சக்தி கிரவுன் நிகழ்ச்சியில் இறுதிக் கட்டத்திற்கு தெரிவான 6 போட்டியாளர்கள், தமது இசைப் பயணத்தை அடுத்த கட்டத்திற்குச் செல்லும் விதமாக M Entertainments நிறுவனத்துடன் உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டனர்.
நேற்றுமுன்தினம் (05) இரத்மலானை Stein Studios கலையகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
சக்தி தொலைக்காட்சியின் தயாரிப்பில் இளம் பாடகர்களை இனங்கண்டு அவர்களின் திறமைகளை அறிமுகப்படுத்தும் சக்தி கிரவுன் நிகழ்வில், பேராதனைப் பல்கலைக்கழக கலைப்பிரிவு மாணவி செல்வி பிரணவி வெற்றியாளராக தெரிவாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இக்கைச்சாத்திடலில், மஹாராஜா குழுமத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஷெவொன் டேனியல் மற்றும் M Entertainments நிறுவன பணிப்பாளர் பிரட்ரிக் திஸாநாயக்க ஆகியோருக்கும் சக்தி கிரவுன் இறுதிப் போட்டியாளர்களான மட்டக்களப்பு கல்லடியைச் சேர்ந்த பி.சிட்சபேஷன், புத்தளத்தைச் சேர்ந்த ஜி.கே கௌகிகரன், மாத்தளையைச் சேர்ந்த எஸ்.டி. மயூரன், கண்டியைச் சேர்ந்த அட்ஷயா, பருத்தித்துறையைச் சேர்ந்த ஆகாஷ் மதன், கண்டியைச் சேர்ந்த பிரணவி ஆகியோர்களுக்கிடையில் நடைபெற்றது.
இக்கலைஞர்கள் சக்தி குழுமத்தினால் தயாரிக்கப்படுகின்ற உள்ளூர் பாடல்களை உலகிற்கு கொண்டு செல்வார்கள் எனவும் இதனால் எமது கலைஞர்களின் திறமைகள் வெளிக்கொணரப்படும் எனவும் மஹாராஜா குழுமத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ஷெவோன் டேனியல் தெரிவித்தார்.
(படங்கள்: தெஹிவளை – கல்கிஸ்ஸை விசேட நிருபர்)