Wednesday, September 11, 2024
Home » மலையக கல்வி மேம்பாட்டு அறக்கட்டளை ஏற்பாட்டில் திறன் வகுப்பறை திறப்பு விழா

மலையக கல்வி மேம்பாட்டு அறக்கட்டளை ஏற்பாட்டில் திறன் வகுப்பறை திறப்பு விழா

by mahesh
September 4, 2024 7:00 am 0 comment

மலையக கல்வி மேம்பாட்டு அறக்கட்டளை அனுசரணையில் நாவலப்பிட்டி இந்து மகளிர் கல்லூரியில் எஸ். பி. துரைசாமி ஞாபகார்த்த தொழில் நுட்ப திறன் வகுப்பறை திறந்து வைக்கும் வைபவம் அதிபர் திருமதி ஆர். வனஜா தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஆஸ்திரேலியா சிட்னி நீர்வள கூட்டுத்தாபனத்தின் திட்டமிடல் முகாமையாளர் சுந்தரராஜூ நடராஜா மற்றும் அவரது பாரியார் திருமதி செல்வி சகிதம் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

கௌரவ விருந்தினர்களாக மலையக கல்வி மேம்பாட்டு அறக்கட்டளையின் ஸ்தாபகத் தலைவர் நடேசன் சுந்திரேசன் செயலாளர் எஸ். சிவஞானசுந்தரம், ந. செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மலையக கல்வி மேம்பாட்டு அறக்கட்டளையின் தலைவர் நடேசன் சுந்திரேசன் அவர்கள் மெய்நிகர் காணொளி ஊடாக உரையாற்றும் போது,

மறைந்த எஸ். பி துரைசாமி அவர்கள் நாவலப்பிட்டியைச் சேர்ந்தவர். சாதாரணமாக அவர் அடி மட்டத்தில் இருந்து உயர்ந்து கொழும்பில் இம்பீரியல் டெக்ஸ்டையில் என்ற கம்பனியையும் நடத்தி வந்தார். 1993இல் அவருடைய புதல்வி சிட்னியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். காலமானார் தந்தையின் நினைவாக திறன் வகுப்பறையைத் திறந்து வைத்து மாணவிகளின் பாவனைக்காக கையளித்துள்ளார். அவருக்கும் மற்றும் சுந்தரராஜூ அவர்களுக்கும் எனது உள்ளார்ந்த நன்றிகள் பாராட்டுக்கள்.

இதுவரைக்கும் மலையகத்தில் மூன்று திறன் வகுப்பறைகளை நிர்மாணித்திருக்கின்றோம். பாரதி தமிழ் பாடசாலை, கண்டி வினேகானந்தா தமிழ் வித்தியாலயம், பன்விலை விக்ணேஸ்வரா T.M.V., வத்துகாமம் பாரதி தமிழ் பாடசாலை ஆகிய இடங்களிலும் இந்த திறன் வகுப்புகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இது எங்களுடைய நான்காவது திறன் வகுப்பாகும்.

நான் ஒக்டோபர் மாதம் இலங்கை வரும் போது மேலதிகமாக ஐந்து திறன் வகுப்புக்கள் திறக்கப்படவுள்ளன. இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது மார்ச் மாதம் 2023 ஆகும். பரீட்சார்த்தமாக நாங்கள் சிறிய சிறிய பணிகளை ஆரம்பித்து ஆகஸ்ட் மாதம் 23 முதல் வகுப்பறையினைத் திறந்தோம். அதனைத் தொடர்ந்து ஒரு வருட காலத்தில் பெரும் சாதனையாக 15 இலட்ச ரூபா செலவில் நான்கு திறன் வகுப்பறைகளையும் ரூ. 10 இட்சம் செலவில் ஒரு கணினி பயிற்சி மையத்தையும் இதுவரை திறந்து வைத்துள்ளோம்.

