ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பெருந்தொகையான பிரதிநிதிகளின் பங்கேற்புடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஏனைய அரசியல் கட்சிகள் இலங்கை அரசியலில் புதிய திசையை நோக்கிய பரந்த புதிய அரசியல் கூட்டணியின் அறிமுகம் இன்று (05) நடைபெறவுள்ளதாக சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்துக்கு ஏற்ற வகையில் புதிய அரசியல் கூட்டணியை ஆரம்பிக்கும் நோக்கில் இந்த கூட்டணி வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். பத்தரமுல்லையில் நேற்று (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு கருத்து தெரிவித்த ரமேஷ் பத்திரண மேலும் கூறியதாவது,
இலங்கையில் நடுநிலை அரசியல் சித்தாந்தங்களை பிரதிநிதித்துவப் படுத்தும் பல கட்சிகளின் பங்கேற்பினால் உருவாக்கப்பட்ட பரந்த கூட்டமைப்பு இன்று காலை 9.00 மணிக்கு பத்தரமுல்லை வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. தற்போதைய அரசியல் சூழ்நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் பல கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து இந்த கூட்டணியை கட்டியெழுப்புகின்றனர். எதிர்காலத்திற்கு ஏற்ற வகையில் புதிய அரசியல் கூட்டணியை தொடங்குவதே இலக்கு.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையான உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி உறுப்பினர்கள் எதிர்காலத்தில் எடுக்கும் அரசியல் நிலைப்பாடு தொடர்பில் இந்நாட்டு மக்களுக்கு ஒரு சந்தேகம் இருந்தது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் கடந்த காலங்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து செயற்பட்டனர். அவர்கள் இடதுசாரி நடுநிலைவாதிகள். இவர்கள் அனைவரும் எதிர்காலத்தில் அதே நடுநிலையான அரசியல் கருத்தை முன்வைத்து இலங்கை மக்களுக்கு சேவையாற்ற பாடுபடுவார்கள். அதற்கு அரசியல் மேடை தேவைப்பட்டது.
அந்த மேடையை உருவாக்கும் நோக்கில் இந்த பரந்த கூட்டணியை உருவாக்க முடிவு செய்யப்பட்டது. எதிர்வரும் தேர்தல்களில் ஒரே மாதிரியான யோசனைகள் மற்றும் கொள்கைகளுடன் குழுவாக இணைந்து செயற்படுவதே இதன் இலக்கு என்றார்.