தனிமையிலிருந்து விடுபட்டு நட்புறவின் மூலம் சர்வதேசத்தை கையாளும் நிலைக்கு வந்துள்ள வேளையில் அடிப்படைவாத பரீட்சிப்புகளுக்கு நாட்டை பலியாக்க மாட்டோமென பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். இலங்கை அரசியலில் புதிய பாதையை உருவாக்கும் நோக்கில் ‘வெற்றி பெறும் நாட்டுக்கு துணிச்சலான இணைவு’ என்ற தொனிப்பொருளில், நாட்டின் பரந்துபட்ட அரசியல் கூட்டமைப்பாக பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணியின் ஆரம்ப நிகழ்வு நேற்று (05) பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இப்புதிய பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவராக பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் அதன் செயலாளர் நாயகமாக அமைச்சர் ரமேஷ் பத்திரன ஆகியோர் இணைந்து பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணியின் சின்னமாக ‘வெற்றிக் கிண்ணத்தை’ வெளியிட்டு வைத்ததுடன், கட்சியில் இணைந்த ஏனைய அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டனர். இதன்படி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மை குழுவை பிரதிநிதித்துவப்படுத்திய அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, பொதுஜன ஐக்கிய முன்னணியின் செயலாளர் திஸ்ஸ யாப்பா ஜயவர்தன, ஐக்கிய மக்கள் கட்சி சார்பில் அமைச்சர் டிரான் அலஸ், ஈழமக்கள் ஜனநாயக கட்சி சார்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி சார்பாக சிவநேசதுரை சந்திரகாந்தன், தேசிய காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏ.எல்.எம். அதாஉல்லா, ஐக்கிய மக்கள் கட்சி சார்பில் அரவிந்தகுமார், தேசிய ஐக்கிய முன்னணி சார்பில் அசாத் சாலி, தேசப்பற்றுள்ள ஜனதா பலவேகய சார்பில் சுகத் ஹேவாவிதாரண ஆகியோர் புதிய அரசியல் கூட்டணியுடன் உடன்படிக்கையில் கைச்சாத்திடப்பட்டனர் எனத் தெரிவித்துள்ளார்.