அத்துடன் பாடசாலை மாணவர்கள் மத்தியில் பல்வேறுபட்ட தலைமைத்துவ, முகாமைத்துவ பயிற்சி நெறிகள், மென்திறனை வளர்க்கக் கூடிய பேச்சுப் போட்டி கட்டுரைப் போட்டி என மாணவர்களுடைய

தன்னம்பிக்கையை வளர்க்கக் கூடிய விடயங்கள் மற்றும் கல்வியின் முழுமை பெற வேண்டுமாயின் இந்து சமய அறநெறிகளை வளர்க்கக் கூடிய வகையிலான பல்வேறு வகையிலான ஊக்குவிப்பு முயற்சிகளையும் தொடர்ந்து மேற் கொண்டு வருகின்றோம்.

எங்களது நோக்கம் அரசாங்கம் பாடசாலைகளுக்கு நிறைய உதவிகளைச் செய்தாலும் எல்லா உதவிகளையும் செய்ய முடியாது. ஆனால் பல ஆண்டுகள் யோசித்து எங்களால் பிள்ளைகளுக்கு எவ்வாறு உதவிக் கரங்களை நீட்டலாம் என்ற வகையில் கல்வி தொடர்பான பல்வேறு வேலைத் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம்.

அத்துடன் இங்கு ஒக்டோபர் மாதத்தில் திருவள்ளுவர் சிலை ஒன்றையும் நிர்மாணிக்கவுள்ளோம். டிஜிட்டல் இணைய வகுப்பறை கற்கை நிலையத்தில் ‘தகவல் தொழில் நுட்பம்’ என்ற பாடம் மாணவர் மாணவிகளுக்குப் போதிக்கப்படுகின்றன. மாணவர்கள் ஆறாம் ஆண்டில் இருந்தே இதற்குத் தயாராக படிப்படியாகக் கற்றுச் செல்ல வேண்டும்.

எண்மான திறன் வகுப்பறை ஒன்றினை நூற்றாண்டு விழா காணும் இந்தப் பாடசாலைக்கு முதல் தடவையாக வழங்கப்படுகிறது எனும் போது எனக்கு ஆச்சரியமாக இருக்கின்றது. மலையகத்திற்கு இன்னும் எவ்வளவோ வேலைகளைச் செய்ய வேண்டும் என்பதைக் இது எடுத்துக் காட்டுகிறது.

மேலும் கல்விக்கண் என்ற புலமைப் பரிசில் திட்டத்தை நாங்கள் விரைவில் அறிமுகப்படுத்துகின்றோம். இதற்கு திருச்சி, தமிழ்நாடு, சிறந்த சில கல்லூரிகள்; இந்த வருடம் கணினி தொழில் நுட்பத் துறையில் கல்வி கற்பதற்காக 5 மாணவர்களுக்கும் டீ.யு. தமிழ் கற்பதற்கு 10 மாணவர்களுக்கும் எங்களுக்கு விண்ணப்பித்துள்ளார்கள். இப்பாடசாலையில் A/L கல்வியினை படித்த மாணவிகள் விண்ணப்பம் செய்யலாம்.

மேலும் சுந்தரராஜூ குடும்பத்தினர்களுக்கு நான் நன்றியைத் தெரிவித்துக் கொண்டு விடைபெறுகின்றேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

அதிபர்ஆர். வனஜா உரையாற்றும் போது,

இந்த நாள் கதிரேசன் இந்து மகளிர் கல்லூரியின் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒரு நன்நாள். வளர்ந்து வருகின்ற தொழில் நுட்ப உலகிற்கு தயாராக வேண்டிய நமது குழந்தைகள் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி கற்க வேண்டிய சந்தர்ப்பத்தில் நாங்கள் அதற்கான வாப்புக்களை மிகக் குறைந்தளவிலே பெற்றிருந்தோம். அந்த வளங்களைப் பெற்றுக் கொள்வதற்காக மிக நீண்ட நாட்களாகவே காத்திருந்தோம். ஆனாலும் எங்களுக்கு அந்த உதவிகள் கிடைக்காத சந்தர்ப்பத்தில் தெய்வாதீனமாக மலையக மேம்பாட்டு அறக்கட்ளை குழுவினருடன் இணைந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிட்டியது.

இந்த அமைப்பின் செயலாளர் கண்டி விவேகானந்தா தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபர் எஸ். சிவஞானசுந்தரம் எனக்கு அறியத் தந்தார். இந்த அமைப்பின் பல செயற்பாடுகளை எனக்கு அறியத் தந்தார்.

