2024 சிறு போகத்தில் சுற்றுச்சூழலுக்கு நட்பான உரப் பாவனை மூலம் பெற்றுக்கொண்ட விளைச்சல் கணக்கெடுப்பு வேலைத்திட்டத்தை உணவுப் பாதுகாப்பு மற்றும் கமத்தொழில் பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழு நேரடியாகப் பார்வையிட்டது.
சுற்றுச்சூழலுக்கு நட்பான உரப் பாவனை மூலம் பெற்றுக்கொண்ட நெல் விளைச்சல் கணக்கெடுப்பு வேலைத்திட்டத்தை பார்வையிடுவதற்கு கடந்த ஆகஸ்ட் 28 ஆம் திகதி உணவுப் பாதுகாப்பு மற்றும் கமத்தொழில் பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழு கம்பஹா (மினுவாங்கொட) பகுதியில் கண்காணிப்பு சுற்றுப்பயணமொன்றை மேற்கொண்டது.
சுற்றுச்சூழலுக்கு நட்பான உரங்களை இந்நாட்டின் விவசாயத்தில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவது குழுவின் நோக்கமாக இருந்ததுடன், அந்த உரங்களை பிரதான நெல் உற்பத்தி செய்யும் பகுதிகளில் பரிசோதிக்க வேண்டும் என குழுவில் தீர்மானிக்கப்பட்டது.
2023/2024 பெரும்போகத்தில் சுற்றுச்சூழலுக்கு நட்பான உரம் பயன்படுத்தி வெலிகந்த மற்றும் தெஹியத்தகண்டிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட முன்மாதிரி பயிர்ச்செய்கையின் வெற்றிகரமான விளைச்சலை கண்காணித்ததன் பின்னர் குழுவின் தலைவர் கௌரவ டீ. வீரசிங்கவின் வழிகாட்டலின் கீழ் 2024 சிறு போகத்தில் ஏழு மாகாணங்கள் மற்றும் பி. சி. மற்றும் எச் ஆகிய மகாவலி வலயங்களில் சுற்றுச்சூழலுக்கு நட்பான உரம் பயன்படுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அதற்கமைய இந்த கண்காணிப்பு சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட்டது.
இலங்கை பாராளுமன்றத்தின் துறைசார் மேற்பார்வைக் குழு அலுவலக அதிகாரிகள் மற்றும் கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு, கமத்தொழில் திணைக்களம், கமநல அபிவிருத்தித் திணைக்களம், ஹெக்டர் கொப்பேகடுவ கமநல ஆராய்ச்சி பயிற்சி நிறுவகம், விவசாய ஆராய்ச்சிக் கொள்கைக்கான சபை, தேசிய உர செலயகம், தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் மற்றும் மேல்மாகாண கமத்தொழில் திணைக்களம் என்பவற்றின் அதிகாரிகள் இந்தக் கண்காணிப்பு சுற்றுப்பயணத்தில் கலந்துகொண்டனர்.
இந்த வேலைத்திட்டத்தின் கீழ் மேல்மாகாண சபையின் வேலைத்திட்டம் மேல்மாகாண கமத்தொழில் திணைக்களத்தின் கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்டதுடன், தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் விளைச்சல் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. வேலைத்திட்டத்தின் முழுமையான ஒருங்கிணைப்பை அடிப்படைக் கற்கைகளுக்கான தேசிய நிறுவகம் மேற்கொண்டிருந்தது.