள் மீதான வெறுப்பை தமது மக்கள் மத்தியில் விதைத்து வாக்குகளை அறுவடை செய்தனர். இனவாதம் என்பது அரசியலில் பெரும் துரும்பாகப் பயன்படுத்தப்பட்டது. ஆட்சியில் இருந்தவர்களே இனவாதத் துரும்பைப் பயன்படுத்தி வாக்காளர்களைக் கவர்ந்திழுத்தமை தெரிந்த விடயம்.
இலங்கையின் அரசியல் வரலாற்றில் சிறந்ததொரு ஜனநாயகவாதியாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கணிக்கப்படுகின்றார். அதேவேளை இனவாதம் போன்ற துரும்புகளைப் பயன்படுத்தி குறுக்குவழியில் அரசியல் செய்கின்ற சுபாவம் இல்லாத தலைவராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராட்டப்படுகின்றார். தனது கடந்தகால அரசியல் செயற்பாடுகளை ஒளிவுமறைவின்றி, தெளிவான ஆதாரங்களுடன் மக்களுக்கு வெளிப்படுத்துகின்ற அரசியல் தலைவராகவும் அவர் வர்ணிக்கப்படுகின்றார்.
அதேசமயம் தனது எதிர்காலத் திட்டங்களை மக்களிடம் தெளிவாக வெளிப்படுத்துகின்ற தன்மையையும் அவர் கொண்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னைய அரசாங்கங்களில் அமைச்சராகவும், பிரதமராகவும் பதவி வகித்த காலங்களிலேயே நாட்டில் சிறப்பான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன என்பதை அனைவரும் அறிவர். நாட்டின் கல்விக்கொள்கையில் அவர் அறிமுகப்படுத்திய சிறப்பான திட்டங்கள் ஏராளம்.
ஜனரஞ்சமான கோஷங்களால் ஈர்க்கப்பட்டு எந்தவொரு வேட்பாளருக்கும் வாக்களிக்கும் மனோநிலையில் மக்கள் இன்று இல்லை. ஒவ்வொரு வேட்பாளரின் ஆற்றல், ஆளுமையை வைத்தே மக்கள் தங்களது எதிர்காலத் தலைவரைத் தீர்மானிக்கின்றனர்.