அந்த தொடர்பினை வைத்துக் கொண்டு எனது பாடசாலைக்கும் திறன் வகுப்பறை கற்கை நிலையத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற விண்ணப்பத்தை முன் வைத்தேன். அந்த விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்டதற்கு இணங்க எனது பாடசாலைக்கும் திறன் வகுப்பறை தருவதாக வாக்களித்த எஸ். பி. துரைசாமிப் பிள்ளையின் குடும்பத்தார்களின் பிள்ளைகளுக்கு நன்றியோடு வணங்குகின்றேன்.

எங்களது ஐயாவின் ஞாபகார்த்தமாக இந்த பாடசாலையின் ஒரு திறன் வகுப்பறையினை அமைத்துத் தருகிறோம் என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் அவுஸ்திரேலியாவில் சிட்னியில் ஒரு பொறுப்பு வாய்ந்த பதவி வகிக்கின்றவர்கள். அவர்கள் இந்த இடத்தில் நேரத்தை ஒதுக்கி வந்து கலந்து கொள்வது சிரமமான காரியம். இந்தச் சந்தர்ப்பத்தில் இதனைத் திறந்து வைப்பதற்காக கலந்து கொண்டமை அவர்களுடைய பெருந் தன்மையைக் குறிக்கின்றது.

துரைசாமி ஐயா அவர்கள் நாவலப்பிட்டியில் முருகன் ஸ்டோர் என்ற நிறுவனத்தை நடத்தி வந்து 1983 இல் ஏற்பட்ட ஜுலைக் கலவரத்தின் காரணமாக இந்த நாவலப்பிட்டி நகரை விட்டு செல்ல வேண்டிய ஒரு துர்ப்பாக்கியமான நிலை ஏற்பட்டது. அப்பொழுது அவர் இடம்பெயர்ந்து இந்தியாவுக்கு சென்று அங்கு பல தொழில்களைச் செய்தவர். அவர் குழந்தைகளை எவ்வாறு எந்தளவு அழகாக சிறப்பாக வளர்த்துள்ளார் என்று எண்ணும் போது அவருடைய பெருமை இந்த இடத்திலே தோன்றுகின்றது. இப்பாடசாலை பற்றி துரைசாமி சகோதரிகள் மூவரும் நேரில்வந்து மிக மகிழ்ச்சியாக விசாரித்தார்கள். அவர்கள் பிள்ளைகள் இங்கு வந்திருக்கிறார்கள். அந்தப் பிள்ளைகள் மருத்துவர்களாகவும் நல்ல வேலைகளில் சிறப்பாக வளர்த்திருக்கிறார்கள் இன்று திறன் வகுப்பறைக்கு தேவையானவைகளையும் வழங்கியுள்ளார்கள்.

பொன்னான நேரத்தை ஒதுக்கி இங்கு வந்து இந்த நிகழ்வை சிறப்பித்து இருப்பது மிகவும் மகிழ்ச்சி தரும் விடயமாகும். துரைசாமி ஐயா அவரது பெயர் இந்த பாடசாலையின் ஓர் இடத்தில் பொறிக்கப்படுவதையிட்டு நான் மிகப் பெரும் பாக்கியமாகக் கருதுகின்றேன். நல்ல குழந்தைகளை வளர்த்துத் தந்துள்ளார்கள். தங்களுக்கு பயன்கிடைக்க வேண்டும் என்பதற்காக அல்லாமல் மற்றவர்களுக்காக செய்யும் பணி மகத்தானதாகும்.

எமது பாடசாலை கடந்த தமிழ் மொழி தினப் போட்டியில் 25 நிகழ்வுகளில் 19 போட்டிகளில் பிள்ளைகள் பங்கேற்றனர். அதில் 14 முதலிடத்தைப் பெற்றுக் கொண்டார் என்பதை பெருமையுடன் அறியத் தருகின்றேன். மாகாண மட்டத்தில் பங்குபற்றத் தயாராக இருக்கின்றோம். சமூக விஞ்ஞானப் போட்டியில் கம்பளை வலயத்தில் தெரிவு செய்யப்பட்ட ஒரே ஒரு மாணவி என்பதையும் அன்புடன் அறியத் தருகின்றோம். ஓட்டப் போட்டியிலும் ஒரு மாணவி தேசிய மட்டத்தில் பங்கேற்பதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளார். காராட்டிப் போட்டியிலும் தேசிய மட்டப் போட்டிக்கு மாணவி ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினர் பாதுகாப்பான ஒரு பாடசாலையினை வழி நடாத்தி செல்லுகின்றோம் என்ற மதிப்புச் சான்றிதழைத் தந்துள்ளார்கள்.

