தற்காலிக இயல்புநிலையை நிரந்தரமாக்க வாய்ப்பளிப்பது மக்களின் பொறுப்பு
– முன்னாள் கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம்
அனுபவங்களைப் பெற்றுக் கொள்வதற்கு இப்போதுதான் ஒத்திகை பார்த்துக் கொண்டிருக்கும் தலைவர்களிடம் நாட்டை ஒப்படைத்தால் நாடு ஒருபோதும் முன்னேற முடியாது என முன்னாள் கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டி யிடும் மூன்று பிரதான வேட்பாளர்களில் நாட்டையும் மக்களையும் பாதுகாக்கக் கூடிய அனுபவமும் திறமையும் உள்ள ஒரே தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மட்டுமே என்றும் அவர் தெரிவித்தார். நாடு நெருக்கடியில் இருந்த போது நாட்டை பொறுப்பேற்கத் துணியாத தலைவர்கள் இம்முறை தேர்தலில் நின்று அனுபவங்களைப் பெற்றுக் கொள்வதற்காக ஒத்திகை பார்க்க முன்வந்துள்ளார்கள் அவர்களால் ஒருபோதும் இந்த நாட்டை ஆள முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
‘இயலும் ஸ்ரீலங்கா’ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் மாபெரும் மக்கள் பேரணிக் கூட்டம் நேற்று சிலாபம் நகரில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் உரையாற்றும் போதே முன்னாள் அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
கூட்டத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர், நாடு தற்காலிகமாக இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. அந்த நிலையை நிரந்தரமாக்க வேண்டிய பொறுப்பு நாட்டு மக்களிடமே உள்ளது.
அதற்காக அனுபவமும், திறமையும் சர்வதேச தொடர்புகளும் உள்ள சிறந்த தலைவரிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டியது மக்களின் பொறுப்பு.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்துள்ள பயணத்தை இடைநிறுத்தாது தொடர்ந்து செல்ல வேண்டிய வாய்ப்பை வழங்குவதும் நாட்டு மக்களின் பொறுப்பாகும்.
மீண்டும் இந்த நாட்டில் வரிசை யுகம் உருவாக இடமளிக்க முடியாது. கல்வித் துறையை முன்னேற்றும் பாரிய திட்டங்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடைமுறைப்படுத்தியுள்ளார் தொடர்ந்தும் அதனை நடைமுறைப்படுத்தப்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
சிலாபத்திலிருந்து லோரன்ஸ் செல்வநாயகம்