நிலைபேறான உற்பத்திக்கான மற்றொரு நடவடிக்கையாக இலங்கை தேசிய தூய உற்பத்திகள் மத்திய நிலையம் ஜேர்மனியின் அபிவிருத்தி நிறுவனமான ஜி.ரி.இஸட்டுடன் இணைந்து எகோ லேபல் (Eco Label) தொடர்பிலான உயர்மட்ட புத்திஜீவிகள் உரையாடலொன்றை கொழும்பில் நடாத்தியுள்ளது.
‘எகோ லேபடல்: சிறப்புமிகு பரி மாற்றத்திற்கு தொடர்பு கொள்ளுங்கள்’ என்ற தொனிப்பொருளில் கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் நடைபெற்ற இந்த புத்திஜீவிகள் கலந்துரையாடலில் தேயிலை உற்பத்தி, பால் உற்பத்தி, நிர்மாணத்துறை சார்ந்த இரசாயனப் பொருட்கள் மற்றும் தைத்த ஆடைகள் உள்ளிட்ட பல்துறைகளைச் சேர்ந்த உயர்மட்ட வர்த்தகத் தலைவர்கள் பங்குபற்றினர்.
சுற்றுச்சூழல் செயலணி செயற்பாடுகளை சுயாதீனமாக அத்தாட்சிப்படுத்தும் முறைமையான Eco Label, சூழல் நேயப் பாவனைகளைப் பின்பற்றும் நோக்குடன் வர்த்தகத்திற்குரிய முக்கிய மூலோபாயமாக உலகளாவிய ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.இலங்கையில் கைத்தொழில்களுக்கும் Eco Label அத்தாட்சிப்படுத்தலின் பிரதிபலன்களைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் நிலைபேறானதும் பொறுப்புமிக்க உற்பத்தி முறைகளைப் பின்பற்றப்படுவதன் முக்கியத்துவத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்படுவதை நோக்காகக் கொண்டு இப்புத்திஜீவிகள் உரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமரின் செயலாளர் அநுர திஸாநாயக்க, வர்த்தகப் பயன்பாடுகளுக்கு எகோ லேபல் அத்தாட்சிப்படுத்தலை ஒருங்கிணைப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டினார். அத்தோடு ஜப்பான் நாட்டின் சுற்றுச்சூழல் சங்கத்தின் பிரதி முகாமையாளர் ஹிரோயூகி கொபயாசி, இந்த அமர்வில் எகோ லேபலில் GEN அங்கத்துவத்தின் பெறுமதி – நம்பிக்கையைக் கட்டியெழுப்புதல் மற்றும் உலகளாவிய பிரவேசம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.