அப்துல் பாக்கீர் மாக்கார் கடந்த 1997 நவம்பர் 07_1998 டிசம்பர் 20 காலப்பகுதியில் இலங்கை பாராளுமன்றத்தில் இன, மத, கட்சி பேதமின்றி மக்கள் பிரதிநிதியாக இருந்தார்.
பேருவளை பிரதேச மருதானையில் 1917 ஆம் ஆண்டு மே மாதம் 12 ஆம் திகதி யூனானி மருத்துவப் பரம்பரையில் ஹக்கீம் அலியார் முஹம்மத் மரிக்கார் மற்றும் ராயிழா உம்மா தம்பதிகளின் புதல்வராக அப்துல் பாகிர் மாகார் பிறந்தார்.
மும்மொழியிலும் தேர்ச்சிபெற்ற அப்துல் பாக்கீர் மாக்கார் பேருவளை மாளிகாஹேன முஸ்லிம் மகாவித்தியாலயம் (ஸேம் ரிபாய் ஹாஜியார் மகாவித்தியாலயம்), கொழும்பு புனித செபஸ்டியன் வித்தியாலயம், ஸாஹிரா கல்லூரி என்பவற்றில் தனது பாடசாலைக் கல்வியை பெற்றுக் கொன்டார்.
பாடசாலைக் காலத்தில் கல்லூரியினால் வெளியிடப்பட்டுவந்த சஞ்சிகையின் ஆசிரியராக, முஸ்லிம் மஜ்லிஸ் தலைவராக, தமிழ் கழகத் தலைவராக இன்னும் பல்வேறு பதவிகளை வகித்து தனது ஆளுமையை வெளிப்படுத்தினார்.
கொழும்பு ஸாஹிராக் கல்லூரியில் ஆசிரியராகக் கடமையாற்றிய இவர்கள் 1940 ஆம் ஆண்டு இலங்கை சட்டக் கல்லூரியில் சேர்ந்து பட்டம்பெற்று களுத்துறை நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக கடமையாட்டினார். மிகக் குறுகிய காலத்தில் களுத்துறை நீதிமன்றத்தில் சிரேஷ்ட குற்றவியல் சட்டத்தரணியானார்.
தன்னை நாடி வந்தவர்களிடம் விசேடமாக வறிய மக்களிடம் கொடுப்பனவுகள் எதையும் எதிர்பாராது உயரிய சேவையாற்றினார். அரசியல் களத்தில் முதன் முதலாக 1947 ஆம் ஆண்டு தனது ஆசான், துவான் புர்கானுடீன் ஜாயா அவர்களின் மத்திய கொழும்பு தேர்தல் பிரசாரங்களுக்கான அமைப்பாளராக பாக்கீர் மாக்கார் தெரிவு செய்யப்பட்டார்.
1950 ஆம் ஆண்டு பேருவளை நகரசபை உறுப்பினராக உள்வாங்கப்பட்டு பின்னர் அதன் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டு சேவையாற்றினார்.
1960 இல் பேருவளையின் முதலாவது பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார். இவர் 1977 இல் பிரதி சபாநாயகராக கடமையாற்றி, பின்பு 1978 முதல் 1983 வரை சபாநாயகராக கடமைபுரிந்தார்.
பாக்கீர் மாக்கார் சபாநாயகராக இருந்த 1980 ஆம் ஆண்டின் ஆரம்பப் பகுதியில் இலங்கையின் பதில் ஜனாதிபதியாக சில நாட்கள் கடமையாற்றினார்.
இவர் 1988 இல் மேல் மாகாணத்தின் முதல் ஆளுனராக கடமையை ஏற்று தொடர்ந்து ஐந்து வருடங்கள் 1993 வரை பதவி வகித்தார். அவர் முஸ்லிம் லீக்கின் தொண்டராகவும் முஸ்லிம் லீக் வாலிப முன்ணணியின் ஸ்தாபகராகவும் பணியாற்றினார்.
பெரும்பான்மை முஸ்லிம்கள் வாழக்கூடிய இடங்களில் முஸ்லிம்களுக்கென்று தனியான அரசியல் கட்சி ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று காத்தான்குடியில் 1980 ஆம் ஆண்டு நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றியுள்ளார்.
பரந்த சேவைமனப்பாங்கினைக் கொண்டிருந்ததால், நாட்டின் அனைத்து இன, மதத்தவர்களின் நன்மதிப்பைப் பெற்றவராக அவர் திகழ்ந்தார்.
பொதுவாக மறைந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுதாபத் தீர்மான அமர்வு பாராளுமன்றத்தில் ஒரு தடவை மாத்திரம் நடைபெறுவது வழக்கம், ஆனால் பேருவளை மண்ணுக்கு பெருமை ஈட்டித்தந்த அப்துல் பாக்கீர் மாக்கார் அவர்களுக்காக அடுத்தடுத்து இரண்டு வருடங்கள் அனுதாபத் தீர்மான அமர்வு நடாத்தப்பட்டமை ஒரு சிறப்பம்சமாகும்.
அப்துல் பாக்கிர் மாக்காரின் நேர்மை, தேசிய மற்றும் சமூகப் பற்று ஆகியவைகளுக்குக் காரணம், அவரிடம் இருந்த ஆத்மீக ஈடுபாடுகள், நல்ல மனிதர்களுடன் இருந்த சகவாசம் என்பனவாகும்.
அவரது வாழ்க்கை, சமூகத் தொண்டு ஆகியன ஏனையோருக்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.
கலாநிதி அஷ்ஷைக்
ஏ. அஸ்வர் அஸாஹீம்…
அல் அஸ்ஹரி