கல்வி புரட்சி மூலமே மலையகத்தில் நிலையானதொரு மாற்றத்தை ஏற்படுத்தலாம் என தாம் உறுதியாக நம்புவதாகவும் அதனாலேயே, கல்வி அபிவிருத்திக்கு முக்கியத்துவமும், முன்னுரிமையும் வழங்கி வருவதாகவும் இ.தொ.காவின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து நேற்று முன்தினம் (04) பொகவந்தலாவை பகுதியில் இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது இதனை தெரிவித்த அவர்,
கல்விக்காக அமைச்சர் ஜீவன் தொண்டமான் அதிகளவான நிதி ஒதுக்கீடுகளை செய்து வருகின்றார். அதனால்தான் இன்று அனைத்து துறைகளிலும் எமது சமூகத்தினர் பிரகாசித்து வருகின்றனர். பெருந்தோட்டப் பகுதி மக்களுக்கு சமுர்த்தி வழங்கப்படவில்லை. ஆனால் அஸ்வெசும வந்தபோது எமது மக்களும் உள்வாங்கப்படவேண்டும் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் திட்டவட்டமாக எடுத்துரைத்தார்.
இதனையடுத்து எமது மக்களும் உள்வாங்கப்பட்டனர். அதுமட்டுமன்றி காணி உரிமை வழங்குவதற்குரிய ஏற்பாடுகளும் இடம்பெறுகின்றன. தோட்டங்களை கிராமங்களாக்குவதற்குரிய அமைச்சரவைப் பத்திரமும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எமது மலையகத்துக்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்துள்ளார்.
வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகின்றார். எனவேதான் மக்கள் பக்கம் நின்று நாம் அவரை ஆதரிக்கின்றோம். அத்துடன் நடைமுறைக்கு சாத்தியமான விடயங்களையே அவர் உறுதிமொழியாக வழங்கி வருகின்றார்.
தேர்தலில் வாக்குவேட்டை நடத்துவதற்காக பெருந்தோட்ட நிறுவனங்களின் நிபந்தனைகளை ஏற்று ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு நாம் தயாரில்லை.
தொழிலாளர்களின் நலனே எமக்கு முக்கியம். எனவே, 1,700 ரூபாவை நிச்சயம் பெற்றுக்கொடுப்போம். தற்போது அடிப்படை நாள் சம்பளமாக 1,350 ரூபா கிடைக்கப்பெற்றுள்ளது. மேலதிக கொடுப்பனவாக 350 ரூபாவை பெறுவதற்குரிய பேச்சுவார்த்தை இடம்பெறுகின்றது.
இது தேர்தல் காலம் என்பதால், வாக்குகளைப் பெறுவதற்காக கம்பனிகளின் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட முடியாது. அவ்வாறு செய்தால் அது தொழிலாளர்களுக்கே பாதிப்பாக அமையும்.
எனவே, மீண்டும் வரிசை யுகம் ஏற்படாமல் இருப்பதற்காகவும், எமது மக்களின் வாழ்வு மேம்படுவதற்காகவும் செப்டெம்பர் 21 ஆம் திகதி சிந்தித்து வாக்களிக்குமாறு அவர் மேலும் தெரிவித்தார்.