தென்னாபிரிக்க ஏ அணிக்கு எதிரான மூன்றாவது உத்தியோகபூர்வமற்ற ஒருநாள் போட்டியில் இலங்கை ஏ அணி 5 விக்கெட்டுகளால் தோல்வியை சந்தித்தது. எனினும் முதல் இரு போட்டிகளையும் வென்ற இலங்கை ஏ 2–1 என தொடரை கைப்பற்றியது.
போட்செப்ஸ்ட்ரூமில் நேற்று முன்தினம் (04) நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை ஏ அணி 50 ஓவர்களுக்கும் 6 விக்கெட்டுகளை இழந்து 308 ஓட்டங்களை பெற்றது. ஆரம்ப வீரர் லஹிரு உதார 90 ஓட்டங்களை பெற்றதோடு நுவனிந்து பெர்னாண்டோ 50 ஓட்டங்களை பெற்ற நிலையில் மத்திய பின்வரிசையில் சமிந்து விக்ரமசிங்க ஆட்டமிழக்காது 70 ஓட்டங்களை விளாசியமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பதிலெடுத்தாடிய தென்னாபிரிக்க ஏ அணிக்காக ஆரம்ப வீரர் டேவிட் பெடிங்கம் 129 பந்துகளில் 20 பௌண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காது 188 ஓட்டங்களை பெற்றார். இதன்மூலம் தென்னாபிரிக்க ஏ அணி 42.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 311 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
தென்னாபிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை ஏ அணி அடுத்து தென்னாபிரிக்க ஏ அணியுடன் இரு உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டிகளில் ஆடவுள்ளது. இதன் முதல் போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (08) ஆரம்பமாகும்.