இலங்கையின் தென்னை தொழில்துறையில் ஒரு வரலாற்று மைல்கல்லைக் குறிக்கும் வகையில், இலங்கை தென்னை கைத்தொழில் சம்மேளனத்தின் (The Ceylon Chamber of Coconut Industries – CCCI) அங்குரார்ப்பண நிகழ்வு தென்னை தொழில்துறையின் முக்கிய பிரதிநிதிகளின் பங்குபற்றலுடன் 2024 ஓகஸ்ட் 29ஆம் திகதி கொழும்பில் உள்ள இலங்கை வர்த்தக சம்மேளனம் வெகு விமர்சையாக இடம்பெற்றது.
நிலைபேரான்மை வளர்ச்சி, புத்தாக்கம் மற்றும் உலகளாவிய சந்தையை அடைவதற்கான முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையிலும், தென்னை தொழிற்துறையில் பரந்த வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கிலும் முதல் தடவையாக இந்த ஒருங்கிணைந்த அமைப்பானது இலங்கையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
இலங்கையின் தென்னை தொழிற்துறையின் முன்னேற்றத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட முதல் நிறுவனமான இலங்கை தென்னை கைத்தொழில் சம்மேளனம், இத்தொழிற்துறையின் திறன்களை அதிகமாகப் பயன்படுத்திக் கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
நாட்டின் கைத்தொழில்துறை பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் தென்னை தொழில்துறை, ஆண்டுக்கு 800 மில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருவாயை ஈட்டுகிறது. இதை மேலும் உயர்த்தி, 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருமானத்தை இலக்காகக் கொண்டு இலங்கையின் தென்னை உற்பத்திகளின் தரம் மற்றும் உலகளாவிய போட்டித்தன்மையை மேம்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் BESPA-FOOD திட்டம் மற்றும் Ernst & Young நிறுவனத்தின் திட்டத்துடன் இணைந்து, ஐக்கிய நாடுகளின் தொழில்துறை மேம்பாட்டு அமைப்பு (UNIDO) இந்த இலங்கை தென்னை கைத்தொழில் சம்மேளனத்தை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டு முயற்சி நாட்டின் தென்னை கைத்தொழில் துறையை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்லும்.
‘இலங்கை தென்னை கைத்தொழில் சம்மேளனத்தின் நிறுவுதல் மூலம் இலங்கையின் தென்னை கைத்தொழில் துறைக்கு ஒரு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க முடியும்’ என்று Ernst & Young நிறுவனத்தின் மூத்த பங்காளரும், இலங்கை தென்னை கைத்தொழில் சம்மேளனத்தின் முதலாவது பொதுச் செயலாளருமான ரணில் டி சேரம் கூறினார். ‘தொழிற்துறையை ஒருங்கிணைப்பது, புத்தாக்கத்தை ஊக்குவிப்பது மற்றும் நிலையான வளர்ச்சிக்கு ஆதரவான கொள்கைகளுக்காக ஆதரவளிப்பதே எங்கள் நோக்கமாகும். தென்னை தொழில்துறையின் கூட்டு முயற்சியான இலங்கை தென்னை கைத்தொழில் சம்மேளனத்தின் சிறப்பை நோக்கிய பயணத்தில் அனைத்து தரப்பினரும் எங்களுடன் இணைவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்’ என்று கூறினார்.
இலங்கையின் கிராமப்புற பொருளாதாரத்திற்கு வலு சேர்க்கும் ஒரு முக்கிய காரணியாக பலராலும் அறியப்படும் தென்னை கைத்தொழில், சுமார் 455,000 ஹெக்டேயர் நிலப்பரப்பில் பரவியுள்ளது. இது ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்குகிறது. இலங்கை தென்னை கைத்தொழில் சம்மேளனமானது மூலோபாய திட்டமிடல், சந்தை விரிவாக்கம் மற்றும் ஆராய்ச்சி அடிப்படையிலான கண்டுபிடிப்புகள் மூலம் தென்னை கைத்தொழிலின் போட்டித்தன்மையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும். மேலும், நிலைபேரான்மை நடைமுறைகளை ஊக்குவித்தல் மற்றும் பல்வேறு தயாரிப்புகளுக்கு ஆதரவளிப்பதன் மூலம் இலங்கையை தென்னை உற்பத்தியில் உலகளாவிய முன்னணி நாடாக மாற்றுவதே இந்த சம்மேளனத்தின் நோக்கமாகும்.
