சௌமிய மூர்த்தி தொண்டமான் தலைமையில் எமது மலையக தலைமைகள் அறவழியில் முன்னெடுத்த போராட்டம் காரணமாகவே மலையக மக்களுக்கு குடியுரிமை மற்றும் வாக்குரிமை என்பன கிடைக்கப்பெற்றன.
குறிப்பாக பிரஜாவுரிமை பிரச்சினைக்கு ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த காலப்பகுதியிலேயே முற்றுப்புள்ளி வைத்தார் என்பதை மறந்துவிடக்கூடாது என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து இன்று (07) பூண்டுலோயா ஹெரோவ் தோட்டப் பகுதியில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஆலோசனைக்கமைய, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ராமேஷ்வரனின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் கட்சியின் பிரதி பொதுச் செயலாளர் எஸ்.செல்லமுத்து, பிரதி தேசிய அமைப்பாளர் சசிகுமார், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான பாரதிதாசன், ரஜினிகாந்த், சிவகொழுந்து, செல்வமதன், ரஜீவ்காந்தி, கிளோரியா உள்ளிட்ட கட்சி முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்துக் கொண்டனர்.
அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த காலப்பகுதியிலேயே பிரதேச செயலகங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. பிரதேச சபைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. இவ்வாறு எமது மக்களுக்காக பல சேவைகளை செய்துள்ள ஜனாதிபதி காணி உரிமை வழங்குவதற்கான நிதி ஒதுக்கீடுகளையும் மேற்கொண்டுள்ளார். எனவே, ரணில் விக்ரமசிங்க எதையும் செய்யமாட்டார் என எதிரணிகளால் முன்னெடுக்கப்படும் பிரச்சாரம் போலி என்பது இதன்மூலம் உறுதியாகின்றது.
ஆறு பேர் அல்ல இரண்டுபேர் இருந்தால்கூட மக்கள் ஆதரவுடன் பேரம்பேசி உரிமைகளையும், அபிவிருத்திகளையும் வென்றெடுக்கும் வல்லமை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸிற்கு உள்ளது. அன்று முதல் இன்றுவரை இதனை நாம் நிரூபித்து வருகின்றோம்.
தனது தந்தை குடியுரிமை, வாக்குரிமை வழங்கினார் எனக் கூறிக்கொண்டு ஒருவர் வலம் வருகின்றார். எமது பெருந்தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான் தலைமையில் அன்று முன்னெடுக்கப்பட்ட அஹிம்சைவழி போராட்டத்தின் பிரதிபலனாகவே இந்த உரிமைகள் கிடைக்கப்பெற்றன. மாறாக எவரும் தங்கதட்டில் வைத்து இவற்றை தரவில்லை. அவரின் தந்தையைக்கூட எமது பெருந்தலைவரே காப்பாற்றினார் என்பதை மறந்துவிடக்கூடாது.
அதுமட்டுமல்ல பிரஜாவுரிமை பிரச்சினைக்கு ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த காலப்பகுதியிலேயே முழுமையாக முற்றுப்புள்ளி வைத்தார் என்பதையும் நாம் நன்றியுடன் நினைவுகூர வேண்டும். எனவே, மலையக மக்கள் தொடர்பில் அக்கறை செலுத்தக்கூடிய அதேபோல செய்யக்கூடிய வகையிலான உறுதிமொழிகளை வழங்கியுள்ள தலைவரை ஆதரிக்க வேண்டியது எமது பொறுப்பாகும். செப்டம்பர் 21 ஆம் திகதி மக்கள் அவருக்கு வாக்களிக்க வேண்டும்.
பரீட்சித்து பார்ப்பதற்கு இது பிரதேச சபைத் தேர்தல் அல்ல, நாட்டின் தலைவிதியை தீர்மானிக்கப்போகின்ற ஜனாதிபதி தேர்தலாகும். எனவே, உலகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சிறந்த அனுபவமுள்ள ஒரு தலைவரின் பின்னால் அணிதிரள்வோம். அப்போதுதான் நாடும், நாமும் மேம்பட முடியும்.” – என்றார்.