அமானா வங்கி தனது 30 ஆவது சுய வங்கி நிலையத்தை, மட்டக்களப்பு, புனானை International Campus of Science & Technology (ICST) பல்கலைக்கழக பூங்கா வளாகத்தில் திறந்துள்ளது. இந்நிகழ்வில் வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி மொஹமட் அஸ்மீர், பிரதம இடர் அதிகாரி எம் எம் எஸ் குவிலித், நுகர்வோர் வங்கியியல் மற்றும் சந்தைப்படுத்தல் உப தலைவர் சித்தீக் அக்பர் ஆகியோருடன், பல்கலைக்கழக ஸ்தாபகர் கலாநிதி. எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், தவிசாளர் பொறியியலாளர் எம்.எச்.ஏ. ஹிராஸ், உப வேந்தர் பேராசிரியர் ஜயந்த லால் ரட்னசேகர, பல்கலைக்கழக நிர்வாகம், கல்விசார் ஊழியர்கள், மாணவர்கள், உள்ளுராட்சி அதிகார தரப்பினர் மற்றும் பிராந்தியத்தின் இதர பிரதான பங்காளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களுக்கு சௌகரியமான அணுகலை வழங்கும் வகையில் அமைந்துள்ள இந்த சுய வங்கிச் சேவை நிலையம், 24/7 நேரமும் பண மீளப் பெறுகைகள், பண வைப்புகள் மற்றும் கட்டணப் பட்டியல் கொடுப்பனவுகள் ஆகியவற்றை மேற்கொள்ளும் வசதியை வழங்கும்.
இந்த நிலையத்தின் திறப்பு விழாவின் போது, பல்கலைக்கழகத்துடன் வங்கி புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டிருந்தது. அதனூடாக, மாணவர்களுக்கு வங்கியின் மக்களுக்கு நட்பான மற்றும் சகாயமான நிதி வசதிகளை தமது உயர் கல்வி கற்கைகளை தொடர்வதற்காக கல்விசார் நிதியளிப்பு வசதிகளை வழங்க முன்வந்துள்ளது.
புனானை பகுதிக்கு வங்கியின் சுய வங்கிச் சேவை நிலையத்தை விஸ்தரிப்பு செய்துள்ளமை தொடர்பில் வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி மொஹமட் அஸ்மீர் கருத்துத் தெரிவிக்கையில், “இந்த நவீன வசதிகள் படைத்த பல்கலைக்கழக வளாகத்தில் எமது சுய வங்கிச் சேவை நிலையத்தை நிறுவியுள்ளதையிட்டு பெருமை கொள்கின்றோம். இதனூடாக பல்கலைக்கழக மாணவர்களுக்கும், பிரதேசவாசிகளுக்கும் நிதிச் சேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான சௌகரியமாக வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த பல்கலைக்கழகம் பொலன்னறுவை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களால் அணுகக்கூடிய வகையில் அமைந்துள்ளது.” என்றார்.
மேலும் பிராந்தியத்தில் கல்வியை விஸ்தரிப்பதற்கான வங்கியின் அர்ப்பணிப்பு தொடர்பில் அஸ்மீர் குறிப்பிடுகையில், “மாணவர்கள், ஊழியர்கள் மற்றும் இதர பல்கலைக்கழக தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு அமானா வங்கி பரந்தளவு நிதிசார் தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதற்கு வங்கி எதிர்பார்த்துள்ளது. அதனூடாக ICST இன் நோக்குக்கும் பங்களிப்பு வழங்கக்கூடியதாக இருக்கும்.” என்றார்.
ICST இன் உப வேந்தர் பேராசிரியர். ஜயந்த லால் ரத்னசேகர கருத்துத் தெரிவிக்கையில், “அமானா வங்கியுடன் ஏற்படுத்தியுள்ள பங்காண்மை எமது மாணவர்களுக்கு தமது கல்வியை எவ்விதமான நிதிச் சுமையும் இன்றி தொடர்வதற்கு கைகொடுப்பதாக அமைந்திருக்கும். மக்களுக்கு நட்பான நிதித் தீர்வுகளை வழங்குகின்றதுடன், பல்கலைக்கழக வளாகத்தில் சுய வங்கிச் சேவை நிலையத்தை நிறுவியுள்ளதனூடாக, மாணவர்களுக்கு, பீட அங்கத்தவர்களுக்கு மற்றும் ஊழியர்களுக்கு தமது வங்கிக் கணக்குகளை சௌகரியமாக அணுக முடியும். அதிகளவு தூரம் பயணிக்க வேண்டிய தேவையும் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது.” என்றார்.
இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்கின்றது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. வட்டிசாராத வங்கியியல் மாதிரியை கொண்டுள்ள அமானா வங்கியை, உலகின் உறுதியான 50 இஸ்லாமிய வங்கிகளில் ஒன்றாக தரப்படுத்தப்பட்டிருந்ததுடன், 2023 ஆம் ஆண்டில் 37ஆம் ஸ்தானத்தில் ஏசியன் பாங்கர் தரப்படுத்தி கௌரவித்துள்ளது.
அமானா வங்கி எவ்விதமான துணை அல்லது இணை நிறுவனங்கள் எதனையும் கொண்டிருக்கவில்லை என்பதுடன், அநாதரவான சிறுவர்கள் காப்பக அமைப்பான OrphanCare நம்பிக்கை நிதியத்தின் ஸ்தாபக அனுசரணையாளராக தனது ஈடுபாட்டை பேணி வருகின்றது.