இங்கு கருத்து தெரிவித்த UNIDO-வின் சிரேஷ்ட சர்வதேச தொழில்நுட்ப நிபுணர் கலாநிதி ஜெய்ரோ வில்லாமில் டயஸ் கூறியதாவது: ‘இலங்கை தென்னை தொழிலின் திறனை உலகிற்கு கொண்டு செல்லும் விசேட நடவடிக்கையாக இலங்கை தென்னை கைத்தொழில் சம்மேளனத்தை குறிப்பிடலாம். ஐரோப்பிய ஒன்றியத்தால் நிதியளிக்கப்படும் BESPA-FOOD திட்டத்தின் மூலம் இலங்கை தென்னை கைத்தொழில் சம்மேளனத்தை ஆரம்பிக்க உதவியதற்கு நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இதன் மூலம் நாளைய இலங்கையில் தென்னை கைத்தொழிலை ஒரு சிறப்பு துறையாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு, அதனுடன் இணைந்துள்ள அனைத்து பங்குதாரர்களின் வாழ்க்கை மற்றும் பொருளாதார வலிமையை மேம்படுத்த நாங்கள் பணியாற்றுகிறோம்’. என கூறினார்.
தற்போது முக்கிய தொழில் சங்கங்களின் ஆதரவைப் பெற நடவடிக்கை எடுத்துள்ள இலங்கை தென்னை கைத்தொழில் சம்மேளனத்துடன், நாட்டின் தென்னை தொழிலின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் 8 ஆரம்ப உறுப்பினர்கள் இணைந்துள்ளனர். இதில் இலங்கை தென்னை விவசாயிகள் சங்கம், தென்னை சார்ந்த தயாரிப்புகள் ஏற்றுமதியாளர்கள் சங்கம், இலங்கை சுத்தமான தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம், தென்னை தயாரிப்புகள் உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கம், இலங்கை தென்னை நார் உற்பத்தியாளர்கள் சங்கம், இலங்கை தென்னை நார் உற்பத்தியாளர்கள் சங்கம், தேங்காய்ப்பால் உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் அதில் இலங்கை தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் ஆகியவை அடங்கும். இந்த நிறுவனங்கள் அனைத்தும் இலங்கையில் தென்னை பயிர்ச்செய்கையின் நீண்டகால நிலைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கும், அவற்றின் பெறுபேறுகளுக்காக வாதிடுவதற்கும் செயல்படுகின்றன.
மேலும், இலங்கை தென்னை கைத்தொழில் சம்மேளனத்துக்கு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு, தென்னை அபிவிருத்தி அதிகார சபை, தென்னை பயிர்ச்செய்கை சபை மற்றும் தென்னை ஆராய்ச்சி நிறுவனம் அரச துறையின் பல முக்கிய பங்காளர்களினால் ஆதரவளிக்கப்பட்டு, இதன் மூலம் இலங்கையில் தென்னை கைத்தொழிலை அபிவிருத்தி செய்வதற்கு கூட்டு முயற்சியை வெளிப்படுத்த முடிந்துள்ளது.
மேலும், எதிர்காலத்தில், இந்த நாட்டில் உணவுப் பாதுகாப்பிற்காக அர்ப்பணிக்கப்பட்ட அனைத்து தரப்பினரினதும் வாழ்வாதாரத்தை உயர்த்தும் திறன் கொண்ட வலுவான மற்றும் நிலையான தென்னை கைத்தொழிலை உருவாக்க எதிர்பார்க்கும் தென்னை கைத்தொழில் சம்மேளனம், நிலைபேரான்மையான உற்பத்தி முறைகளை ஊக்குவிப்பதிலும், தயாரிப்பு மேம்பாட்டிற்கான புத்தாக்கங்களை வழிநடத்துவதிலும், உலகளவில் புதிய சந்தைகளைக் கண்டறிவதிலும் அர்ப்பணிப்புடன் செயல்படும்.
தென்னை கைத்தொழில் சம்மேளனத்தின் முக்கிய செயற்பாடுகளில் 10 ஆண்டுகால மூலோபாய திட்டத்தை முன்வைத்தல், கூட்டு தேசிய மூலோபாயத்திற்கு பரிந்துரைத்தல் மற்றும் தொழில்துறையின் நீண்டகால வெற்றியை உறுதிப்படுத்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை ஆதரித்தல் ஆகியவை அடங்கும். அத்துடன், உலகளாவிய தென்னை தொழிலில் இலங்கையை முன்னணி நாடாக மாற்றுவதற்காக நிலைபேரான்மை, பெறுமதி சேர்ப்பு மற்றும் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் ஆகியவற்றிலும் தென்னை கைத்தொழில் சம்மேளனம் கவனம் செலுத்துகிறது.