காசாவில் உள்ள பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான உடன்படிக்கை ஒன்றை எட்டுவதற்கு உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் அழுத்தங்கள் அதிகரித்தபோதும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது நிலைப்பாட்டில் தொடர்ந்து உறுதியாக உள்ளார்.
நெதன்யாகு அரசுக்கு எதிராக இஸ்ரேலில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருவதோடு நெருங்கிய கூட்டாளியான அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார். காசாவில் இருந்து ஆறு பணயக்கைதிகளின் சடலங்கள் மீட்கப்பட்டதை அடுத்து நெதன்யாகு மீதான எதிர்ப்பு அதிகரித்து வருகிறது.
தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்: கடந்த 5 நாட்களில் காசாவில் 184 பேர் பலி
எனினும் கடந்த திங்கட்கிழமை (02) பேசிய அவர் சமரசம் செய்துகொள்வதற்கான எந்த சமிக்ஞையையும் வெளியிடவில்லை.
எகிப்துடனான காசா எல்லையான பிளடெல்பியா தாழ்வாரத்தை இஸ்ரேல் தொடர்ந்து கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் என்றும் அது எந்த ஒரு போர் நிறுத்த உடன்படிக்கையிலும் அவசியமானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இங்கு இஸ்ரேல் நிலைகொள்வதை எகிப்து மற்றும் ஹமாஸ் தொடர்ந்து நிராகரிப்பதோடு தற்போதைய போர் நிறுத்த பேச்சுவார்த்தையிலும் இந்த விடயம் பெரும் முட்டுக்கட்டையாக உள்ளது.
காசாவை கட்டுப்படுத்தும் ஹமாஸ் அமைப்பு சுரங்கப்பாதைகளை பயன்படுத்தி மீண்டும் ஆயுதங்களை பெறுவதை தடுப்பதற்கு இந்தத் தாழ்வாரம் முக்கியமானது என்று நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.
‘இது ஹமாஸுக்கு பிராணவாயுவாக உள்ளது. பணயக்கைதிகளை விடுவிப்பதில் என்னை விடவும் யாரும் பொறுப்பானவர்கள் அல்ல. இந்த விடயத்தில் யாரும் எனக்கு பாடம் நடத்த வேண்டாம்’ என்று நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளை மாளிகையில் திங்கட்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய பைடன், உடன்படிக்கை ஒன்றை எட்டுவதில் நெதன்யாகு போதுமாக செயற்படவில்லை என்று தெரிவித்தார். இந்நிலையில் அமெரிக்கா போர் நிறுத்தத்திற்கான இறுதி முன்மொழிவு ஒன்றை இந்த வாரத்தில் வழங்கவிருப்பதாக அவர் சூசகமாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பைடனின் நெதன்யாகு மீதான விமர்சனம் உடன்படிக்கை ஒன்றை எட்டுவதில் அவர் முட்டுக்கட்டையாக இருப்பதை அமெரிக்கா ஒப்புக்கொள்வதாக உள்ளது என்று ஹமாஸ் மூத்த அதிகாரியான சமி அபூ சுஹ்ரி தெரிவித்துள்ளார்.
போர் நிறுத்தம் ஒன்றை உறுதி செய்து பலஸ்தீன நிலப்பகுதியில் இருந்து இஸ்ரேல் முழுமையாக வாபஸ் பெறும் முன்மொழிவு ஒன்றுக்கு ஹமாஸ் சாதகமாக பதிலளிக்கும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
உடன்படிக்கை ஒன்றை எட்டுவதற்கு நெதன்யாகு அரசுக்கு அழுத்தம் கொடுத்து இஸ்ரேலில் இரண்டாவது நாளாக கடந்த திங்கட்கிழமையும் பாரிய ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றதோடு அங்கு பொது வேலைநிறுத்தம் ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
காசாவில் போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதற்கு அமெரிக்கா, கட்டார் மற்றும் எகிப்தின் மத்தியஸ்தத்தில் பல மாதங்களாக பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றபோதும் இதுவரை உடன்பாடு ஒன்றை எட்டத் தவறியுள்ளது.
கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது பலஸ்தீன போராளிகள் நடத்திய தாக்குதலின்போது சுமார் 250 பேர் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர். இவர்களில் தொடர்ந்தும் 100க்கும் அதிகமானவர்கள் உயிருடனும் மரணித்த நிலையும் காசாவில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது.
இந்தப் பணயக்கைதிகள் இருக்கும் இடத்தை இஸ்ரேலியப் படை அணுகினால் கையாள வேண்டிய புதிய வழிக்காட்டலை பணயக்கைதிகளின் காவலர்கள் கடந்த ஜூன் மாதம் தொடக்கம் கடைப்பிடித்து வருவதாக ஹமாஸ் ஆயுதப் பிரிவு திங்கட்கிழமை குறிப்பிட்டது.
ரபா நகர சுரங்கப்பாதை ஒன்றில் ஆறு பணயக்கைதிகளின் சடலங்களை இஸ்ரேலியப் படை கடந்த சனிக்கிழமை மீட்டது. அந்தப் பணயக்கைதிகளை படையினர் நெருங்கியபோது அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தை அடுத்தே ஹமாஸ் அமைப்பு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனினும் காவலர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் வழிகாட்டல் பற்றி ஹமாஸ் ஆயுதப் பிரிவு பேச்சாளர் அபூ உபைதா விரிவாக எதுவும் கூறவில்லை. ஆனால் இந்தப் பணயக்கைதிகளின் மரணத்திற்கு இஸ்ரேலே பொறுப்பேற்ற வேண்டும் என்று அந்த அமைப்பு கூறியது.
கடந்த ஜுன் மாதத்தில் பலஸ்தீனர்கள் பலரும் கொல்லப்பட்ட படை நடவடிக்கை ஒன்றின் மூலம் இஸ்ரேலியப் படை நான்கு பணயக்கைதிகளை உயிருடன் மீட்டது. இதற்குப் பின்னரே இந்த புதிய வழிகாட்டல் வழங்கப்பட்டுள்ளது.
‘உடன்படிக்கைக்கு பதிலாக இராணுவ அழுத்தத்தின் மூலம் பணயக்கைதிகளை விடுவிக்க நெதன்யாகு உறுதியாக இருக்கும் நிலையில், பணயக்கைதிகள் அவர்களின் குடும்பங்களுக்கு பிணப்பையில் தான் திருப்பி அனுப்பப்படும். அவர்கள் மரணித்த நிலையிலா அல்லது உயிருடனா தேவை என்பதை குடும்பத்தினர் தேர்வு செய்ய வேண்டும்’ என்று அபூ உபைதா குறிப்பிட்டார்.