எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு தொடர்பான நற்செய்திகள் கிடைத்து வருவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாட்டைக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்காக தமது வாக்குகளைப் பயன்படுத்திய அனைத்து அரச உத்தியோகத்தர்களுக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டார்.
இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச வெற்றிபெற முடியாது எனவும், அவரின் முட்டாள்தனமான செயற்பாடுகள் அனுரவிற்கு ஆதரவாக அமையும் எனவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாட்டைப் பாதுகாக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொறுப்பை நிறைவேற்றி, நாட்டுக்காக ஒன்றிணைந்து செயற்படுமாறு அனைத்து ஐ.தே.க உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்தார்.
மஹியங்கணை பொதுவிளையாட்டரங்கில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ‘இயலும் ஸ்ரீலங்கா’ வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்ததாவது:
“தபால் வாக்களிப்புக்கள் ஆரம்பித்துள்ளன. நல்ல செய்தி கிடைத்திருக்கிறது. இரு வருடங்களுக்கு முன்பாக இப்படியொரு தேர்தலை நடத்தும் வாய்ப்பு இருக்கவில்லை. சிலர் பாராளுமன்றத்தை முடக்க வந்தனர்.
அதற்குச் சந்தர்ப்பம் அளிக்காமல் அவர்களை வெறும் கையோடு திருப்பி அனுப்பினோம்.
மருந்து, எரிபொருள்,எரிவாயு வரிசைகள் இருந்தன. எவருமே ஏற்க இயலாது என்று சொன்ன போது, ‘இயலும் ஸ்ரீலங்கா’ என்று சொல்லி நாங்கள் பணிகளை ஆரம்பித்தோம். இன்று நல்ல நிலைத்தன்மை கிட்டியுள்ளது. அன்று தட்டுப்பாடாக இருந்த பொருட்கள் இன்று கிடைக்கின்றன. பொருட்களின் விலையும் குறைந்து வருகின்றது.
இந்த நாட்டில் நாம் ஆரம்பித்த பயணம் எதிர்காலத்திலும் தொடர வேண்டும். மக்களுக்கு கஷ்டம் இருப்பதை ஏற்றுக்கொள்கிறோம். சரிந்த பொருளாதாரத்தை ஒரேயடியாக மீட்க முடியாது. சர்வதேசத்தின் உதவி எமக்கு இருக்கிறது.
அதனை கொண்டு வாழ்க்கைச் சுமையை குறைக்கவும், தொழில் வாய்ப்புக்களை பலப்படுத்தவும், வரி சுமையைக் குறைக்கவும், ‘உறுமய’, ‘அஸ்வெசும’ போன்ற மக்களுக்கான நிவாரணத் திட்டங்களைப் பாதுகாக்கவும் வேண்டும்.
நாட்டைப் பொறுப்பேற்றதன் பின்னர் முதலில் குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கு நிவாரணம் வழங்கினோம். இன்னும் அதிகமானவர்களுக்கு அந்த நிவாரணம் கிடைக்கும். விவசாயிகளுக்கு நன்றிக்கடன் செலுத்தும் முகமாகவே அதனைச் செய்தோம். இனிவரும் நாட்களில் வரிச்சுமையைக் குறைப்போம். விவசாயத் துறையை மேலும் பலப்படுத்துவோம். மக்களுக்கு காணி உறுதிகளைப் பெற்றுக்கொடுக்கும் முயற்சிகளையும் தொடர்வோம்.
சுமார் 85 வருடங்களுக்கும் மேலாக மக்களுக்கு காணி உறுதிகள் கிடைத்திருக்கவில்லை. அதனாலேயே தற்போது மக்களுக்கான உரிமைகளை வழங்குகிறேன். இனிவரும் காலங்களில் விவசாய நவீனமயமாக்கல் பணிகளையும் முன்னெடுக்க எதிர்பார்க்கிறோம். அதனால் எதிர்காலத்தில் உலகின் பெருமளவானோரின் உணவுத் தேவையை நாம் பூர்த்தி செய்ய முடியும்.
பழைய வாத்தியம் வாசிப்பவர்களை விட்டுவிடுங்கள். அடுத்த வருடத்திலிருந்து நாம் ஒரு இலட்சம் தொழில்வாய்ப்புக்களை உருவாக்குவோம். ஸ்மார்ட் விவசாயம் செய்யவும் நிவாரணங்களை வழங்குவோம். மேலும் ஐம்பதாயிரம் பேருக்கு வெளிநாட்டு தொழில்களுக்கான பயிற்சிகளைப் பெற்றுக்கொள்ள கொடுப்பனவையும் வழங்குவோம்.
