Wednesday, September 11, 2024
Home » அனைத்துலக முத்தமிழ் மாநாட்டில் கதிர்காமத் திருமுருகன் நூல் வெளியீடு

அனைத்துலக முத்தமிழ் மாநாட்டில் கதிர்காமத் திருமுருகன் நூல் வெளியீடு

by mahesh
September 4, 2024 6:00 am 0 comment

‘கதிர்காமத் திருமுருகன்’ நூல் தமிழ்நாடு பழனி அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் வெளியிடப்பட்டது. கௌமார மடாலய திருப்பெருந்திரு குமரகுருபர சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசீக பரமாசாரிய சுவாமிகள், திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் இ.பெ. செந்தில்குமார், உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி, மலேசிய பத்திகேஸ் ஆலய அறங்காவலர் நடராஜன் ஆகியோருக்கு பிரதிகள் வழங்கப்பட்டன. பிரதி வழங்கலில் ​ெடாக்டர் இளங்கோவன், டத்தோ எம். சரவணன், தஞ்சை சசிகுமார், லண்டன் பரம் நந்தா ஆகியோர் பங்கேற்றனர்.

கலைஒளி முத்தையாபிள்ளை அறக்கட்டளையின் மலையகம் 200 சிறப்பு வெளியீடாக பதுளை வ. ஞானபண்டிதன் எழுதிய ‘கதிர்காமத் திருமுருகன்’ என்ற இந்த ஆய்வு நூல் பேராதனை பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி செல்லத்துரை சுதர்சன் அவர்களால் எட்டாவது செம்பதிப்பாக வெளிவந்துள்ளது. ‘கதிர்காம திருமுருகன்’ என்ற ஆய்வு நூல் பழனியில் நடைபெற்ற முத்தமிழ் முருகன் மாநாட்டில் தமிழ்நாடு அறநிலைத்துறை அமைச்சர் டி.கே. சேகர்பாபுவினால் வெளியிடப்பட்டு, ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் வழங்கப்பட்டது.

ஞானபண்டிதனின் ‘கதிர்காமத் திருமுருகன்’ நூலை மறுபதிப்புச் செய்யும் முயற்சியில் இலக்கிய விமர்சகரும் எழுத்தாளருமான பேராசான் மு.நித்தியானந்தன் (லண்டன்) எடுத்த முயற்சி வெற்றியளித்துள்ளது.

பதுளை வ. ஞானபண்டிதன் பதுளை சமத்துவ சங்கத் தலைவராகப் பணியாற்றியவர். சாதிய அடக்குமுறைக்கு எதிரான பிரசாரகராகவும் செயற்பாட்டாளராகவும் மலையகத்தில் இயங்கியவர். சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய உன்னத கருத்தோட்டங்களை மலையக மக்கள் மத்தியில் ஊன்றச் செய்தவர். கதிர்காமத்தின் மீது ஆழ்ந்த பக்தி கொண்டிருந்தவர். பதுளையில் கதிர்காமத் தொண்டர் படையை உருவாக்கியவர். அவர் தமது நீண்டகால ஆராய்ச்சியின் பயனால் ‘கதிர்காமத் திருமுருகன்’ என்ற இந்த அரிய நூலை 84 ஆண்டுகளுக்கு முன்னர் (1940) எழுதியவர்.

இந்நூல் பற்றி கலாநிதி செல்லத்துரை சுதர்சன் குறிப்பிடும்போது, ‘அமரர் வ. ஞானபண்டிதன் எழுதிய இந்நூல் கதிர்காமத் தலத்தின் கடந்த காலத்தையும் சமகாலத்தையும் படம்பிடித்துக் காட்டுகிறது. தலத்தின் தொன்மை வரலாறு, காலனியகால நிலைவரம் அவர் எழுதிய காலச்சூழல் போன்றவற்றை இந்நூல் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது’ என்று கூறுகிறார்.

மலையக சமுதாயத்தின் இலக்கியத்தின் நூல் வெளியீட்டின் ஆத்மீகத்தின் மையமாகத் திகழும் எச்.எச். விக்கிரமசிங்க இந்த ஆண்டில் பவளவிழா காண்கிறார். கலை ஒளி முத்தையாபிள்ளை அறக்கட்டளையின் சார்பில் அவர் வெளியிட்டிருக்கும் நூல்கள் தமிழ் உலகில் தனிமுத்திரை பதித்தவை.

திருவாவடுதுறை ஆதீனம் குருமகா சன்னிதானம் அம்பலவாண தேசீக பரமாசாரிய சுவாமிகள், சிரவை யாதீனம் கௌமார மடாலயம் திருப்பெருந்திரு குமரகுருபர சுவாமிகள், திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் இ.பெ. செந்தில்குமார், உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி, மலேசியா முன்னாள் அமைச்சர் எம். சரவணன் உட்பட மாநாட்டில் கலந்து கொண்ட மகான்களுக்கும் அடியார்களுக்கும் பிரதிகளை எச்.எச். விக்கிரமசிங்க வழங்கி கௌரவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x