பாடசாலையில் ஆசிரியர் இல்லாத நேரத்தில் பிள்ளைகள் படிப்பதற்கான ஒரு செயற்பாட்டை மலையக கல்வி மேம்பாட்டு அறைக்கட்டளை செய்து வருகின்றது. பாடசாலையில் ஒரு கல்வி மாற்றத்தைக் கொணடு தந்தமைக்காக மீண்டும் மீண்டும் பாடசாலை சமூகம் அவர்களுக்கான மிகுந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

கண்டி விவேகானாந்த தமிழ் மகா வித்தியால அதிபர் மலையக கல்வி மேம்பாட்டு அறக்கட்டளையின் செயலாளர் திரு எஸ். சிவஞானசுந்திரம் உரையாற்றும் போது,

உலகளவில் நாங்கள் செயற்கை நுண்ணறிவு பற்றிப் பேசிக் கொண்டு இருக்கின்றோம். ஆனால் எங்களுடைய இலங்கைக் கல்வி கரும்பலகையிலும் வெண்கட்டியால் கற்றல் கற்பித்தல் என்ற வகையில்தான் நாங்கள் இன்னும் இருந்து கொண்டிருக்கின்றோம். உலகம் வேகமாக மாறிக் கொண்டிருக்கிறது. 72 மணித்தியாலத்திலே எமது தொழில் நுட்ப அறிவு மாறிக் கொண்டு வருகிறது. ஆனால் இன்றைக்கு உள்ள அறிவை இன்னும் மூன்று நாளைக்குப் பின் பயன்படுத்த முடியாத கால கட்டத்தில் அறிவு வளர்ச்சி பெறுகின்ற பிரவாகம் எடுத்து ஓடுகின்ற இந்த கால கட்டத்தில் நாங்கள் மிக வேகமாக முன்னேறிச் செல்ல வேண்டிய ஒரு முக்கியமான கடப்பாட்டிலே சமூகம் இருந்து கொண்டு இருக்கின்றது.

இந்தப் பாடசாலைக்கு நாங்கள் வழங்கும் நவீன தொழில் நுட்ப சாதனைத்தை பெரும் கொடையாகவே கருகிறோம். நூற்றாண்டு விழாக் கண்டுள்ள இந்தப் பாடசாலைக்கு மிகச் சிறந்த சாதனம் எதிர்கால இலங்கைக்காக ஏ. ஐ. தொழில் நுட்பத்துடன் இணைக்கக் கூடிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ள சுந்தரராஜூ அவரது ஏக குடும்பத்தினர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

குறிப்பாக உதவிகளைச் செய்யும் போது எந்தப் பாடசாலைகளுக்கு இவ்வாறான உதவிகளைச் செய்யலாம் என்று தேடிப்பார்த்த சமயத்தில் அவுஸ்திரேலியாவில் இருந்து இப்பாடசாலையின் தகவல்களை அனுப்பி வைக்குமாறு கூறினார்கள். ஆகவே இந்தப் பாடசாலையை தேடிப் பார்த்த போது ஆசிரியர் அதிபர் கல்வி அதிகாரிகளிடம் கதைத்த போது இந்தப் பாடசாலை சிறந்து இயங்குவதாகவும். கொடுக்கப்பட்ட சாதனம் சிறப்பாகப் பயன்படுத்தக் கூடிய வல்லமையுள்ள அதிபர் இருக்கிறார் என்று கேள்வியுற்றேன்.

உண்மையில் இங்கு வந்த போது சுற்றுச் சூழல் மிகவும் சுத்தமாகவும் மாணவிகள் மிக நேர்த்தியாகவும் மாணவிகள் மிக அமைதியாக இருப்பதைக் கண்டு பெரு மகிழ்ச்சியடைகிறேன்.