இன்றைய நிலையில் சஜித் பிரேமதாசவால் அனுர குமார திசாநாயக்கவை தோற்கடிக்க முடியாது. அந்த வகையில் சஜித் பிரேமதாச இப்போதே தோற்றுப் போயுள்ளார். அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் காலத்தில் அவரை மிஞ்சிய வேட்பாளராக அனுரகுமார திசாநாயக்க இருக்கிறார். நல்லாட்சி அரசாங்கம் இருந்த காலத்தில் கூட அனுர அந்த அரசாங்கத்துடன் இணைந்தே செயற்பட்டார். ஆனால் இன்று அநுர சஜித்தை மிஞ்சி வந்துள்ளார். சஜித் செய்யும் சில முட்டாள்தனமான செயற்பாடுகள் அநுரவிற்கு சாதமாக அமைந்துள்ளன. எனவே ஐக்கிய தேசியக் கட்சியை முன்னோக்கி கொண்டு வந்த தலைவர்களின் பணியை இன்று நானே ஆற்றுகிறேன் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
அதனால் செப்டம்பர் 21 சிலிண்டர் சின்னத்துக்கு வாக்களியுங்கள் இல்லாவிட்டால். சிலிண்டரும் இருக்காது. உங்கள் விவசாயமும் பாதுகாக்கப்படாது.”
இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம:
“அன்று அரசாங்கம் கைவிட்ட நாட்டை ஏற்றுக்கொள்ள எதிர்க்கட்சிக்கும் திராணி இல்லாத வேளையிலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க துணிச்சலாக முன்வந்தார். அவருக்கு நாங்களும் ஆதரவை வழங்கினோம். ஜனாதிபதி தனது அனுபவம், சர்வதேச தொடர்புகளைப் பயன்படுத்தி நாட்டை மீட்டெடுத்தார்.
உலகின் பல நாடுகள் பொருளாதார நெருக்கடியால் நலிவடைந்துள்ளன. ஆனால் இலங்கையை மீட்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முடிந்தது. பொறுப்பு கிடைத்தபோது ஓடிப்போனவர்கள். இன்று வந்து ஆட்சி அதிகாரத்தை கோருகிறார்கள். எனவே அவர்களைத் தெரிவு செய்வதா அல்லது கஷ்டங்களிலிருந்து மக்களை மீட்ட தலைவர் வேண்டுமா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும்”.
இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க:
“எந்த நெருக்கடியிலும் நாட்டை ஏற்றுக்கொண்டு மீட்டெடுக்க கூடிய தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மட்டுமே. சிலர் நாடு அனுரவிற்கு என்கிறார்கள். ஆனால் அநுரவிற்கு சரியாக நாட்டை நிர்வகிக்க முடியுமா என்பதையும் மக்கள் சிந்திக்க வேண்டும். எனவே அனுபவம் மிக்க ஒரு சாரதி இருக்கும்போது, புதிய சாரதியிடம் வாகனத்தை கொடுத்து படுகுழியில் தள்ளிவிடக்கூடாது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்”.
முன்னாள் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ:
“செப்டம்பர் 21 வாக்குசீட்டில் சரியான இடத்திற்கு வாக்களிக்க தவறினால் மக்கள் அதன் பிரதிபலன்களை அனுபவிக்க நேரிடும். இன்று வேறு நிற ஆடைகளை அணிந்துகொண்டிருந்தாலும், திசைக்காட்டி என்று பெயர் மாற்றிக்கொண்டாலும் அவர்கள் முந்தைய ஜே.வி.பி.காரர்கள் என்பது நாட்டு மக்களுக்குத் தெரியும்.
நாடு அனுரவிற்கு என்கிறார்கள். அனுரவிற்கு நாடு சென்றால், நாடு இருளை நோக்கி செல்லும் என்பதை மக்கள் மறந்துவிடக்கூடாது. தற்போது அனுரவிற்கு ஒரு பயம் ஏற்பட்டுள்ளது. தவறியேனும் ஜனாதிபதி பதவி கிடைத்துவிட்டால் தான் என்ன செய்வது என்ற பதற்றம் அவருக்கு ஏற்பட்டுள்ளது”.
அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா
“ஜே.வி.பி யுகம் மீண்டும் இந்நாட்டு மக்களுக்கு வேண்டுமா? நான் எல்லா அரசாங்களிலும் அமைச்சராக இருந்தாக அனுர குமார திசாநாயக்க கூறுகிறார். எனது காலத்தில் நாட்டுக்காக பல சேவைகளை செய்திருக்கிறேன். நாங்கள் கட்சி மாறியதாக கூறுகிறார்கள். ஆனால் ஜே.வி.பி, சந்திரிக்கா, மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு ஆதரவளித்த வேளையில் அதற்கான ஒப்பந்தத்தை நானே தயாரித்தேன். நல்லாட்சியின் காலத்திலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்தனர் என்பதை இன்று மறந்துள்ளனர்.
வன்முறைகளின் மூலம் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ளும் முயற்சியிலேயே ஜே.வி.பியினர் ஈடுபட்டுள்ளனர். மறுமுனையில் சஜித் பிரேமதாச எதைக் கேட்டாலும் கொடுப்பேன் என்கிறார். அவை அனைத்தும் தேர்தல் வாக்குறுதிகள். ஆனால் முடிந்ததை மட்டுமே சொல்ல வேண்டும். சொல்வதை கண்டிப்பாகச் செய்ய வேண்டும் என்ற கொள்கையையே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பின்பற்றுகிறார். எனவே வேடிக்கை பாத்திரங்களை விடுத்து நாட்டுக்கு நல்ல தலைவர்களை தெரிவு செய்ய வேண்டும்”