பூமியுடன் மோதவந்த சிறிய விண்கல் ஒன்று பிலிப்பைன்ஸ் வானுக்கு மேலால் இரவு வானில் தீப்பந்தாக வளிமண்டலத்தில் பாதுகாப்பாக சிதைந்தது என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா குறிப்பிட்டுள்ளது. சுமார் 3 அடி கொண்ட இந்த விண்கல் அமெரிக்காவின் அரிசோனாவில் வானியலாளர்களால் அவதானிக்கப்பட்டிருப்பதோடு தொடர்ந்து அது பிலிப்பைன்ஸின் லூசோன் தீவுக்கு அருகில் மேற்கு பசுபிக் பெருங்கடலுக்கு மேலால் கடந்த புதனன்று துண்டுகளாக எரிந்து சிதறியுள்ளது.
2024 ஆர்.டபிள்யு.1 என்று பெயரிடப்பட்ட இந்த விண்கல் பூமியில் விழுவதற்கு முன்னர் மனிதகுலத்தால் இதுவரை அவதானிக்கப்பட்ட ஒன்பதாவது விண்கல்லாக உள்ளது என்று ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இந்த அளவான விண்கற்கள் எந்த ஆபத்தும் இன்றி ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை பூமியை நோக்கி வருவதாக அது குறிப்பிட்டது.
பூமியின் வளிமண்டலத்தில் தீப்பந்தாக எரிந்து சிதறும் இந்த விண்கல்லின் காட்சியை நாசா இணையதளம் வெளியிட்டுள்ளது.