Monday, October 7, 2024
Home » ஜனநாயகத்தை வலுப்படுத்த வகை செய்யும் தேர்தல்

ஜனநாயகத்தை வலுப்படுத்த வகை செய்யும் தேர்தல்

by mahesh
September 4, 2024 6:00 am 0 comment

நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவிருக்கும் சூழலில், தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பமாகிறது. இத்தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு 7 இலட்சத்து 12 ஆயிரத்து 321 பேர் தகுதி பெற்றுள்ளனர். அவர்கள் இன்று (4 ஆம் திகதி) அல்லது நாளை (5 ஆம் திகதி) அல்லது மறுநாள் (06 ஆம் திகதி) வாக்களிக்கலாம். அத்தினங்களில் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்யக் கிடைக்கப் பெறாதவர்கள் எதிர்வரும் 11 ஆம், 12 ஆம் திகதிகளில் வாக்களிக்கவும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த வாக்களிப்பின் நிமித்தம் தெரிவு செய்யப்பட்டுள்ள அனைத்து நிறுவனங்களிலும் தபால் மூல வாக்குகளைப் பதிவு செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதற்கு தேவையான அறிவுறுத்தல்களும் வழிகாட்டல்களும் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.

பொதுவாக தபால்மூல வாக்களிப்புக்கு எல்லோருக்கும் இடமளிக்கப்படுவதில்லை. அரச ஊழியர்களே இதற்கான தகுதியைப் பெற்றவர்களாக விளங்குகின்றனர். குறிப்பாக தேர்தலுக்கான பாதுகாப்பு கடமைகள் ஈடுபடும் பொலிஸார உள்ளிட்ட முப்படையினர், பொது மற்றும் விஷேட போக்குவரத்து சேவைகளில் பணிபுரிபவர்கள், தேர்தலுக்கான வாக்களிப்பு தினத்தில் வாக்களிப்பு நிலையங்களிலும் வாக்கு எண்ணும் நிலையங்களிலும் கடமையாற்றுபவர்கள் போன்றோர்தான் தபால் மூல வாக்களிப்புக்கு தகுதி பெறுகின்றனர்.

இவர்கள், தாங்கள் கடமையாற்றும் நிறுவனத் தலைவர்கள் ஊடாக விண்ணப்பித்து தபால் மூல வாக்களிப்புக்கான உரிமையைப் பெற்றுக் கொள்கின்றனர். அவர்கள்தான் இன்று முதல் அடுத்துவரும் இரு நாட்களிலும் அல்லது அடுத்த வாரம் இரண்டு நாட்களிலும் தபால் மூலம் தங்கள் வாக்கைப் பதிவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டு இருக்கின்றனர். இவர்கள் மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள், பொலிஸ் நிலையங்கள், மாவட்ட மட்ட தேர்தல் அலுவலகங்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்களில் இன்று முதல் தபால் மூல வாக்கு பதிவு செய்ய முடியும்.

இதேவேளை அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்கும் பெறுமதியானதாகவும் செல்லுபடியற்றதாகவும் விளங்க வேண்டும் என்பதையும் நிராகரிக்கப்படும் வாக்குகளின் எண்ணிக்கையைக் குறைத்து தவிர்க்கும் நோக்கிலும் விஷேட செய்தியாளர் மாநாடொன்றை தேர்தல்கள் ஆணைக்குழு நேற்றுமுன்தினம் கொழும்பில் நடாத்தியுள்ளது. குறிப்பாக வாக்களிக்கும் முறைமை குறித்து வாக்காளர்களுக்கு தெளிவுபடுத்துவதை இலக்காகக் கொண்ட இச்செய்தியாளர் மாநாட்டில் தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் ஆர்.எம்.எல் ரத்நாயக்க இது தொடர்பில் தெளிவுபடுத்தி உள்ளார்.

ஜனநாயக பாரம்பரியத்தில் வாக்களிக்கும் உரிமை மிகவும் பெறுமதி வாய்ந்தது. மக்களின் ஆணையை உறுதிப்படுத்துவதுதான் தேர்தல். அதனால் அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்கினதும் பெறுமதி பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும். இதில் தேர்தல்கள் ஆணைக்கழு உறுதியாக உள்ளது என்பதற்கு இச்செய்தியாளர் மாநாடு நல்ல எடுத்துக்காட்டாகும்.

அந்த வகையில்தான் தேர்தலில் வாக்களிப்பது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு மக்களுக்கு தெளிவுபடுத்தி இருக்கிறது. தபால் மூல வாக்களிப்பு ஆரம்பமாக முன்னர் இந்த தெளிவூட்டல் முன்னெடுக்கப்பட்டு இருக்கிறது. இதனை வாக்காளர்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர்.

தேர்தலை அமைதியாகவும் நீதியாவும் சுதந்திரமாகவும் நடாத்துவதில் தேர்தல்கள் ஆணைக்குழு உச்சபட்ச கவனம் செலுத்தியுள்ளது. அதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் அந்த ஆணைக்குழு முன்னெடுத்திருக்கிறது. இதன் நிமித்தம் வாக்காளர்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும். அது நாட்டின் தேர்தல் ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாத்து மேம்படுத்துவதற்கு அளிக்கப்படும் பாரிய பங்களிப்பாகவே அமையும்.

அதேநேரம் ஜனாதிபதி தேர்தல் களம் சூடுபிடித்துள்ள தற்போதைய சூழலில் கடந்த காலங்களைப் போன்று வன்முறைகள் கலவரங்களும் அற்ற நிலைமையும் நிலவி வருகிறது. அதுவே அனைத்து தரப்பினரதும் எதிர்பார்ப்பாக உள்ளது. வாக்காளர்களின் முழுமையான ஒத்துழைப்பு கிடைக்கப்பெறும் போது தேர்தல் வன்முறைகள் இடம்பெற வாய்ப்பு இராது என்பதே சுயாதீன தேர்தல் கண்காணிப்புக்குழுக்களின் கருத்தாகும்.

ஆகவே நாட்டின் ஜனநாயக விழுமியத்தின் முக்கிய தூணாக விளங்கும் தேர்தல் முறையை வலுப்படுத்தி மேம்படுத்தவென ஒத்துழைப்பு நல்க வேண்டும். அது ஒவ்வொரு வாக்காளரினதும் பொறுப்பாகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x