காசாவில் இஸ்ரேல் வான் மற்றும் செல் குண்டு தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருவதோடு ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இடம்பெற்றுவரும் முற்றுகை மற்றும் சுற்றிவளைப்புகளில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது.
வடக்கு காசாவின் ஜபலியா அகதி முகாமில் உள்ள மக்கள் அடைக்கலம் பெற்றிருக்கு பாடசாலை ஒன்றுக்கு அருகில் உணவு வாங்குவதற்காக வரிசையில் காத்திருந்தவர்கள் மீது கடந்த திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற இஸ்ரேலிய தாக்குதலில் எட்டுப் பேர் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
பெரும் அழுத்தங்களுக்கு மத்தியிலும் நெதன்யாகுவின் நிலைப்பாட்டில் உறுதி
தெற்கு நகரான கான் யூனிஸில் மக்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் கூடாரம் ஒன்றின் மீது இஸ்ரேல் வீசிய குண்டில் அபூ ஷாப் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தை ஒன்று உட்பட இருவர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமாக வபா தெரிவித்தது.
இஸ்ரேல் போர் விமானங்கள் மத்திய காசாவின் புரைஜ் அகதி முகாம் மீது நேற்றுக் காலை குண்டுகளை வீசியதாகவும் முகாமின் கிழக்கு பகுதியில் இராணுவ வாகனங்கள் சரமாரி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் வபா குறிப்பிட்டது.
கடந்த வியாழன் தொடக்கம் திங்கட்கிழமை வரையான ஐந்து நாட்களில் இஸ்ரேலின் தாக்குதல்களில் காசாவில் 184 பேர் கொல்லப்பட்டு மேலும் 369 பேர் காயமடைந்ததாக ஐ.நா. வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் சிறுவர்கள் என்று அது தெரிவித்துள்ளது.
இதில் நுஸைரத் அகதி முகாமில் உள்ள குடியிருப்பு கட்டடம் ஒன்றின் மேல் மாடியில் இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் மூன்று குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண் ஒருவர் உட்பட இரு பெண்கள் கொல்லப்பட்டதாகவும் அந்த சம்பவத்தில் மொத்தமாக ஒன்பது பேர் பலியானதாகவும் ஐ.நாவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காசா நகரில் உள்ள சப்ரா சுற்றுப்புறத்தில் இஸ்ரேலியப் படை வீடு ஒன்றை இலக்கு வைத்து நடத்திய தாக்குதலில் ஒரே குடும்பத்தின் ஏழு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதையும் ஐ.நா. அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
கான் யூனிஸ் நகரின் தென் பகுதி மற்றும் ரபா நகர் அதேபோன்று மத்திய காசாவின் டெயிர் அல் பலாஹ்வுக்கு அருகே தொடர்ந்து உக்கிர மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. வடக்கில் பெயித் ஹனூன் பகுதியில் இஸ்ரேலிய தரைப்படை நடவடிக்கை ஒன்று இடம்பெற்று வருவதாகவும் ஐ.நா. தெரிவித்துள்ளது.
போருக்கு மத்தியில் காசாவில் போலியோ தடுப்பு மருந்து வழங்கும் நடவடிக்கை மூன்றாவது நாளாக நேற்றும் இடம்பெற்றது. மத்திய காசாவில் இதுவரை சுமார் 158,992 தடுப்பு மருந்துகள் பத்து வயதுக்கு குறைந்த பிள்ளைகளுக்கு வழங்கப்பட்டிருப்பதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு மற்றும் ஐ.நா. நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
மேற்குக் கரையின் ஜெனின் நகரில் ஏழாவது நாளாக இஸ்ரேலின் முற்றுகை நேற்றும் நீடித்ததோடு அங்கு கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. இந்த முற்றுகையால் நகரின் வீதிகள் உட்பட் உட்கட்டமைப்புகள் மற்றும் தனிப்பட்டவர்களின் உடைமைகள் இஸ்ரேலிய படையால் அழிக்கப்பட்டுள்ளன.
இஸ்ரேலியப் படையால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட 58 வயது ஐமன் அபெத் என்பவர் உயிரிழந்துள்ளார். அவரின் உடலில் சித்திரவதைக்கு உட்பட்டதற்கான அடையாளங்கள் இருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஜெனினில் இஸ்ரேலியப் படைகளுடன் தொடர்ந்து சண்டையிட்டு வருவதாக பலஸ்தீன போராட்ட அமைப்பான அல் குத்ஸ் படை தெரிவித்துள்ளது. துப்பாக்கி மற்றும் மேம்படுத்தப்பட்ட ஆயுதங்கள் கொண்டு தாக்குதல் நடத்துவதாகவும் அது கூறியது.
மறுபுறம் துல்கரம் நகரில் மீண்டும் சுற்றிவளைப்பை நடத்தி இருக்கும் இஸ்ரேலியப் படை அங்கு சிறுவன் ஒருவனை சுட்டுக் கொன்றிருப்பதாக வபா செய்தி நிறுவனம் குறிப்பிட்டது. நேற்றுக் காலை தனது தந்தையுடன் பள்ளிவாசலுக்குச் சென்ற 14 வயது முகஹது கனான் என்ற அந்த சிறுவன் தலையில் சுடப்பட்டு கொல்லப்பட்டிருப்பதோடு தந்தையின் வயிற்றில் துப்பாக்கி குண்டு பாய்ந்திருப்பதாகவும் வபா கூறியது.
இஸ்ரேலிய ஸ்னைப்பர் துப்பாக்கிதாரிகளே இந்தத் தாக்குதலை நடத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது.