Wednesday, September 11, 2024
Home » NPP ஆட்சியமைத்தால் முஸ்லிம்களுக்கு ஆபத்து

NPP ஆட்சியமைத்தால் முஸ்லிம்களுக்கு ஆபத்து

- இம்ரான் மஹரூப் MP எச்சரிக்கை

by Rizwan Segu Mohideen
September 5, 2024 8:56 am 0 comment

தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களின் நலன் வெகுவாகப் பாதிக்கப்படுமென திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் தெரிவித்தார்.

கிண்ணியாவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது,

தேசிய மக்கள் சக்தியில் பாராளுமன்ற உறுப்பினராக வரக் கூடிய செல்வாக்குள்ள முஸ்லிம்கள் யாருமில்லை. அவர்கள் கூறுவது போல ஆட்சியமைத்தாலும் அவர்களது அமைச்சரவையில் பொறுப்புள்ள முஸ்லிம்கள் யாருமிருக்க மாட்டார்கள். இதனால் முஸ்லிம்கள் நலன் சார்ந்த விடயங்கள், பண்பாடு, கலாசாரம் சார்ந்த விடயங்களை பேச அங்கு யாரும் இருக்க மாட்டார்கள். இது முஸ்லிம் மக்களுக்கு பாரிய இழப்புகளை ஏற்படுத்தும். ஜனாதிபதி கோட்டாபயவின் அமைச்சரவை மூலம் இதனை நாம் தெளிவாக அறிந்து கொண்டோம். முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்ட போது, கோட்டாபயவின் அமைச்சரவையில் எடுத்துக் கூறி அதனைத் தடுக்கக் கூடியவர்கள் எவருமே இருக்காமை நமக்கு நல்ல உதாரணமாகும்.

இது போன்ற நிலைமையே தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்தாலும் உருவாகும். தேசிய மக்கள் சக்தியிலுள்ளவர்களுக்கு முஸ்லிம் கலாசார பண்பாட்டு விடயங்கள் தெரியாது. இஸ்லாம் சிறுவர்களை திருமணம் செய்யுமாறு வலியுறுத்தவதாக பிமல் ரத்நாயக்க கூறியுள்ளார். இதே போல அக்கட்சியிலுள்ள இன்னும் சிலரும் இஸ்லாம் பற்றிய சரியான புரிதல் இல்லாமல் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

சிலவேளை முஸ்லிம்களை தமது கட்சியில் உள்வாங்கியுள்ளோம் என்று காட்டுவதற்காக முஸ்லிம் பெயர் தாங்கிய சிலரை தேசியப் பட்டியல் ஊடாக அவர்கள் உள்வாங்கலாம். அதுவும் ஆபத்தானது தான். கடந்த காலங்களில் அவர்கள் உள்வாங்கிய முஸம்மில் முஸ்லிம்கள் தொடர்பாக வெளியிட்ட கருத்துக்களை நாம் இன்னும் மறக்கவில்லை.

இவ்வாறான சூழ்நிலையில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்தால் முஸ்லிம்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். இதனைக் கருத்தில் கொண்டு முஸ்லிம்கள் தமது வாக்குகளை அளிக்க வேண்டும். உணர்ச்சி வசப்பட்டு அடுத்தவர் வார்த்தைகளை நம்பி ஏமாந்து விடக் கூடாது. நமது கையால் நமது கண்களை குத்திக் கொள்ளும் சூழ்நிலையை உருவாக்கிட விடக்கூடா தென்றார்.

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x