அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்தில் உள்ள உயர் பாடசாலை ஒன்றில் 14 வயது சிறுவன் ஒருவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சக மாணவர்கள் இருவர் மற்றும் ஆசிரியர்கள் இருவர் கொல்லப்பட்டதோடு மேலும் ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர்.
கடந்த புதன்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் சந்தேக நபரான சிறுவன் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்பதோடு இந்த சிறுவன் பாடசாலையில் துப்பாக்கிச்சூடு நடத்துவதாக இணையதளத்தில் எச்சரித்ததை அடுத்து பொலிஸாரால் கடந்த ஆண்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோல் கிரே என்ற இந்த சிறுவனை வயது வந்த ஒருவராகக் கருதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என்று ஜோர்ஜிய புலனாய்வுப் பணியக பணிப்பாளர் கிறிஸ் ஹோசி தெரிவித்துள்ளார்.
சிறுவன் துப்பாக்கிச்சூடு நடத்த ஆரம்பித்த விரைவிலேயே பாடசாலையில் காவலில் ஈடுபட்ட பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார். சிறுவன் தனியாக இந்த செயலில் ஈபட்டிருப்பதாக விசாரணையில் தெரியவந்தபோதும் தாக்குதலுக்கான காரணத்தை விசாரணையாளர்களிடம் சிறுவன் கூற மறுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் பாடசாலைகளுக்குள் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் அடிக்கடி இடம்பெறுவதோடு வெர்ஜினிய தொழில்நுட்ப கல்லூரியில் 2007 ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 30க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டது அதிகபட்சமாகும்.