Wednesday, September 11, 2024
Home » தமிழரசுக் கட்சிக்கும்-சஜித் பிரேமதாசவிற்கும் இடையிலான டீல் என்ன?

தமிழரசுக் கட்சிக்கும்-சஜித் பிரேமதாசவிற்கும் இடையிலான டீல் என்ன?

- மக்களுக்கு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்

by Prashahini
September 5, 2024 10:40 am 0 comment

இலங்கை தமிழரசுக் கட்சிக்கும் – ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையிலான டீல் என்னவென்பதனை தமிழ் மற்றும் சிங்கள மக்களுக்கு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

நேற்று (04) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;

அண்மையில் முல்லைத்தீவில் இடம்பெற்ற ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவினுடைய தேர்தல் பிரசார கூட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியினுடைய முன்னாள் பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்க காரணம் 13பிளஸ் கிடைக்கும் எனத் தெரிவித்திருந்தார்.
கடந்த காலங்களில் 13பிளஸை கேள்விப்பட்டோம். மறுபடியும் தற்போது அதுபற்றி பேசப்படுகிறது. பிளஸ்க்கு எல்லை கிடையாது. அந்த 13பிளஸ் என்பது ஈழமா? அல்லது சமஸ்டித் தீர்வா? என்பதனை தெளிவுபடுத்த வேண்டும்.

அவ்வாறு தமிழ் – சிங்கள மக்களுக்கு தெளிவுபடுத்தும் போதே என்ன நடக்கப்போகின்றது என்பது மக்களுக்கு தெரியும். அது ஈழமாக இருந்தாலோ அல்லது சமஸ்டித் தீர்வாக இருந்தாலோ தமிழனாக நான் அதனை வரவேற்கிறேன்.

13பிளஸ் என்றால் என்ன? என்ன வேலைத்திட்டம் செய்யப்போகிறோம் என்பதனை தெளிவாகக் கூற வேண்டும். 13பிளஸ் என்கின்ற விடயம் சஜித் பிரேமதாசவினுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தில் இல்லை. இந்த 13பிளஸ் விடயத்தை தெளிவாக தெரிவிக்க வேண்டும்.இல்லையேல் மறுபடியும் போலியான வாக்குறுதியைக் கொடுத்து வாக்குகளைப் பெறுவதற்கான உக்தியே என்பதனை மக்கள் உணர்ந்து கொள்வார்கள்.

சஜித் பிரேமதாசவிற்கு இலங்கை தமிழரசுக் கட்சியில் ஒருசிலர் ஆதரவு கொடுக்கிறார்கள். சிலர் தாம் ஆதரவு இல்லை என்கின்றனர். அத்துடன் தற்போது பாராளுமன்றத்தில் மாகாணசபைத் தேர்தல் தொடர்பாக பேசப்படுகிறது. மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களும் கோரிக்கை விடுத்துள்ளார். வடக்கில் நீண்ட காலமாக மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது.

மாகாணசபைத் தேர்தலை நடத்தாமல் இழுத்தடிக்க 2017இல் எல்லை நிர்ணயம் என்ற விடயத்தைக் கொண்டு வந்தனர். அந்தநேரத்தில் வடக்கில் மாகாணசபை இருந்தது.அப்போதைய முதலமைச்சர் விக்கினேஸ்வரன் ஜயாவிற்கு ஆதரவு அலை அடித்துக்கொண்டிருந்தது. அதனால் இலங்கை தமிழரசுக் கட்சி அந்தநேரம் மாகாணசபைத் தேர்தலை தள்ளிவைக்க பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட எல்லை நிர்ணய தீர்மானத்திற்கு கை தூக்கியிருந்தனர் .

அதிகாரப் பகிர்வைத் கேட்டுக்கொண்டிருந்தவர்களே அந்தப் பகிர்வை தரக்கூடிய தேர்தலைப் பிற்போடக் கூறினார்கள் என மேலும் அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.

சாவகச்சேரி விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x