Wednesday, September 11, 2024
Home » தமிழரசு கட்சி சஜித்தை ஆதரிப்பது அதன் அத்திவாரத்திற்கே வேட்டு வைக்கும் செயல்

தமிழரசு கட்சி சஜித்தை ஆதரிப்பது அதன் அத்திவாரத்திற்கே வேட்டு வைக்கும் செயல்

by mahesh
September 4, 2024 12:30 pm 0 comment

ஒற்றையாட்சியை முன்வைத்துள்ள சஜித் பிரேமதாசவுக்கு வாக்களிக்குமாறு தமிழரசு கட்சி கோரியுள்ளமையானது, அதன் அத்திவாரத்திற்கே வேட்டு வைக்கும் செயல் என தமிழ் தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் எம்.பியுமான மூத்த சட்டத்தரணி என். சிறிகாந்தா தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

தமிழினத்தின் சுதந்திரத்தையும், சுயநிர்ணய உரிமை வேண்டும் என்ற கோரிக்கையுடன் தமிழ் தேசிய கட்டமைப்பாக நாம் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் அரியநேந்திரனை களமிறக்கியுள்ளோம்.

தென்னிலங்கையின் பிரதான வேட்பாளர்களான ரணில் விக்கிரமசிங்க , சஜித் பிரேமதாச , அநுர குமார திஸநாயக்க மற்றும் நாமல் ராஜபக் ஷ ஆகிய நால்வரும் ஒற்றையாட்சி சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டு அதன் வழி நடப்பவர்கள்.

சஜித் பிரேமதாச ஒற்றையாட்சிக்கு வெளியே சென்று தீர்வு காணுவதாக மூச்சு கூட விடவில்லை. 13ஆம் திருத்தத்தை பற்றி பேசி இருக்கிறார். புதிய அரசியல் யாப்பை ஏற்படுத்தும் வரையில் 13ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக கூறியுள்ளார்.

ஆனால் இணைப்பாட்சி பற்றியோ, ஒற்றையாட்சி பற்றியோ எங்கேயும் குறிப்பிடவில்லை.

இந்நிலையில் தான் தமிழரசு கட்சியினர், அவசரமாக கூடி சஜித் பிரேமதாசவுக்கு வாக்களிப்போம் என கூறியுள்ளனர்.

இதுவரை காலமும் ஒற்றையாட்சிக்குள் இருந்து எம்மை விடுவிக்க வேண்டும் என நாம் தொடர்ந்து அரசியல் ரீதியாக போராடி வருகின்றோம், ஒற்றையாட்சியின் வழி நடக்கும் சஜித் பிரேமதாசாவை ஆதரித்துள்ளார்கள். இவர்களின் நோக்கம் என்ன ?

தந்தை செல்வநாயகம் 1949ஆம் ஆண்டில் எந்த இணைப்பாட்சியை தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வாக முன்வைத்து தமிழரசு கட்சியை ஏற்படுத்தினாரோ அதற்கு எதிராக ஒற்றையாட்சிக்குள் தமிழ் மக்களை திருப்பும் முகமாகவே தமிழரசு கட்சி சஜித் பிரேமதாசவுக்கு வாக்களிக்க கோரியுள்ளனர்.

ஆகவே மக்கள் தமிழரசு கட்சியின் நோக்கத்தை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார்.

யாழ்.விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x