மலையக பெருந்தோட்டப்பகுதிகளை கிராமங்களாக்கும் திட்டம் பற்றி சிலர் போலியான தகவல்களை பரப்பி வருவதாகவும், ஏனைய கிராம மக்கள் தமது உரிமைகளை எவ்வாறு அனுபவிக்கின்றனரோ அதே உரிமைகள் பெருந்தோட்டப்பகுதி மக்களுக்கும் நிச்சயம் கிடைக்கப்பெறும் எனவும் இ.தொ.காவின் உப தலைவரும், பெருந்தோட்ட மனிதவள நிறுவனத்தின் தலைவருமான பாரத் அருள்சாமி தெரிவித்தார்.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து நேற்றுமுன்தினம் (04) புஸ்ஸலாவ மற்றும் நாவலப்பிட்டி ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இதனை தெரிவித்த அவர்,
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்கு வந்தால் ஊழல்வாதிகளைப் பாதுகாப்பார் என்ற கருத்தாடல்தான் கிராம மட்டங்களில் இன்று நிலவுகின்றது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எவரையும் பாதுகாக்கவில்லை. நாட்டையும், நாட்டு மக்களையும்தான் அவர் பாதுகாத்துள்ளார். குறுகிய காலப்பகுதிக்குள் அவர் தலைமையில்தான் ஊழல்களுக்கு எதிராக பல சட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. உரிய சட்ட ஏற்பாடுகள் இருந்தால் எவரும் தப்ப முடியாது. அதற்குரிய வழிகளை ஜனாதிபதி சிறப்பாக செய்துள்ளார். எனவே, ஊழல்வாதிகளை பாதுகாப்பார் எனக் கூறப்படுவது அப்பட்டமான பொய்யாகும்.
புதியவர்களுக்கு வாக்களித்து பரிசீலித்து பார்க்கக்கூடிய தருணம் இதுவல்ல. அவ்வாறு முயற்சித்தால் அது பாதக விளைவுகளை ஏற்படுத்தி மீண்டும் வரிசை யுகம் தோற்றம் பெறலாம். ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் பாராளுமன்றத் தேர்தல், மாகாணசபைத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் என்பன நடைபெறவுள்ளன. அவற்றின்போது மாற்றம் பற்றி பரிசீலித்து பாருங்கள். உங்களுக்கு பிடிக்காத, மக்களுக்கு சேவை செய்யாத அரசியல்வாதிகளை நிராகரியுங்கள். ஆனால் ஜனாதிபதி தேர்தல் என்பது அவ்வாறு அல்ல. அதில் எவ்வித ஒத்திகையையும் பார்க்ககூடாது.
தோட்டங்களின் காணி உரிமை அரசு வசம் உள்ளது. கம்பனிகளுக்கு அது குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தமக்குரிய விடயங்களை செய்வதில் சட்டரீதியான தடைகள் உள்ளன. எனவேதான் தோட்டங்களை கிராமங்களாக்குவதற்குரிய ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன. அவ்வாறு செய்துவிட்டு மக்களுக்கு காணி உரிமையை வழங்கிவிட்டால், தோட்ட நிர்வாகம் தலையிட முடியாது. தமக்குரிய காணியில் மக்கள் எதனையும் செய்யலாம். கிராமத்துக்கென தகனசாலை, மைதானம் என ஏனைய கிராமங்களில் உள்ளவாறு அனைத்தும் உள்ளடங்கும் என அவர் தெரிவித்தார்.
(ஹற்றன் சுழற்சி நிருபர்)