மலையகக் கல்வி மேம்பாட்டு அறக்கட்டளை கிட்டதட்ட ஒரு வருடமாக இயங்கி வருகின்றது. இந்த ஒரு வருடத்தில் நான்கு திறன் வகுப்பறையினை அமைத்து இருக்கின்றோம். குறிப்பாக 21 ஆம் நூற்றாண்டில் கல்வியைக் கடந்து விட்ட நிலையில் 24 வருடங்கள் ஆகி விட்டன. உங்களிடம் ஆசிரியர்கள் வெளிப்படுத்த வேண்டிய 4 திறன்கள் இருக்கின்றன. இவற்றை ஏற்படுத்துவது என்றால் நல்ல நவீன தொழில் நுட்ப சாதனங்கள் எமக்கு என்றும் அவசியம். மலையகக் கல்வி மேம்பாட்டு அறக்கட்டளையின் அனுசரணையில் சுந்தரராஜூ அவர்களின் பெரும் பங்களிப்போடு உங்களுக்குக் கிடைக்கப் பெற்றுள்ளன. அதில் நீங்கள் கேள்விகளை கேட்டால் அடுத்த கணம் அதற்கான விடைகள் கிடைக்கும். தகவல்களை தேடிக் கொள்ளலாம். உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் பென்ட்ரை ஊடாக நீங்கள் ஆசிரியர் இல்லாத சந்தர்ப்பங்களிலும் படிக்கலாம். உங்களுக்கு விருப்பமான பாடங்களைப் படிக்கக் கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன. எண்ணிய எழுத்தறிவு என்று சொல்வார்கள். எண்ணிய எழுத்தறிவு உலகத்திலே மிக வேகமாகச் சென்று கொண்டிருக்கின்றோம். ஆகவே எண்ணிய எழுத்தறிவை போதிக்கக் கூடிய வாய்ப்பு இந்த தொழில் நுட்பத்தின் ஊடாக உங்களுக்கு கிடைக்கப் பெற்றுள்ளன.

எமது அறக்கட்டளையின் நோக்கம் அறம் சார் கல்வியை வழங்குவதுதான் நாங்கள் சுமார் 30க்கும் மேற்பட்ட அறம் தொடர்பான கருத்தரங்குகளை நடத்தியிருக்கின்றோம். குறிப்பாக சுந்திரேசன் நடேசன் ஐயா இந்திய ஸ்ரீமான் நாராயன் அறக்கட்டளை ஆன்மீக நிறுவனத்துடன் சேர்ந்து பிள்ளைகளுக்கு உணவு வழங்களுடன் இரண்டு நாள் தொடர்ச்சியான சனாதன தர்ம, ஆன்மீக முகாம்கள், கருத்தரங்குகள் நடத்தியுள்ளோம். 10 மாணவர்களுக்கு இந்தியாவில் கல்வி கற்பதற்கு புலமைப் பரிசில் ஒன்றை வழங்க இருக்கிறோம். கணித விஞ்ஞானத் துறையில் தகவல் தொழில் நுட்பத் துறை மிக முதன்மையானது. கணிதம், விஞ்ஞானம், தமிழ், ஆங்கிலம் போன்ற முக்கியமான பாடங்களை கருத்திற் கொண்டு தொழில் நுட்ப ரீதியான முறையில் பாடங்களை நடத்திக் கொண்டு செல்கிறோம். அதிலும் உங்களுக்கான பலனைப் பெற்றுக் கொள்ளலாம். ஐந்தாம் ஆண்டு தரப் புலமைப் பரிசுக்கான பயிற்சி வகுப்புகளையும் மாதிரிப் பரீட்சைகளையும் வழங்கிக் கொண்டிருக்கிறோம் ஆது மட்டுமல்ல அ;ண்மைக்காலமாக க. பொ. த சாதாரண தர மாணவர்களுக்கான விசேட பயிற்சி வகுப்புக்களை நடத்தி வருகின்றோம் என்று தொண்டு பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன என்று அவர் மேலும் தெரிவித்தார்.

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x