Wednesday, September 11, 2024
Home » கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சர ஆலய வருடாந்த மகோற்சவம்

கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சர ஆலய வருடாந்த மகோற்சவம்

by Prashahini
September 5, 2024 11:15 am 0 comment

இலங்கையின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாக கருதப்படும் கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரம் ஆலய வருடாந்த மகோற்சவம் நேற்று (04) அதிகாலை ஆயிரக்கணக்கான அடியார்கள் சூழ கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

கல் நந்தி புல்லுண்டு போர்த்துக்கீசரை உதைத்து கல்லாகிய அற்புத திருத்தலமாகவும், தானாக தோற்றம் பெற்ற ஆலயமாகவும், கிழக்கு மாகாணத்தின் தேரோடும் ஆலயம் என்னும் பெருமையினையும் கொண்டதாக கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரம் ஆலயம் திகழ்ந்து வருகின்றது.

ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்த குருக்கள் தலைமையில் இந்த மகோற்சவ கிரியைகள் ஆரம்பமானது.

மூலமூர்த்திக்கு அபிஷேக பூசையுடன் விசேட பூசை இடம்பெற்றதனைத் தொடர்ந்து கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை ஆலயத்தினை சூழ வலம்வந்து கொடிச்சீலைக்கு விசேட பூசைகள் இடம்பெற்றதுடன், வேதபாராயணத்துடன் மேள நாதஸ்வர இசை முழங்க மணியோசைகளின் மத்தியில் பக்தர்களின் அரோகரா ஓசையுடன் கொடியேற்றம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

விவசாயிகள் நிரம்பிய படுவான்கரை மண்ணின் மகத்துவத்துவத்தினை வெளிப்படுத்தும் வகையில் நெற்கதிர்களால் பின்னப்பட்ட கொடிச்சீலை கயிறுகள் கொண்டு கொடியேற்றம் நடைபெற்றமை இந்த ஆலயத்திற்கு மட்டுமே உள்ள சிறப்பாகும்.

இதனையடுத்து தம்பத்துக்கு விசேட அபிஷேகம் இடம்பெற்றதுடன், பூசைகள் இடம்பெற்று சுவாமி உள்வீதி வலம் வரும் நிகழ்வு இடம்பெற்றது.

கிழக்கின் தேரோடும் ஆலயம் என்னும் பெருமையினையும் கொண்ட ஆலயத்தின் தேரோட்டம் எதிர்வரும் செப்டெம்பர் 22ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன், 23ஆம் திகதி தீர்த்தோற்சவம் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ரீ.எல்.ஜவ்பர்கான் – மட்டக்களப்பு குறூப் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x